முகப்பு
தினம் ஒரு தேவாரம்

84. குலம் பலம் பாவரு - பாடல் 8

பேற்றினை அடியேன் பெறுமாறு

Updated On : 7 ஜனவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:25 PM


பாடல் 8:


    கரப்பர் கண் மெய்யைத் தலை பறிக்கச்
                                              சுகம் என்னும் குண்டர் 
    உரைப்பன கேளாது இங்கு உய்யப் போந்தேனுக்கும்
                                             உண்டு கொலோ
    திருப்பொலி ஆரூர்த் திருமூலட்டானன் திருக்கயிலைப்
    பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
                                            தொண்டராம் புண்ணியமே

விளக்கம்:

சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்களது பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். தங்களது தலைமுடிகள் அடுத்தவரால் பிடுங்கப்படும் போதும், அதனை துன்பம் என்று கருதாமல் இன்பமாக ஏற்றுக் கொண்டவர்கள் என்று அப்பர் பிரான் சமண குருமார்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். 

மேற்கண்ட குறிப்பு நமக்கு அவர் அருளிய ஏழைத் திருத்தாண்டகம் பதிகத்தின் கடைப் பாடலை (6.3.11) நினைவூட்டுகின்றது. உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. தாங்கள் தெய்வமாக கருதி வழிபடும் ஆண் துறவிகளின் தலையில் உள்ள முடியினை பிடுங்கி நீக்குதலே பெண் துறவிகள் செய்த சேவையாக அந்நாளில் கருதப்பட்டு வந்தமை உணர்த்தப் படுகின்றது.
  
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள்
        முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று
         தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
         மதனழியச் செற்ற சேவடியினானை 
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை
         ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

Advertisement

பொழிப்புரை:

தங்களது உடலினை பாயினால் மறைப்பவர்களும், தங்களது தலை முடி பிடுங்கப்பட்டு பறித்த நிலையிலும் அதனை துன்பமாக கருதாமல் இன்பமாக உணர்ந்தவர்களும் மூர்க்கர்களாக விளங்கியவர்களும் ஆகிய சமணர்களின் உபதேசங்களைக் கேளாமல்,  பொலிகின்ற திருவாரூர் மூலட்டானத்தில் உறைபவனும், கயிலை மலையைத் தனது இருப்பிடமாக விரும்பி ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமானின் தொண்டர்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், பெறுவேனோ. பெருமானே, நீர் தான் அத்தகைய பேற்றினை அடியேன் பெறுமாறு அருள் புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.