111. பூங்கொடி மடவாள் - பாடல் 6
நான்கு வேதங்களையும்
பாடல் 6:
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் அற்றவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
விளக்கம்:
Advertisement
ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களை பயன்படுத்திய இந்த பாடலை எண்ணலங்காரப் பாடல் என்று கூறுவர். சம்பந்தர் அருளிய எண்ணலங்காரப் பாடல்களில் இந்த ஒரு பாடலில் தான் எண்கள் இறங்கு வரிசையில் அமைந்துள்ளன. எண்களை தலத்தில் உள்ள அந்தணர்களின் குணங்களுடன் இணைத்து கூறும் அழகினை நாம் காணலாம். எட்டு திசைகளிலும் புகழ் பெற்று, ஏழ் இசைகள் வெகுவாக இசைக்கப்படும் தலம் என்று புகழும் சம்பந்தர், மற்ற ஆறு எண்களை அந்தணர்களின் குணங்களுடன் இணைக்கின்றார். ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் ஐந்து வேள்விகளை வளர்த்து, மூன்று விதமான நெருப்பினை பாதுகாத்து வந்ததும் அல்லாமால், வாழ்க்கையின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து அறிந்து இருந்தனர் என்று சிறப்பித்து கூறுகிறார். இரு பிறப்பினர் என்று அந்தணர்களை (உபநயனம் செய்யப்பட்ட அந்தணச் சிறுவன் வேறு ஒரு பிறவி எடுத்ததாக கருதப்படுவதாலும், அதற்கு பின்னர் அன்றைய வழக்கத்தின் படி குருகுல வாசம் மேற்கொண்டு, தாய் தந்தையரை பிரிந்து கற்றதாலும்) குறிப்பிடும் சம்பந்தர், தெளிந்த அறிவு படைத்ததால் அவர்களை ஒருமையால் உணரும் திறன் கொண்டவர்கள் என்று கூறுகிறார். தேவ யாகம், பிரம்ம யாகம், பித்ரு யாகம், பூத யாகம், மானுட யாகம் என்பவை ஐந்து யாகங்களாகும். முத்தீ என்பது, ஆகவனீயம் (வேள்வித்தீ), காருகபத்தியம், தக்ஷிணாக்கியம் என்பன.
இவ்வாறு எண் அலங்கார பாடல்கள் சம்பந்தர் பதிகத்தில் மொத்தம் நான்கு பதிகங்களில் காணலாம். அந்த பதிகங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தலம் தொடக்கச் சொற்கள்
வீழிமிழலை சடையார் புனல் உடையான்
வாஞ்சியம் வன்னிக் கொன்றை மத மத்தம்
ஓமமாம்புலியூர் பூங்கொடி மடவாள்
சீர்காழி அயில் உரு படையினர்
இம்மாதிரியான எண்ணலங்காரப் பாடல் திருமூலரின் திருமந்திரத்திலும் காணப் படுகின்றது. திருமந்திரத்தின் முதல் பாடல் இது. ஒப்பற்ற ஒருவனாய் இருக்கும் பரம்பொருளாகிய சிவபெருமான், அறக்கருணை, மறக்கருணை ஆகிய இரண்டு விதமான் அருள்களை நல்கி, அந்த அருள்கள் காரணமாக இலயம் போகம் அதிகாரம் ஆகிய மூன்று நிலைகளில் நின்றுகொண்டு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களையும் தானே உணர்ந்து உலகுக்கும் உணர்த்திக்கொண்டு, ஐம்புலன்களையும் வென்று, ஆறு அங்கங்களாக விரிந்து ஏழு உலகங்களாகவும் இருக்கின்றான் என்று கூறும் திருமூலர், தனது நெஞ்சை நோக்கி அத்தகைய பரம்பொருளை உணர்ந்து அடையுமாறு பணிக்கின்றார். இரண்டு என்பது சக்தி, சிவமாக இருப்பதையும், மூன்று என்பது முத்தொழில்கள் புரியும் மூர்த்தியாக இருப்பதையும், நான்கு என்பது நான்கு வேதத்தையும், ஆறு என்பது ஆறு சமயப் பிரிவுகளையும், எட்டு என்பது அவனது எண் குணங்களைக் குறிப்பதாகவும் கூறுவர்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரித்தனன் ஏழ் உம்பர்ச்
சென்றனன் தான் இருந்து உணர்ந்து எட்டே
இருபிறப்பினர்=அந்தணர்கள் இரண்டு பிறப்பினை உடையவர்களாக கருதப் படுகின்றனர். தாயின் கருப்பையில் பிறந்து பெற்றோருடன் வாழுவது முதல் பிறப்பாகவும், உபநயனச் சடங்கு முடிந்ததும் தகுந்த குருவிடம் அனுப்பப்பட்டு தனது இல்லத்திலிருந்த சூழ்நிலையினும் பெரிதும் மாறுபட்ட சூழ்நிலையில் கல்வி பயிலுதல் இரண்டாவது பிறப்பாக கருதப் படுகின்றது.
.
பொழிப்புரை:
எட்டு திக்குகளிலும் புகழ் மணம் கமழ பரந்திருப்பதும், ஏழிசைகளுடன் இணைந்து இசைக்கப் படுவதும், ஆறு அங்கங்களால் பாதுகாக்கப் படுவதும், ஐந்த வேள்விகளின் தன்மையையும் பெருமையையும் உணர்த்துவதும் ஆகிய நான்கு வேதங்களை நன்கு அறிந்து ஓதி, மூன்று விதமான எரிகளை முறையாக வளர்க்கும், இரு பிறப்பு உடையவர்கள் என்று சொல்லப் படும் அந்தணர்கள், ஒருமைப் பாட்டுடன் கூடிய அறிவினால் உணர்ந்து கொண்டு, அந்த குணங்களால் உணரப்படும் பொருட்களின் தன்மையை புரிந்துகொண்டு, குற்றமற்ற பொருட்கள் குற்றமுடைய பொருட்கள் என்று அனைத்துப் பொருள்களின் தன்மையை தெளிவாக புரிந்து கொண்டு வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.
பாடல் 7:
இந்த பாடல் சிதைந்தது