131. அருத்தனை அறவனை - பாடல் 1
பெருமான், பாலனகவும்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் திருத்தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர், ஆங்கிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி சென்று புள்ளிருக்குவேளூரை அடைந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமே அந்நாளில் கடைமுடி என்று அழைக்கப்பட்டு தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடைமுடி தலம் சென்றதாக பெரியபுராணத்தில் குறிப்பு ஏதும் காணப்படாமையால், புள்ளிருக்குவேளூர் செல்லும் வழியில் இங்கும் ஞானசம்பந்தர் சென்றிருக்கலாம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் நமக்கு இதுவரை கிடைத்துள்ளது. இந்த தலத்தில் கண்வ மகரிஷி தவம் செய்தார் என்று கூறுவார்கள். இறைவனின் திருநாமம்; கடைமுடிநாதர்; இறைவியின் திருநாமம்; அபிராமி அம்மை. பிஞ்ஞகர்=அழகிய தலைக் கோலம் கொண்டவர். திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்களும் பிஞ்ஞகர் கோயில் பிறவும் எனும் சொற்றொடர், கடைமுடி, காட்டுப்பள்ளி, நாங்கூர் ஆகிய தலங்களை குறிக்கலாம் என்றும் கருதுகின்றார்.
திருமறைச் சண்பையராளி சிவனார் திருக்கண்ணார்கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்மாலை கொண்டு ஏத்தி
வருபுனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்
Advertisement
பாடல் 1:
அருத்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே
விளக்கம்:
விருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை; பாலனாகி=அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை: இந்த இரண்டு நிலைகளும், ஞான சம்பந்தப் பெருமானால் இடர் களையும் பதிகத்தின் (1.52) எட்டாவது பாடலில் குறிக்கப் படுகின்றது. கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்; சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் சம்பந்தர் கூறுகின்றார். .
விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடை மேல் கரந்தாய்
அருத்தனாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
பெருமான், பாலனகவும் விருத்தனாகவும் இருக்கும் நிலை இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலை (1.76.3) நினைவூட்டுகின்றது. தன்னை வழிபடும் அடியார்களின் நிலைக்கு ஏற்ப பெருமான் பாலனாகவும் விருத்தனாகவும் வடிவு கொள்கின்றார். விருத்தனாக வடிவம் ஏற்று, தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பல நிகழ்ச்சிகளை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம், சுந்தரரின் வரலாற்றினில் நான்கு இடங்களிலும் மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், பெருமான் முதியவராக வேடம் தரித்து வருவதை நாம் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுக்கும் பொருட்டு ஓலையுடன் வந்து சுந்தரரை ஆட்கொண்டபோதும், திருவதிகை சித்தமடத்தில் சுந்தரருக்கு திருவடி தீட்சை கொடுத்து பின்னர் மறைந்த போதிலும், கூடலையாற்றூருக்கு வழிநடத்தி கூட்டிச் சென்ற போதும், கருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பொதி சோறு அளித்த போதிலும் பெருமான் முதியவராக வந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம்.
விருத்தனை பாலனை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற வரை, தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள். அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியினால் வாடும் முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், ஒரு ஆடவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்தவண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, முழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக்கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்; வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு பெருமான் மறைந்தார். இது தான் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாறு.
தில்லை நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.22.9) ஊழித்தீயினில் நின்று நடமாடும் இறைவன் என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களும் ஊழியில் அழிந்த பின்னரும் நிலைத்து நிற்கும் இறைவன் அனைவருக்கும் இளையவன் என்றும், ஊழி முடிந்தவுடன் மீண்டும் உலகம் தோன்றுவதற்கு முன்னமே இறைவன் இருப்பதால் அனைத்து உயிர்களுக்கும் மூத்தவன் என்று உணர்த்தும் பொருட்டு விருத்தனாய் பாலனாய் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னிச்
திருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழ
கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே
விருத்தன் என்பதற்கு அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைவரிலும் மூத்தவன் என்றும், பாலன் என்பதற்கு அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாது இருப்பவன் என்று பொருள் கொண்டு, ஆதி அந்தமற்ற நிலையில் இருக்கும் இறைவனை விடவும் மூத்தவர் எவரும் இல்லை என்றும், அழியாமல் நிலைத்து நிற்கும் அவனை விடவும் இளையவர் எவரும் இல்லை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.2) அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் பெருமான் விருத்தனாகவும் பாலனாகவும் திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்= திருமால்; ஏலம்= நறுமணம் மிகுந்த;
மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்
பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியனாரே
தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில், அப்பர் பிரான், விருத்தனாகவும் பாலனாகவும் இருக்கும் பெருமான், தனது அடியார்களின் தன்மையை நன்கு அறிவார் என்று கூறுகின்றார். திருத்தன்=உயிர்களைத் திருத்தி ஆட்கொள்பவன், அருத்தன்= மெய்ப்பொருளாக உள்ளவன்.
ஒருத்தனர் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே
ஒருத்தன் என்பதன் மூலம் சிவபிரான் ஒப்பற்றவன் என்று அப்பர் பிரான் நமக்கு இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம், திருவண்டப்பகுதி அகவலில் வரும் வாக்கியம், ஒருவனாய் உலகேத்த நின்றவன் சிவபெருமான் என்ற செய்தியை, ஆரூர்த் திருத்தாண்டகம் ஒன்றின் முதல் அடியாக அப்பர் பிரான் வழங்குகின்றார். திருவாரூர்த் தலம் எத்தகைய பழமை வாய்ந்தது என்று இங்கே கூறப்படுகின்றது. தெரித்த என்றால் தோற்றுவித்த என்று பொருள்.
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே
மூவுருவமான நாளோ
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும்
கண் அழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான் மறிகை
ஏந்தி ஓர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்
கோயிலாக் கொண்ட நாளோ
மறைக்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.23.9) பால விருத்தனும் ஆனான் கண்டாய் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூல நோய்=கன்மம் மாயை ஆகிய மற்ற மலங்கள் நம்மை பிடிப்பதற்கு காரணமாக இருப்பதும், உயிர் தோன்றிய காலந்தொட்டே உயிருடன் கலந்திருந்து உயிர்கள் அடையும் அனைத்து துயரங்களுக்கும் மூலமாக இருப்பததால், ஆணவ மலம் மூலமலம் என்று அழைக்கப்படுகின்றது. எவராலும் அடக்க மூடியாத ஆணவ மலத்தினை அடக்குவதற்கு உதவும் பரமன் என்பதால், சிவபெருமானை முதல்வன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும்
ஆனான் கண்டாய்
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும்
அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே
போல்வான் கண்டாய்
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு
உறையும் மணாளன் தானே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.3) சுந்தரர், பெருமானை விருத்தன் என்றும் பாலன் என்றும் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம், முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகள் தாமே இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் நமக்கு விளைவிக்கின்றது. இவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் செய்யும் வினைகளை செய்வினை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். விருத்தனாக திருவதிகை சித்தமடத்தில் காட்சி அருளிய பெருமான், கயிலை மலையில் வீற்றிருந்த வண்ணம் காட்சி கொடுத்தார் அல்லவா. முதுமை அடையாத தோற்றத்துடன் இறைவன் காட்சி கொடுத்ததை பாலன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமானின் திருவுருவத்தினை பல நாட்கள் கனவினில் கண்டிருந்த சுந்தரர், இந்த தலத்தில் நேரில் கண்டுகொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறுவதை நாம் உணரலாம். பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையாத தன்மை தனக்கு இருந்ததால் தான், உய்வினை அடைந்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.
திருத்தினை நகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை
உறுத்திடும் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன்
உய்யும் காரணம் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்து எங்கும்
காணமாட்டாது விட்டிருந்தேன்
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலைக் கழுமல
வளநகர் கண்டு கொண்டேனே
அருத்தன்=பொருளாக விளங்குபவன்; வேதத்தின் என்று நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும். அறவன்=அறத்தின் வடிவமாக உள்ளவன்; அமுதன்=அமுதம் போன்று இனியவன்; பெருமான் ஒப்பற்ற ஒருவன் என்பதை உலகத்தவர் அனைவரும் உணர்ந்து கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்று சம்பந்தர் கூறுகின்றார். கருத்தவன்=உலகத்தவரின் கருத்தாக இருப்பவன்;
பொழிப்புரை:
வேதங்களின் பொருளாக விளங்குபவனும், அறத்தின் வடிவமாக உள்ளவனும், அமுதம் போன்று தெவிட்டாத இனிமையினை உள்ளத்திற்கு அளிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியமையால் அனைவர்க்கும் பழமையானவனும். அனைத்து உயிர்கள் அழிந்த பின்னரும் தான் அழியாமல் நிலையாக இருப்பதால் அனைவரினும் இளையவனாக கருதப் படுவானும் ஆகிய இறைவன் யார் என்று நீங்கள் வினவுவீராயின், உமது கேள்விக்கு நான் அளிக்கும் விடையினை கேட்பீர்களாக; ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் நமக்கு உண்மையான துணை இல்லை என்பதை கருத்தினில் கொண்டு, உலகத்தவர், தொழுது புகழ்ந்து வணங்கும் இறைவன் கடைமுடி எனப்படும் வளமான நகரத்தில் உறைகின்றான். எனவே அந்த தலம் சென்று இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீராக.