முகப்பு
தினம் ஒரு தேவாரம்

106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 1

திருக்கோயிலின் பெயரையும்

Updated On : 23 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:05 PM

                 
பின்னணி:

பெண்ணாகடத்து சுடர்க்கொழுந்தீசரை பணிந்து வணங்கி, ஒடுங்கும் பிணி என்று தொடங்கும் பதிகத்தினைப் (1.59) பாடிய திருஞானசம்பந்தர் அதற்கு பின்னர் திருவரத்துறை தலம் நோக்கி செல்லலானார். இந்த தலம் பெண்ணாகடம் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கில் ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கோயில் அரத்துறை என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. தலத்தின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து தேவார பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இறைவரின் பெயர் அரத்துறை நாதர்; இறைவியின் பெயர் ஆனந்த நாயகி; திருஞான சம்பந்தர் தனது பாடல்களில் அரத்துறை அடிகள் என்றே இறைவனை குறிப்பிடுகின்றார். சுந்தரரும் தான் அருளிய பதிகத்தில் நெல்வாயில் அரத்துறை என்றே குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் திருக்கோயிலின் பெயரை மட்டும் அரத்துறை என்று தனது பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தொழுதூர் விருத்தாசலம் சாலையில் தொழுதூரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ள கொடிகுளம் என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இந்த தலம் அடையலாம். இந்த தலத்தில் உள்ள வடவெள்ளாறு நதி பண்டைய நாளில் நிவா என்று அழைக்கப்பட்டது. ஆதிசேஷன் வழிபட்டதால் அரவத்துறை என்ற அழைக்கப்பட்ட ஊரின் பெயர் நாளடைவில் மருவி அரத்துறை என்று மாறியது என்று கூறுவார்கள். 

அந்நாள் வரை தந்தையாரின் தோள்களில் அமர்ந்து பல தலங்கள் சென்ற சம்பந்தர், நாளுக்கு நாள் தந்தையாரின் வயது கூடுவதால் அவரது உடல் நிலையின் தளர்ச்சி கருதி, அவ்வாறு தந்தையாரை வருத்துவதை தவிர்த்து நடந்து சென்றார். இவ்வாறு சென்றதால் அவரது திருப்பாதங்கள் நொந்தன என்றும் அவரது தந்தையார் வருந்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். 

Advertisement

    ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 
    காதலால் அணைவார் கடிது ஏகிடத்
    தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
    பாத தாமரை நொந்தன பையப்பைய

சம்பந்தரின் பாத மலர்கள் நொந்தன என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தரின் வாழ்வில் இதற்கு முன்னே நடந்த இரண்டு நிகழ்ச்சிகளை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தையாக குளக்கரையில் சம்பந்தர் அழுததை குறிப்பிடும் சேக்கிழார், அவர் அழுத நிலையினை குறிப்பிடுகையில் கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் கண்களை பிசைந்து அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்றும் அமைந்த திருவாயின் உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும் அனைத்து உயிர்களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார் என்று குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காணலாம். தமிழ் மறைகள் தோன்றும் காலம் மிகவும் அருகில் வந்ததை உணர்த்தும் பொருட்டு மறையொலி எங்கும் பரவியது என்று நயமாக கூறும் சேக்கிழார் பிள்ளையாரின் அழுகை, பிராட்டி ஞானப்பால் ஊட்டுவதற்கும் தோடுடைய செவியன் என்ற பதிகம் வெளிவருவதற்கும் காரணமாக இருந்தமையை உணர்த்தும் வண்ணம் அழுது அருளினார் என்று குறிப்பிடுகின்றார்.     

    கண்மலர்கள் நீர் ததும்பக் கைம்மலர்களால் பிசைந்து 
    வண்ண மலர்ச் செங்கனி வாய் மணியதரம் புடை துடிப்ப
    எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்
    புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்   

திருக்கோலக்கா சென்ற சம்பந்தர், தனது கைகளால் தாளமிட்டு பாடியதைக் கண்டு பொறாத பெருமான் பொற்றாளம் வழங்கினார் என்பதை நாம் அறிவோம். தந்தையைக் காணாமல் அழுத போது ஞானப்பால் அருளிய பெருமான், கைகள் வருந்த தாளமிட்டு பாடியதைக் கண்டு பொற்றாளம் அளித்த பெருமான், மாறன்பாடியில் கால்கள் வருந்த நடந்ததைக் கண்டு முத்துச்சிவிகை அருளிய வரலாற்றினை நாம் இங்கே காண்கின்றோம். மெய்யடியார்கள் வருந்துவதை காணப் பொறாதவன் சிவபெருமான் என்று இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.        

திருவரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற ஊர் அடைந்த போது, நடந்து வந்த சோர்வினை நீக்கும் பொருட்டும் உடன் வந்த அடியார்கள் இளைப்பாறும் பொருட்டும், ஞானசம்பந்தரும் உடன் வந்த அடியார்களும் அந்த ஊரில் தங்கினார்கள். அப்போது இரவுக் காலமும் வந்தது. இதனிடையில் அரத்துறை இறைவனும், திருஞானசம்பந்தர் ஏறிச் செல்வதற்கு சிவிகையும், அவர் மேலே கவித்துக் கொள்வதற்கு குடையும். அவரது புகழினை குறிப்பிட்டு ஊதுவதற்கு சின்னங்களும் (ஊதுகுழல்) அருளுவதற்கு முடிவு செய்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

    ஏறுதற்கு சிவிகை இடக்குடை
    கூறி ஊதக் குலவு பொற் சின்னங்கள்         
    மாறில் முத்தின் படியினால் மன்னிய 
    நீறு உவந்த நிமலர் அருளுவார்

தனது முடிவினை செயல்படுத்தும் வண்ணம் பெருமான், அரத்துறை தலத்து மறையவர்களின் கனவில், சீர்காழி குழந்தை ஞானசம்பந்தர் தன்னைக் காண்பதற்கு வந்து கொண்டிருக்கும் செய்தியையும், அவரிடத்தில் முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் குழல்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றார். இவ்வாறு கனவினில் இறைவனது கருத்து உணர்த்தப்பட்ட மறையவர்கள் அனைவரும், அடுத்த நாள் விடியற்காலையில் திருக்கோயில் முன்னம் வந்து கூடினார்கள். இறைவன் கனவினில் வந்து நிகழ்த்திய அதிசயத்தை ஒருவருக்கொருவார் சொல்லி வியந்தனர். பள்ளியெழுச்சி பாடி இறைவனைப் போற்றும் காலம் நெருங்கியமையால் திருப்பள்ளியெழுச்சிக்கு உரிய காலத்தில் திருக்கோயில் கதவுகளை திறந்தனர். திறந்த போது செழுமையான முத்துக்கள் பதிக்கப்பெற்ற வெண்குடையும், முத்துச் சிவிகையும், புகழினை எடுத்து ஊதுவதற்கு ஊது கொம்புகளும் கோயிலின் உள்ளே இருந்ததைக் கண்டு பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்து, தங்களது தலைமேல் கைகளை குவித்து இறைவனை வணங்கினார்கள். மேலும் இந்த சின்னங்கள் எட்டு திசைகளுக்கும் இறைவனின் கருணைத் திறத்தையும் ஞானசம்பந்தரின் சிறப்பினையும் உணர்த்தும் விளக்கு போன்றவை என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சி தலத்து மறையவர்களுக்கு சம்பந்தரின் அடிமைத் திறத்தின் தன்மையையும்,  இறைவன் சம்பந்தர் பால் வைத்திருந்த அன்பையும் உணர்த்தியது. இறைவனின் அருளால் வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சங்கு துந்துபி தாரை பேரி முதலான வாத்தியங்கள் முழங்க, அந்தணர்கள் மாறன்பாடி நோக்கி சென்றனர்.

எப்போதும் இறைவன் பற்றிய சிந்தனையுடன் இருந்த ஞானசம்பந்தர் உறங்கிய போது, அவரது கனவிலும் பெருமான் நெல்வாயில் அரத்துறை அந்தணர்கள் முத்துச் சிவிகை, குடை மற்றும் ஊது கொம்புகள் எடுத்து வருவதை உணர்த்தி, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தினார். விடியற்காலையில் எழுந்த ஞானசம்பந்தர், தனது தந்தையார் மற்றும் தன்னுடன் வந்த அடியார்களுக்கு, இறைவன் உணர்த்திய செய்தியை கூறினார். அனைவரும் தங்களது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தங்களது கைகளை தலை மேல் குவித்து ஐந்தெழுத்து ஓதியவர்களாய் இருந்த போது, காலைப் பொழுது புலரவே, சூரியனும் திருஞான சம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறும் காட்சியை கண்டு களிக்கும் விருப்பத்துடன் கிழக்கு திசையில் தோன்றினான் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

    போத ஞானப் புகலிப் புனிதரைச்
    சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்
    காதல் செய்பவன் போலக் கருங்கடல்
    மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்  

அர அர என்ற ஒலி வானில் எழ, நெல்வாயில் அரத்துறை அடியார்கள் முத்துச்சிவிகை முதலான பொருட்களுடன் ஞானசம்பந்தர் முன்னர் வந்து தோன்றினர். பெருமான் தங்களது கனவில் தோன்றியதையும் அதன் பின்னர் நடந்தவற்றையும் ஒன்று விடாமல் ஞானசம்பந்தரிடம் சொல்லிய வேதியர்கள் அவரைப் போற்றி வணங்கி அனைத்தும் ஈசனது அருளால் விளைந்தன என்று கூறினார்கள். மேலும் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு ஞானசம்பந்தரை வேண்டினார்கள். ஈசன் தான், இடைவிடாது அவரை தான் விருப்பமுடன் நினைக்கும் வண்ணம் அருள் தந்து ஆட்கொண்டவர் என்று குறிப்பிட்ட சம்பந்தர், தனது அடியாராக தன்னை ஆட்கொண்டு அருள் புரிந்தது தான், பெற்ற பேறு என்று வியப்புடன் குறிப்பிட்ட பின்னர் சம்பந்தர் எந்தை ஈசன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். புந்தி=மனம்; புந்தி ஆர=மனம் நிறையும் வண்ணம்; பெருமானின் அருள் கைகூடியதால் முத்துச்சிவிகையும் மற்ற பொருட்களும் பெறுகின்ற பேறு தனக்கு கிடைத்தது என்பதை உணர்ந்த ஞானசம்பந்தர், பெருமானின் அருள் நமக்கு கிடைக்கவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிகத்து பாடல்களில் கூறுவதை காணலாம்.  

    எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்
    வந்தவாறு மற்று எவ்வணமோ என்று
    சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை
    புந்தி ஆரப் புகன்று எதிர் போற்றுவார் 


பாடல் 1:

    எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்
    சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் 
    கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்
    அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே 

விளக்கம்:

இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும் சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நிவா நதி குறிப்பிடப்பட்டு, தலத்தின் நீர்வளத்திற்கு இந்த நதி காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார். தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனினும் சம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்று கூறுகின்றார். நமது தேவைகளை புரிந்து கொண்டு தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும். தாமே வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே வந்து முத்துச்சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். சம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். ஏறு=இடபம்; அந்தண்=அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்;

அடியார்களுக்கு அன்றி மற்றவர்க்கு சிவபெருமான் அருள் புரிய மாட்டான் என்று சம்பந்தர்  கூறுவது அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பத்து பதிகத்தின் பாடலை (4.11.6) நமக்கு நினைவூட்டுகின்றது. சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன். அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
    நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
    குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
    நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே 
      

பொழிப்புரை:

எமது தந்தையே, அனைவர்க்கும் தலைவனே, எமது பெருமானே, இடபத்தின் மீது அமரும் கடவுளே என்று பெருமானைப் புகழ்ந்து பாடி, அவனது தன்மைகளை சிந்தனை செய்யும் அடியார்களுக்கு அல்லாது ஏனையோருக்கு அவனது அருள் தானே சென்று கைகூடாது. நறுமணம் வீசும் சிறந்த மலர்களை அடித்துக் கொண்டு பெருகி வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் அழகியதும் குளிர்ந்ததும் ஆகிய சோலைகள் கொண்டுள்ள  நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் அருள் வேண்டுவீராயின், நீங்கள் அவனைப் புகழ்ந்து வாயினால் பாடி மனதினால் அவனது பெருமைகளை நினைப்பீர்களாக.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.