137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 2
மிகவும் அழகாக நாறுசாந்து
பாடல் 2:
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கொளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர் பிறை புல்கு சடை முடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வீறு சேர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
தூறு=கூட்டமாக அமைந்த சிறிய புதர்ச் செடிகள்; வீறு=பெருமை; தலத்து அம்மையின் திருநாமம், பரிமள சுகந்த நாயகி. இந்த வடமொழிப் பெயர் மிகவும் அழகாக நாறுசாந்து இளமுலை என்று தீந்தமிழ் மொழியில் கொடுக்கப் பட்டுள்ளது. புல்கு=பொருந்திய; அம்மையுடன் உடனாக இருப்பதாக இந்த பதிகத்தின் பல பாடல்களில் சம்பந்தர் கூறுகின்றார். திருமணம் நடைபெற்ற தலத்தினில் அம்மையுடன் சேர்ந்து உறைவது தானே முறை.
பொழிப்புரை:
சிறிய முட்செடிகள் ஆங்காங்கே புதராக மண்டிக் கிடக்கும் சுடுகாட்டினில், கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் நடனம் ஆடும் பெருமான், ஒளிவீசும் சாம்பலை நறுமணம் கமழும் சந்தனச் சாந்தாக பாவித்து மிகுந்த விருப்பத்துடன் தனது உடலில் பூசிக் கொள்கின்றார். பிறைச் சந்திரனைத் தனது முடியினில் பொருத்தியுள்ள பெருமான், பகல் நேரத்தில் திருத்துருத்தி தலத்தினில், நறுமணம் வீசும் சந்தனக்குழம்பு அணிந்துள்ள மார்பகங்களை உடைய இளைய பெண்ணாகிய உமையன்னையுடன் உறைகின்றார். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.