127. பிறையணி படர்சடை - பாடல் 11
நிறைந்த புகழுடன் விளங்கும் ஞானசம்பந்தன்
பாடல் 11:
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரி கடலடை கழுமலம் உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒரு பதுமுடன்
மருவிய மனமுடையவர் மதியுடையவர் விதியுடையவர்களே
விளக்கம்:
Advertisement
மலி=நிறைந்த; பெயர்=புகழ்; பெருகிய தமிழ்=பல வகையான எண்ணற்ற நூல்களைக் கொண்டு வளர்ந்த தமிழ் மொழி; விரகினன்=மிகவும் ஆழமாகக் கற்று உணர்ந்தவன்; உரை=நீர்த்துளி
பொழிப்புரை:
எண்ணற்ற நூல்களைக் கொண்டு பரந்து விரிந்த தமிழ் மொழியினை ஆழமாகக் கற்று உணர்ந்து நிறைந்த புகழுடன் விளங்கும் ஞானசம்பந்தன், நீர்த்துளிகள் கலந்த அலைகள் உடைய கடல், நீல நிறத்துடன் விரிந்து பரந்து விளங்கும் கடலினை அடுத்துள்ள கழுமலம் நகரினில் உறையும் சிவபெருமானது திருவடிகளை பெருமையுடன் பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களை, ஒன்றிய மனத்துடன் பாடும் அடியவர்கள் இம்மையில் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பின்னர், பெருமானின் திருவடிகளை அடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் நன்மை விளைவிக்கும் திருவடிகள் என்று உணர்த்தி, அந்த திருவடிகளைச் சார்ந்து நலம் பெறுமாறு சம்பந்தர் நம்மைத் தூண்டுகின்றார். கடினமான செயலாக தோன்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதை, மிகவும் எளிய செயலாக மாற்றி நன்மை புரிவான பெருமானின் கழல்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை நாள்தோறும் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்து இருப்பார்கள் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள விரும்பினால் நாம் செய்ய வேண்டியது யாது என்பதை நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் வல்லமையை நமக்கு உணர்த்தும் சம்பந்தர் ஆறாவது பாடலில் அந்த வல்லமை நமது வினைகளை பொடிபொடியாக மாற்றி நாம் முக்தி உலகுக்கு செல்ல வழி வகுக்கும் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு, நாமும் அவரை பின்பற்றும் வண்ணம் நம்மை தூண்டுகின்றார். எட்டாவது பாடலில் கழுமலம் நகரம் முற்றூழிக் காலத்திலும் அழியாது உயர்ந்து நின்றது என்று தலத்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றார். ஒன்பதாவது பாடலில் அவனது திருவடிகளைத் தொழும் அடியார்கள், ஏழு வகையான பிறப்புகளிலிருந்து விடுதலை பெற்று மேலான உலகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், பெருமானைத் தொழும் அடியார்கள் முக்தி நிலையினை அடிவார்கள் என்று கூறும் சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தை ஓதும் அடியார்கள் அறிவுச்செல்வமும் பொருட்செல்வமும் பெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, இம்மையில் கல்வியும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறுமையில் பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வோமாக