முகப்பு
தினம் ஒரு தேவாரம்

75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 10

கொடியவனாகிய அடியேன்

Updated On : 8 அக்டோபர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 PM

பாடல் 10

பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன்
                                                                                 பொன்முடி தோள்
இறத் தாள் ஒரு விரல் ஊன்றி இட்டலற இரங்கி ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்றக்
                                                                                 கொடுவினை  நோய்
செறுத்தாய் திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

Advertisement

பொறித்தேர்=இயந்திரத் தேர். வானில் பறக்கும் வல்லமை பெற்ற தனித்தன்மை வாய்ந்த புஷ்பக விமானம். பொருப்பு=மலை, கயிலாய மலை. தாள்=பாதம்

பொழிப்புரை:

வானில் பறக்கும் வல்லமை பெற்ற இயந்திரங்களைக் கொண்ட புட்பகத் தேரினை உடைய அரக்கனாகிய இராவணன், தனது தேர் சென்ற வழியில் குறுக்கிட்டது எனக் கருதி கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, பொன்முடிகள் அணிந்த அவனது தலைகளும், தோள்களும் நொறுங்குமாறு, கால் விரல் ஒன்றினை அழுத்தி அவனை அலறச் செய்தவனே, தனது தவற்றினை உணர்ந்து சாமகானம் பாடி உன்னை துதித்த அரக்கன் மேல் இரக்கம் கொண்டு அவனை விடுவித்ததும் அன்றி, அவனது நலம் மேலும் பெருகுமாறு ஒளி பொருந்திய வாளினை அளித்தவனே,  கொடியவனாகிய அடியேன் செய்த குற்றங்களால் ஏற்பட்ட கொடிய வினையான நோயினை அழித்தாய். 

முடிவுரை:

இந்தப் பதிகம் பாடி முடிக்கப்பட்டவுடன் நல்லூருக்கு வா வா என்ற குரல் வானில் எழுந்தது. இறைவனின் கட்டளையை உணர்ந்த அப்பர் பிரான் அவ்வாறே திருநல்லூர் சென்று அங்கு இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது வைக்கப்பெற்றார். நல்லூருக்கு இறைவன் அப்பர் பிரானை அழைத்ததை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.  

கோவாய் முடுகி என்றெடுத்துக் கூற்றம் வந்து
                                                                            குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என் தலை மேல் பொறித்து வைப்பாய்
                                                                            எனப் புகன்று
நாவார் பதிகம் படுதலும் நாதன் தானும் நல்லூரில் 
வாவா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து
                                                                            வாகீசர்

அப்பர் பிரானை நல்லூருக்கு வா வா என்றது போல், தில்லை நகரில் கூத்தபிரானைத் தொழுத சுந்தரரை, சிவபெருமான் ஆரூரில் வருக நம் பால் என்று வானில் எழுந்த குரல் மூலம் அழைக்க, சுந்தரரும் அவ்வாறே திருவாரூர் சென்று சிவபிரானை வணங்கி தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். வானில் எழுந்த குரல் மூலமாக சுந்தரரை சிவபெருமான் திருவாரூர் அழைத்த செய்தி கொண்ட பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடி, சிவபிரானது அருளாற்றலை குறிப்பதால், சிவபிரானது அருட்செயலைக் குறிப்பிடும் சேக்கிழார், அருள் புரியும் தன்மை கொண்டவர் என்ற பொருள் பட எடுத்த சேவடியார் என்று நயமாக குறிப்பிடுகின்றார். 

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு
             தனிப் பெருந்தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம்
            எறி புனல் மறி திரைப் பொன்னி
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில்
            வருக நம் பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்ததோர் நாதம்
            கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்

மணிவாசகர், தில்லைக்குச் செல்ல வேண்டும் என்று சிவபிரான் பணித்ததை, அவரே தனது திருவாசகத்தில் (கீர்த்தித் திருவகவல்) பதிவு செய்துள்ளார்.
    
நாயினேனை நலமலி தில்லையுள்
கோலமார் தரு பொதுவினில் வருகென    

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.