முகப்பு
தினம் ஒரு தேவாரம்

112. பொடியுடை மார்பினர் - பாடல் 11

வலிமையான சூலம்

Updated On : 5 நவம்பர், 2018 at 10:42 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:43 PM


பாடல் 11:

    கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழிய மூதூர்
    நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
    வல்லுயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்
    சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிதாமே

விளக்கம்:

Advertisement

கல்=மலை; கல்லுயர்=மலை போன்று உயர்ந்த; 

பொழிப்புரை:

மலைகள் போன்று உயர்ந்து எழுந்து நின்று பேரொலியுடன் கரையினை வந்து அடையும் அலைகள் உடைய கடலின் அருகே உள்ள சீர்காழி எனப்படும் பழமையான ஊரினைச் சார்ந்தவனும், நன்மைகள் விளைவிக்கும் உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடையவனும், நன்மை புரியும் தமிழ் பாடல்கள் அருளியவனும் ஆகிய ஞானசம்பந்தன், வலிமையான சூலம் வெண்மழுவாள் முதலிய ஆயுதங்களை பயன்படுத்துவதில் வல்லவனாகிய பெருமான் உறையும் வாழ்கொளிபுத்தூர் தலத்தினைப் போற்றி, சொன்ன பாடல்களில் வல்ல அடியார்களின் துயர் கெடுதல் மிகவும் எளிதாம்.       

முடிவுரை:

பெருமானது பெருமைகளை குறிப்பிட்டு அவனது திருவடிகளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவடிகள் பற்றிய குறிப்பு கொண்டுள்ள மற்ற பதிகங்களை நினைவூட்டுகின்றது. முன்னுரையில் அகத்தியர் தேவாரத் திரட்டில் குறிப்பிடப் படும் திருவடிப் பதிகங்கள் இரண்டினை நாம் கண்டோம். திருவடித் தாண்டகம் என்று அழைக்கப்படும் (6.06) பதிகத்தின் அனைத்து அடிகளிலும் பெருமானின் திருவடி குறிப்பிடப்பட்டு, திருவடிகளின் பல்வகை சிறப்பு அப்பர் பெருமானால் உணர்த்தப்படுகின்றது.   

அந்தணாளன் என்று தொடங்கும் திருப்புன்கூர் பதிகத்தில் (7.55), சுந்தரர் ஓவ்வொரு பாடலிலும் இறைவனின் ஒவ்வொரு அருட்செயலை குறிப்பிட்டு, அதன் காரணமாக இறைவனின் திருவடிகளை சென்ற அடைந்ததாக குறிப்பிட்டு, நம்மையும் இறைவனது திருவடிகளைப் பணிந்து வணங்குமாறு தூண்டுகின்றார். மார்கண்டேயனுக்கு அருளியது, மழை பொழிவித்தது, அதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை தவிர்த்தது, கலிக்காமரின் பிணியைத் தவிர்த்தது, சண்டீசருக்கு அருளியது, அப்பர் சம்பந்தர் ஆகியோரின் குற்றங்களை பொறுத்து அருளியது, அமரர்கள் வாழும் பொருட்டு நஞ்சு உண்டது, விஜயனுக்கு பாசுபதம் அருளியது, நால்வர்க்கு அறம் உரைத்தது, பகீரதனுக்காக கங்கையை தாங்கியது, திரிபுரத்தில் உள்ள மூன்று அடியார்களுக்கு அருளியது, ஆறு சமயத்தவர்க்கும் அருள் புரிவது மற்றும் இராவணனுக்கு அருள் புரிந்தது ஆகிய செயல்கள் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது.  

சிந்திப்ப அரியன என்று தொடங்கும் அப்பர் பிரானின் ஐயாற்றுப் பதிகத்தில் (4.92) அனைத்துப் பாடல்களும் ஐயாறன் அடித்தலமே என்று முடிவடைகின்றன. பெருமானின் திருவடிகளின் பண்புகள் பதிகத்தின் இருபது பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றன. பொதுவாக பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களே பாடும் அப்பர் பிரான், பெருமானின் திருவடிகளின் சிறப்பினை விளக்குவதற்கு பத்து பாடல்கள் போதாது என்று நினைத்தார் போலும்.

மன்னு மலைமகள் என்று தொடங்கும் இன்னம்பர் பதிகத்தின் (4.100) அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் பெருமானின் திருவடிகளின் பெருமைகள் குறிப்பிடப் படுகின்றன. அனைத்துப் பாடல்களும் இன்னம்பரான் தன் இணை அடியே என்று முடிகின்றன. இந்த பதிகத்தின் முதல் பாடலில், மலைமகள் கையால் வருடிய திருப்பாதங்கள் பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார். திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.108) இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த இரண்டு பாடல்களிலும் பெருமானின் திருவடிச் சிறப்புகள் கூறப்படுகின்றன. மார்கண்டேயனின் வாழ்நாளை நீட்ட இயமனை உதைத்த திருவடி என்றும், திருமாலால் காண முடியாத திருவடிகள் என்றும் தொண்டர்கள் போற்றும் திருவடிகள், மாணிக்கம் போன்று ஒளிவீசும் திருவடிகள் என்றும், உமையவள் வருடச் சிவக்கும் திருவடிகள் என்றும் கண்பார்வை இல்லாத தனது அடியார்களுக்கு அவர்கள் முன்னே ஒளியாகத் தோன்றி வழிகாட்டும் திருவடிகள் என்றும் பெருமானின் திருவடிகளின் தன்மை இந்த பதிகத்தில் உணர்த்தப் படுகின்றன.    
   
திருவெம்பாவை பதிகத்தின் கடைப் பாடலில், மணிவாசகர், பாடலின் முதல் ஏழு அடிகளிலும் இறைவனின் திருவடிகளை போற்றி போற்றி என்று கூறி, எட்டாவது அடியில் சிவபெருமான் நம்மை ஆட்கொள்வதற்கு உதவியாக இருக்கும் மார்கழி நீராடும் செயல் போற்றி என்று கூறுகின்றார். இந்த பாடலில் இறைவனின் திருவடிகளை, பாதமலர், செந்தளிர்கள், பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள், புண்டரீகம், பொன்மலர்கள் என்று வேறு வேறு சொற்களால் குறிப்பிடும் நயத்தையும் நாம் காணலாம். எண்குணத்தான் என்று அழைக்கப்படும் இறைவனை எட்டு முறை போற்றி போற்றி என்று சொல்லி அழைப்பதும் மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் இறைவன் புரியும் ஐந்து தொழில்களும் உணர்த்துப் பட்டுள்ளன. தோற்றம் என்று படைத்தல் தொழிலும், போகம் என்று காத்தல் தொழிலும், ஈறு என்று அழித்தல் தொழிலும், காணாத புண்டரீகம் என்று மறைத்தல் தொழிலும், உயிர்களை உய்ய ஆட்கொண்டருளும் செயல் என்று அருளல் தொழிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. 

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
    போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானது திருவடிகளைக் காண்போம் என்று நம்மை இந்த தலத்திற்கு கூட்டிச் செல்லும் சம்பந்தர், அவ்வாறு கண்டு களித்த திருவடிகளை இடைவிடாது தியானிப்போம் என்று இரண்டாவது பாடலிலும், அவனது திருவடி நிழலே நமக்கு சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்த்து அதனை பற்றுவோம் என்று மூன்றாவது பாடலிலும், அவனது திருவடிகளில் மலர்கள் தூவி கண்குளிர காண்போம் என்று நான்காவது பாடலிலும், தரமான மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனைத் சார்ந்து இருப்போம் என்று ஐந்தாவது பாடலிலும், அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு அவனது திருவடிகளில் சமர்ப்பித்து அந்த திருவடிகளே சரணம் என்று சார்ந்து இருப்போம் என்று ஆறாவது பாடலிலும், சிறந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் தங்கியிருப்போம் என்று ஏழாவது பாடலிலும், கொத்தாக விரிந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடிகளை சார்ந்து இருப்போம் என்று எட்டாவது பாடலிலும், விரிந்து நன்கு மலர்ந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் சென்று தங்குவோம் என்று ஒன்பதாவது பாடலிலும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் இவ்வாறு தொண்டர்கள் மலர் தூவி வணங்க வாழ்கொளிபுத்தூர் தலத்தில் வீற்றிருக்கும் நமது தலைவனின் திருவடி நிழலைச் சென்று அடைவோம் என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர் உணர்த்தியதை மனதில் கொண்டு வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று மாணிக்க வண்ணரைக்  கண்குளிர கண்டு வணங்கி, அவனது திருவடிகளை தியானித்து, அவனது திருவடிகளே சிறந்த பற்றுக்கோடு என்பதை உணர்ந்து வாழ்வோமாக. இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானை தொண்டர்கள் எவ்வாறு போற்றுகின்றனர் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். நாமும் பெருமானின் பல வகையான பெருமைகளை குறிப்பிட்டு அவரை புகழ்ந்து, வணங்கி பயன் அடைவோமாக.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.