முகப்பு
தினம் ஒரு தேவாரம்

112. பொடியுடை மார்பினர் - பாடல் 9

காண முடியாத திருவடிகள்

Updated On : 3 நவம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:42 PM


பாடல் 9:

    கரியவன் நான்முகன் கை தொழுது ஏத்தக் காணலும் சாரலும் ஆகா
    எரி உருவாகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி
    வரி அரவு அல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
    விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்

விளக்கம்:

Advertisement

சார்ந்து இருப்போம் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர்க்கு, பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பது எத்தைகைய பெரும் பேறு என்பதை அடியார்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது போலும். பொதுவாக பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடிகள் என்று கூறும் சம்பந்தர் இந்த பதிகத்து பாடலில், அவர்கள் இருவரும் காண முடியாத திருவடிகள், சார முடியாத திருவடிகள் என்று கூறுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளைச் சார்ந்து இருப்பதை ஒரு பெருமையாக கருதி, ஆர்வத்துடன் அந்த திருவடிகளைச் சார வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது.     

பொழிப்புரை:

கரியவன் என்று அழைக்கப்படும் திருமால் மற்றும் பிரமன் தங்களது கைகளால் தொழுது ஏத்தும் வண்ணம், அவர்களால் காணவும் முடியமால் சாரவும் முடியாமல் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்றவனே என்றும் பல ஊர்களிலும் இடப்படும் பிச்சையையும் பலியையும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு உண்பவனே என்றும் புகழ்ந்து, கோடுகள் உடைய பாம்பின் படம் போன்று புடைத்து எழுந்துள்ள மார்பகத்தினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறைகின்ற  வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நன்கு விரிந்து மலர்ந்த  சிறந்த மலர்களை தூவி, ஏனைய தேவர்களிலிருந்து மாறுபட்டுள்ள பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி சேர்வோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.