105. ஒடுங்கும் பிணிபிறவி - பாடல் 11
அடியார்களையே வல்லவர்
பாடல் 11:
மண்ணார் முழவு அதிர மாட வீதி வயல் காழி ஞான
சம்பந்தன் நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை
மாடம் மேயான்
கண்ணார் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும்
கேட்டரும் போய்
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்
வினை மாயுமே
விளக்கம்;
Advertisement
கருத்து உணர்ந்து கற்றார் என்று தேவாரப் பதிகங்களை பொருள் உணர்ந்து கற்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல பதிகங்களில் பண் பொருந்த தேவார பாடல்களை பாட வேண்டிய அவசியத்தையும் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு முறையான பண்ணுடன் பொருத்தி, பாடல்களின் பொருளை புரிந்து கொண்டு, மனம் ஒன்றி பாடும் அடியார்களையே வல்லவர் என்று பெரும்பாலான பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே நாமும் தேவார பதிகங்களின் பொருளினை உணர்த்து கொள்ள முயற்சி செய்வோமாக. கண்ணார் கழல்=உலகத்தின் கண் போன்று கருதப்படும் திருப்பாதங்கள்;
பொழிப்புரை:
நிலம் அதிரும் வண்ணம் ஒலிக்கும் முரசுகள் உடையதும் மாட வீதிகள் நிறைந்ததும் ஆகிய சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், பெண்ணாகடம் நகரில் உள்ளதும் நன்மைகள் பல அருளும் தன்மை வாய்ந்ததும் ஆகிய பெருங்கோயிலாகிய தூங்கானை மாடம் திருக்கோயிலில் உறைகின்ற இறைவனின் திருப்பாதங்களை, பல நன்மைகளை அனைவர்க்கும் அருளுவதால் கண் போன்று கருதப்படும் திருவடிகளை, புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும், பாடல்களின் பொருளினை உணர்ந்து கற்று இசையுடன் பொருந்தி பாடும் அடியார்களும் அத்தகைய பாடல்களை கேட்கும் அடியார்களும், தவத்தின் பயன்கள் பெற்று, சிவலோகத்தைச் சென்றடைந்து ஆங்கே நிலையாக பொருந்தி வாழும் தன்மையை பெருவார்கள், அவர்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும். இதுவே நியதி என்பதை உணர்வீர்களாக. ,
முடிவுரை
இந்த பதிகத்து பாடல்கள் மூலம் தூங்கானை மாடத்து பெருமானின் பெருமைகளை நமக்கு உணர்த்தி, இந்த பெருமானை பணிந்து வணங்குவதால் நாம் பெறவிருக்கும் நன்மைகளை குறிப்பிட்டு, நாமும் இந்த பெருமானை வணங்கிப் பணியும் வண்ணம் நம்மை சன்பந்தர் வழிப்படுகின்றார். உயிருக்கு உற்ற தீங்கினை மட்டுமன்றி உடலுக்கு உற்ற தீங்கினையும் நீக்கும் வண்ணம் இந்த தலம் அமைந்துள்ள நிலையினை நாம் அப்பர் பிரானின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பல வருடங்கள் சமணர்களுடன் வாழ்ந்ததால் இழிந்த தன்மை அடைந்த உடலுடன் உயிர் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று நினைத்த அப்பர் பிரான், இடபக் குறி பொறித்து தனது உடலினை தூய்மை செய்யுமாறு இந்த தலத்து இறைவனிடம் வேண்டியதாக சேக்கிழார் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்கு உண்டு போந்த உடல்
தன்னுடனே உயிர் வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்
சமண சமயத்தில் இருந்து பாழ் பட்ட உடலை தரியேன் என்று அப்பர் பிரான் கூறிய பின்னர், நாவுக்கரசர் என்று தானே பட்டம் சூட்டி அவரது தமிழ்ப் புலமையை உலகு அறியச் செய்த பின்னர், அப்பர் பிரானின் தீஞ்சுவை பாடல்களை கேட்காமல் சிவபிரானால் இருக்க முடியாது அல்லவா. எனவே அப்பர் பிரானின் வேண்டுகோளை ஏற்று அவரது உடலை தூய்மை படுத்த தீர்மானித்த பெருமான். தனது சிவகணம் ஒன்றினுக்கு ஆணை இடுகிறார். வேறு யாரும் அறியாதவாறு அந்த சிவகணமும் அப்பர் பிரானின் அருகில் வந்து அவரது தோளில் மூவிலை சூலம் மற்றும் இடபக் குறிகளை பொறிக்கின்றது. இந்த நிகழ்ச்சியை கூறும்போது சேக்கிழார் பெருமான் உழவாரப் படை கொண்டு தொண்டு செய்த அப்பர் பிரானின் தோள்களை திரு என்ற அடைமொழி கொடுத்து சிறப்பிப்பதை நாம் பெரிய புராணத்தில் காணலாம். மாடு என்றால் அருகில் என்று பொருள். அப்பர் பிரானுக்கு அருகில் இருந்தவர் கூட அறியாதவாறு சின்னங்கள் பொறிக்கப்பட்டன என்று சேக்கிழார் இந்தப் பாடலில் கூறுகிறார். சின்னத்தை தனது தோளில் கண்ட அப்பர் பிரான் தனது வேண்டுகோளை ஏற்று உய்யச் செய்த இறைவனின் கருணையை நினைந்து மகிழ்ந்தார்.
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேருச்சிலையான் அருளால் ஓர் சிவ பூதம்
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திருத் தோளில்
சேடு உயர் இலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த
அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தில் மூன்று பாடல்கள் தான் நமக்கு தற்போது கிடைத்துள்ளன. மூன்று பாடல்களிலும் மூன்று விண்ணப்பங்கள் இருப்பதை நாம் காணலாம். முதல் பாடலில் மூவிலைச் சூலம் பொறிக்குமாறும், இரண்டாவது பாடலில் சிவபிரானின் திருவடியில் உள்ள திருநீற்றை தன் உடலின் மீது பூசுமாறும், கடைப் பாடலில் இடப இலச்சினை பொறிக்குமாறும் வேண்டுவதை நாம் காணலாம். பொன் போன்ற திருவடிக்கு எனது விண்ணப்பம் என்று பணிவாக பதிகத்தினை தொடங்கும் அப்பர் பிரான், அந்த பணிவின் ஊடே தனது தீர்க்கமான முடிவினை எடுத்துக் கூறுவதையும் நாம் காணலாம். சூல இலச்சினை தனது உடலின் மீது பொறிக்கபடாவிடில் தனது உயிரைப் போக்கிக் கொள்வதாக இறைவனிடம் தெரிவிக்கும் பயமற்ற தன்மையை நாம் உணரலாம். தனது உயிரைத் தான் போக்கி கொள்வதற்கான காரணம் இங்கே கூறப்படாவிட்டாலும், நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. சூலம் பொறிக்கப்பட்டால் தான் உயிர் வாழ்வேன் என்று கூறுவதிலிருந்து நாம், சூலத்தின் உருவம் தனது உடலினை புனிதப்படுத்தும் என்று அப்பர் பிரான் கருதியதை நாம் தெளிவாக புரிந்து கொள்கின்றோம். எனவே சமணர்களுடன் தான் வாழ்ந்ததால் தனது உடல் புனிதம் கெட்டதாக அப்பர் பிரான் கருதியதையும் நம்மால் உணரமுடிகின்றது. மேலும் சூலம் தனது உடலில் சிவபிரான் அருளால் தோன்றினால், உலகில் உள்ளவர் அனைவரும், சிவபிரான் அப்பரின் தவற்றை மன்னித்து ஏற்றுக் கொண்டதனை உணருவார்கள் என்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்பதையும் நாம் உணரமுடிகின்றது. மேலும் என்னாவி காப்பதற்கு இச்சை உண்டேல் என்ற கேள்வியை எழுப்பிய அப்பர் பிரானை காப்பாற்றியதன் மூலம், தனக்கு அப்பர் பிரானின் தீஞ்சுவைப் பாடல்களை கேட்பதற்கு எத்தனை விருப்பம் இருந்தது என்பதை சிவபிரான் தெளிவுபடுத்தி உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் உணரலாம். சமணர்கள் அளித்த பெரிய இடர்களில் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு, சூலம் பொறிப்பது ஒன்றும் அரிய செயல் அல்லவே. இறைவன் மனது வைத்தால் எந்த இடரும் இடரல்ல என்பதையும், எந்த வேண்டுகோளும் நிறைவேற்ற முடியாத வேண்டுகோள் அல்ல என்பதையும் அப்பர் பிரானின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. இந்தப் பாடலில் அப்பர் சிவபிரானை தூங்கானை மாடச் சுடர் கொழுந்து என்று அழைக்கின்றார்.
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின்னாரும் மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே
இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்தர் தவம் செய்து முக்திப் பேற்றினை அடைவதை விட எளிதான வழி தூங்கானை மாடத்து பெருமானைப் பணிந்து போற்றி வழிபடுவது என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று பெருமானைப் பணிந்து இம்மை மற்றும் மறுமையிலும் பல பயன்கள் பெற்று வாழ்வினில் உய்வினை அடிவோமாக.