84. குலம் பலம் பாவரு - பாடல் 9
வீடுபேறு நிலைக்கு வழி
பாடல் 9:
கையில் இடு சோறு நின்று உண்ணும்
காதல் அமணரை விட்டு
உய்யு நெறி கண்டு இங்கு உய்யப் போந்தேனுக்கும்
உண்டு கொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய்யன்பு இலா அடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே
விளக்கம்:
உய்யும் நெறி=பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து பேரின்பத்துடன் என்றும் இருக்க வழி வகுக்கும் சைவநெறி. சமணசமயத்தை விடுத்து சைவநெறி சார்ந்த அப்பர் பிரான், தனது வாழ்வினில் இத்தகைய மாற்றம் நிகழ மூல காரணமாக இருந்த சூலை நோயினுக்கு எவ்வாறு நன்றி கூறுவேன் என்று அப்பர் பிரான் மொழிந்ததை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் உய்யும் நெறி என்று சைவ சமயத்தை குறிப்பிடுவதை நாம் கீழக்கண்ட பாடலில் உணரலாம். சமண சமயத்தை ஆழ்குழி என்றும் பொய்யினை மெய் போன்று பிரச்சாரம் செய்த இழிந்த சமயம் என்றும் குறிப்பிடுவதை நாம் காணலாம்.
பொய் வாய்மை பெருகிய புன்சமயப் பொறி இல் சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர் செய் குறை என் கொல் எனத் தொழுதார்
பொழிப்புரை:
தங்களது கையில் இடப்படும் சோற்றினை நின்றவாறே உண்ணும் செய்கையை மிகவும் விருப்பத்துடன் செய்யும் சமணர்கள் கூட்டத்தினை விட்டுவிட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து என்றும் பேரின்பம் அளிக்கும் வீடுபேறு நிலைக்கு வழி வகுக்கும் சைவ சமயம் சார்ந்த அடியேனுக்கு, அழகிய வயல்கள் உடைய திருவாரூர் நகரத்து மூலட்டானத்தில் உறையும் நமது தலைவனிடம் பொய்யன்பு கொள்ளாமல் உண்மையான அன்பினைக் கொண்டு திருத்தொண்டு புரியும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேறு கிடைக்குமோ. பெருமானே, நீர் தான் அத்தகைய பேற்றினை நான் பெறுவதற்கு அருள் புரிய வேண்டும்.