முகப்பு
தினம் ஒரு தேவாரம்

64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 5

வேதங்களே உலகத்தில் முதல் நூல்கள்

Updated On : 1 ஜூலை, 2017 at 11:27 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:12 PM

பூண் அரவு ஆரத்தானே புலியுரி அரையினானே
காணில் வெண் கோவணமும் கையிலோர் கபாலம் ஏந்தி
ஊணும் ஓர் பிச்சையானே உமை ஒரு பாகத்தானே
கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே

விளக்கம்

பூணுதல் = அணிகலனாக அணிதல். ஆரம் = மாலை. அரை = இடுப்பு. கோணல் =
வளைந்த. வெண்மை என்பதற்கு தூய்மை என்று பொருள் கொண்டு, காணில் வெண் கோவணம் என்ற தொடருக்கு, உற்று நோக்கில் இறைவன் அணிந்திருப்பது நான்கு மறைகளைக் கொண்ட கோவணம் என்பது புலப்படும் என்பதாக விளக்கம் கூறுவார்கள். இந்த செய்தி மணிவாசகரின் திருச்சாழல் பதிகத்திலும் காணப்படுகின்றது. கிழிக்கப்பட்ட துணியினைத் தைத்து கோவணமாக இறைவன் கட்டிக் கொள்வது ஏன் என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு விடையாக அவளது தோழி நான்கு மறைகள் இறைவனது கோவணமாக இருப்பதாக கூறி, இறைவனது கோவணத்தின் பெருமையை
உணர்த்துகின்றாள்.

Advertisement

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பேய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான் காண் சாழலோ

வேதங்களே உலகத்தில் எழுந்த முதல் நூல்கள் என்றும், அந்த வேதங்களின்
கருத்துகள் பல நூல்களிலும் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். இந்த செய்தியைத்தான், நான்கு மறைகளின் பொருள், பல நூல்களில் காணப்படும் பொருளாக தொடர்ந்து நிற்கும் சரடு போல் இருக்கின்றது என்ற உண்மையை, பொருள் மறை நான்கே வான் சரடா என்ற தொடர் மூலம் மனிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். 

பொழிப்புரை

பாம்பினை அணிகலன் போன்று மாலையாகத் தனது கழுத்தில் அணிந்தவனே, புலியின் தோலை உரித்துத் தனது இடுப்பினில் ஆடையாக உடுத்தவனே, காண்பவர்க்கு வெண்மை நிறமுடைய கோவணம் அணிந்தும், கையினில் ஒரு கபாலம் ஏந்தி உணவு உண்பதற்காக பிச்சை எடுப்பவனாகவும் காட்சி தருபவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, தேய்ந்து வளைந்த பிறையாக அழியும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்து, பிறைச் சந்திரனை தனது சடையில் அணிந்தவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.