98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 9
தனது பிறவியின்
பாடல் 9:
கோண் நாகணையானும் குளிர் தாமரையானும்
காணார் கழல் ஏத்தக் கனலா ஓங்கினான்
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே
விளக்கம்:
Advertisement
கோண்=வளைந்த; அணை=படுக்கை; மாணா=மாட்சிமை தராத, மனிதர்கள் செய்யும் தவறுகளால் சில நோய்கள் ஏற்படுகின்றன. அத்தகைய நோய்கள் உள்ள மனிதர்களை நாம் இழிவாகத் தானே பார்க்கின்றோம். அத்தகைய நோய்கள் உள்ளவர்களும் பெருமானை புகழ்ந்து போற்றி வணங்கினால், அவர்களை அந்த நோய்கள் எந்த விதத்திலும் பாதிக்காது அவர்களிடமிருந்து விலகி விடும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சேணார்= உயர்ந்த சான்றோர்கள்; சேணார் என்பதற்கு தேவர்கள் என்ற பொருளும் பொருந்தும். அந்தணர்களும் தேவர்களும் வணங்கும் தில்லையைத் தான் கண்டதாக மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தில் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இறைவன் தனது நோய் மூப்பு என்ற இரண்டையும் ஒழித்ததுடன் நில்லாமல், தன்னைச் சுற்றியுள்ள உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்களின் மீது தான் கொண்டிருந்த பற்றினையும் நீக்கியதன் விளைவாக, தனது பிறவியின் தன்மையையே, மீண்டும் பிறப்பு எடுக்கா வண்ணம் மாற்றியவன் பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.
பிறவி தனை அற மாற்றிப் பிணி மூப்பு என்று இவை இரண்டும்
உறவினொடும் ஒழியச் சென்று உலகுடைய ஒரு முதலைச்
செறி பொழில்சூழ் தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே
வளைந்த உடலினை உடைய பாம்பினைத் தனது படுக்கையாக கொண்டுள்ள திருமாலும், குளிர்ந்த தாமரை மலரை தான் அமரும் இடமாக கொண்டுள்ள பிரமனும் தங்கள் முன்னர் தோன்றிய தீத்தூணின் அடியையும் முடியையும் கானா முடியாத நிலையில், பெருமானின் பெருமையை உணர்ந்தவர்களாய் பெருமானின் திருவடிகளை போற்றி வணங்கினார்கள். உயர்ந்த சான்றோர்கள் பலரும் வாழும் தில்லைச் சிற்றம்பத்தில் உறையும் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை, ஒருவனுக்கு இழிவினை ஏற்படுத்தும் நோய்கள் பிடித்திருந்தாலும், அந்த நோய்கள் அத்தகைய அடியார்களை எந்த விதத்திலும் பாதிக்காது அவர்களை விட்டு விலகி விடும்.