முகப்பு
தினம் ஒரு தேவாரம்

119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 4

தேவகுருவாகிய ப்ரஹஸ்பதி

Updated On : 26 ஜனவரி, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:27 PM


பாடல் 4: 

    அங்கண் மதி கங்கை நதி வெங்கண் அரவங்கள் எழில் தங்கும் இதழித்
    துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடமாம்
    வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்க எரி புலன்கள் களைவோர்
    வெங்குரு விளங்கி உமை பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே


விளக்கம்:

Advertisement

வெங்குரு என்ற சீர்காழி தலத்தின் பெயர். இந்த பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ங் என்ற மெய்யெழுத்து பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். தேவகுருவாகிய ப்ரஹஸ்பதி வணங்கியதால் வெங்குரு என்ற பெயர் வந்த வரலாற்றை இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். தான் இழந்த தேவகுரு பதவியையும், புகழினையும் மீண்டும் பெறுவதற்காக, நாரத முனிவர் உபதேசம் செய்ய, ப்ரஹஸ்பதி சீர்காழி பெருமானை வணங்கினார் என்று கூறுவார்கள். இந்திரனின் சபையில் ஒரு முறை நாரத முனிவர் வருகை தந்த போது, முனிவருக்கு மதிப்பு தரும் வகையில் இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் எழுந்து நின்ற வணங்கினார்கள். ஆனால் தேவகுருவாக விளங்கிய  குருபகவான், நாரதர் வந்ததை கவனியாமல், தனது மனைவியின் அழகினை மனதினில் அசை போட்டவாறு இருந்தார். கோபம் கொண்ட நாரத முனிவர், எந்த மனைவியின் அழகினை நினைத்து நீ கர்வம் கொண்டு இருக்கின்றாயோ, எவளது அழகினை எப்போதும் நினைத்த வண்ணம் இருக்கின்றாயோ, அந்த மனைவி உன்னை விட்டு பிரிந்து விடுவாள் என்று சாபம் அளிக்கின்றார். நாரதரின் சாபத்தின் படி, அவரது மனைவி தாரை பிரிந்து அவரை விட்டு பிரிந்து விட, ப்ரஹஸ்பதி அந்த கவலையினால்,தனது பணியினை சரியாக நிறைவேற்றாததால் தனது பதவி புகழ் ஆகியவற்றை இழக்கின்றார். சீர்காழி நகரத்து பெருமானை வணங்கி தான் இழந்த புகழினையும் பதவியையும் மீண்டும் பெறுகின்றார்.          

அங்கண்மதி கங்கைநதி வெங்கணர வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே

அங்கண்-அழகிய; வெங்கண்=கொடிய இதழி=கொன்றை மலர்; துங்க=சிறந்த; அங்கி நிகர்=கொழுந்து விட்டெரியும் தீயினை வண்ணத்தில் ஒத்த திருமேனி; எதிர்=நல்வழிக்கு மாறாக; பொங்கு=மிகுந்து; எரி=வருத்தும்; பிறைச் சந்திரனும் கங்கையும் வானிலிருந்து வந்ததால் வானபுஷ்பங்கள் என்று கருதப்படுகின்றன. கொன்றை மலரினை பிரணவ புஷ்பம் என்று கூறுவார்கள். வானபுஷ்பமும் பிரணவ புஷ்பமும் இணைந்து அழகுடன் விளங்கும் சடை இங்கே குறிப்பிடப் படுகின்றது.    

பொழிப்புரை:

அழகிய சந்திரனையும், கங்கை நதியையும், கொடிய பாம்புகளையும் கொண்டதும், அழகிய இதழ்களை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய கொன்றை மலர்கள் தங்கும் சடையை உடையவனும், கொழுத்து விட்டு எரியும் தீச்சுடர் போன்று சிவந்த நிறத்தில் திருமேனி உடையவனும் ஆகிய பெருமான் தங்கும் இடம் சீர்காழி ஆகும். சூரியன் தோன்றுவதால் பல வளங்களும் பொருந்தி விளங்கும் உலகினில் உள்ள மனிதர்கள், தாங்கள் விரும்பும் நல்வழிக்கு மாறாக செயல்படும் அவர்களது மனம் முதலிய அந்தக்கரணங்களும் ஐந்து புலன்களும் செய்யும் சேட்டைகளால் ஏற்படும் துன்பங்களை முற்றிலும் களையும் நோக்கத்துடன் பெருமானை பணிந்து வணங்கும் தலம் வெங்குரு என்ற பெயருடைய சீர்காழி நகரமாகும். இந்த தலத்தினில் தேவகுருவாகிய பிரஹஸ்பதி தங்கி தவம் செய்து, மாதொரு பாகனாக விளங்கும் பெருமானை வழிபட்டு பயன் அடைந்ததால், இந்த தலத்திற்கு வெங்குரு என்ற பெயர் ஏற்பட்டது.      
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.