64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 4
கோடிகா தலத்தின் தலைவனாக
காலனைக் காலால் செற்று அன்று அருள் புரி
கருணையானே
நீலமார் கண்டத்தானே நீள் முடி அமரர் கோவே
ஞாலமாம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா உடைய கோவே
விளக்கம்
ஞாலமாம் பெருமை = உலகங்கள் அனைத்தையும் தனது மாயாசக்தியால்
தோற்றுவித்து, தான் அதனைக் கடந்து நிற்கும் நிலை; ஞாலமாம் பெருமை என்பதற்கு, அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் உலகெங்கும் நிறைந்த தன்மை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. செற்று = உதைத்து.
Advertisement
பொழிப்புரை
உன்னை வழிபட்ட சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் வண்ணம், அவனது உயிரினைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து அருள் புரிந்த கருணை உள்ளம் கொண்டவனே, பாற்கடலிலிருந்த எழுந்த விடத்தை உண்டதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனே, நீண்ட கிரீடங்களை அணிந்த தேவர்களின் தலைவனே, உலகங்கள் அனைத்தையும் தனது சக்தியால் தோற்றுவித்து அந்த உலகத்தைக் கடந்து நிற்பவனே, அழகிய இளம் பிறைச் சந்திரனைத் தனது அழகான சடையில் சூடியவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.