86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 5
ஊழிக் காலங்களுக்கு
பாடல் 5:
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர்
உச்சி உள்ளானும்
தாழிளம் செஞ்சடையானும் தண்ணமர்
திண்கொடியானும்
தோழியர் தூது இடையாடத் தொழுது
அடியார்கள் வணங்க
ஆழி வளைக் கையினானும் ஆரூர் அமர்ந்த
அம்மானே
விளக்கம்:
ஊழி கடந்து இருப்பவன் சிவபெருமான் ஒருவன் என்பதைக் குறிப்பிட, ஊழியினை அளக்க வல்லான் என்று கூறுகின்றார்.. இந்த பாடலிலும் இதற்கடுத்த பாடலிலும், சிவபெருமான் திருமாலாக நின்று, உலகைக் காக்கும் தொழில் புரியும் செயல் உணர்த்தப்படுகின்றது. சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) இரண்டாவது பாடலில், சம்பந்தர், திருமாலாக சிவபிரான் உறையும் பதி என்று சிவபுரத்தை குறிப்பிடுகின்றார். பாற்கடலில் துயில்வது போல் திருமால் காட்சி அளித்தாலும், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களும் அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவர் என்பதால், அவரது தூக்கத்தை அறிதுயில் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுவது போன்று, சம்பந்தரும் அறிதுயில் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காணலாம். மலைகள் மிகுந்த இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களும், விண்ணில் வாழும் தேவர்களும், மற்ற உலக உயிர்கள் அனைத்தும் நிலைபெற்று வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் பாற்கடலில் துயிலும் திருமால் என்று இங்கே திருமால் செய்யும் படைத்தல் தொழிலினை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.
மலை பல வளர் தரு புவியிடை மறை தரு வழி மலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலை பெறுவகை நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அறி உரு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதிள் சிவபுர நினைபவர் திருமகளொடு திகழ்வரே
பொழிப்புரை:
ஊழிக் காலங்களுக்கு அப்பாற்பட்டவனாய் இருப்பதால், ஊழிக்காலத்தினை அளக்கும் வல்லமை படைத்தவனாக விளங்குபவன் சிவபெருமான். தன்னை விரும்பும் அடியார்களின் தலை மேல் இருப்பவன் சிவபெருமான். தாழ்ந்து தொங்கும் செம்மை நிறம் கொண்ட சடையை உடைய அவன், குளிர்ச்சி பொருந்தியதும் வலிமை மிக்கதும் ஆகிய கொடியை உடையவன் சிவபெருமான். அவன் தியாகேசனாக, பல தோழிப் பெண்கள் தங்களது தலைவிக்காக தூது செல்லவும், அடியார்கள் தங்கள் தலையால் தொழுது வணங்கவும், ஆரூர் வீதிகளில் வலம் வருகின்றான். சங்கினையும் சக்கரத்தையும் தாங்கும் திருமாலாகவும் விளங்கும் வீதி விடங்கப் பெருமான் ஆரூர் நகரத்தில் அமர்ந்த அம்மான் ஆவார்.
Advertisement