முகப்பு
தினம் ஒரு தேவாரம்

129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 7

திருமேனி முழுதும் வெண்ணீறு

Updated On : 19 மே, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:24 PM

பாடல் 7:

   வண்மை வளர் வரத்து அயனூர் வானவர் தம் கோனூர் வண்
        புகலி இஞ்சி
   வெண்மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன்
        காழி கொச்சை
   கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம்
        பூந்தராய் சீர்ப்
   பண் மலியும் சிரபுரம் பார்புகழ் புறவம் பால்வண்ணன்
        பயிலும் ஊரே

 
விளக்கம்:

வண்மை=கொடைத் தன்மை, உண்மை, வளமை, புகழ், வலிமை என்று பல பொருள் கொண்ட சொல்; வரத்து=மேன்மை உடைய; வண்=வளமை; இஞ்சி=மதில்சுவர்; பால் வண்ணன்=திருமேனி முழுதும் வெண்ணீறு பூசியமையால் பால் போன்று வெண்மை நிறத்துடன் விளங்கும் மேனியை உடைய சிவபெருமான்; மிக்கோர்=மேம்பட்டவர், கல்வி, கேள்வி, ஞானம், கொடை, தவம், தொண்டு, சிவநெறி ஆகியவற்றில் மேம்பட்டோர்;  வியன்=பரந்த; இங்கே பரந்த பெருமையினை உடைய என்று பொருள் கொள்ள வேண்டும்; கண் மகிழும்=கண்களுக்கு இனிய காட்சியினை நல்கும்; பண் மலியும்=பெருமானின் புகழ் குறித்த பாடல்கள் இடைவிடாது ஒலிக்கும்; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்.

Advertisement

கற்றவர்கள் என்று உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிலையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்று உணர்ந்தோர்   அவனை வழிபட்டு பயனடைவார்கள். பல திருமுறைப் பாடல்களில் கற்றவர்கள் பெருமானை வழிபடுவது குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.129.11) கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்து ஈசன் என்று குறிப்பிடுகின்றார். நல்லோர்களுக்கு துணையாக தேவாரப் பதிகங்கள் அமையும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

    கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன் தன் கழல்
        மேல் நல்லோர்
    நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான்
         நயந்து சொன்ன
    சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார்
         தூமலராள் துணைவராகி
     முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர
          முயல்கின்றாரே  

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில், திருஞானசம்பந்தர் பெருமானை, கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். பெற்றம்= இடபம்; பெருமானின் புகழினைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் தான் பேசுவதில்லை என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அரணம்=கோட்டை; உற்றவர்=மெய் உணர்வு உற்று சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று உணர்ந்தவர்கள்; உம்பர்= தேவர்கள்;  

  செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாய் எரி ஊட்டி நின்றும்
  கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
  உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
  பெற்றம் அமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சு இலோமே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.3) அப்பர் பிரான், கற்றவர்கள் புகழ்ந்து பாடும் பெருமான், ஆதரவற்றவரிடம் அன்பாக இருப்பார் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழியை நினைவூட்டுகின்றது. உற்ற நோய்=உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்= வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
    செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
    கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
    அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே  

கற்றவர்க்கு கற்பகமாய் நிற்பவன் என்று திருவையாறு பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வள்ளுவரும் கல்வி கற்பதன் பயனே இறைவனைத் தொழுவது தான் என்பதை உணர்த்துகின்றார். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்;

    உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர்
         சுற்றமாய் நின்றாய் நீயே
    கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய்
         நின்றாய் நீயே
    பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி
         என்மேல் வைத்தாய் நீயே
    செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத
        செம்பொன் சோதீ

இந்தக் கருத்தை உள்ளடக்கி, சேந்தனார் தமது, வீழிமிழலை திருவிசைப்பா பதிகத்தில், சிவபிரானை கற்றவர்களுக்கு கற்பக கனியாகவும், மற்றவர்கள் அறிய முடியாத மாணிக்க மலையாகவும் இருப்பவன் சிவபிரான் என்று கூறுகின்றார்.

 கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரை இலாக் கருணை மா கடலை
 மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை
 செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழிமிழலை வீற்று இருந்த
 கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே

சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தில் கற்றவர் தொழுது ஏத்தும் நற்றவா என்று சிவபிரானை அழைக்கின்றார். நமச்சிவாய என்று தொடர்மொழியாய் சொல்லும்போது, சிவனுக்கு வணக்கம் என்று ஒரு பொதுவான பொருளினைத் தருவதால் இந்த ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது

    மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
    பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே         

பொழிப்புரை:

கொடைத்தன்மை, வளமை, உண்மை, புகழ் மற்றும் வலிமை கொண்ட சான்றோர்கள் வாழ்வதால் மேன்மையடைந்து, மேலும் மேலும் கீர்த்தியுடன் வளரும் பிரமபுரம், வேணுபுரம், செழிப்புடன் விளங்கும் புகலி, சந்திரனை நெருங்கும் வண்ணம் உயர்ந்த மதில்கள் கொண்ட வெங்குரு, உயர்ந்தவர்கள் இறைவனை வேண்டி வழிபடும் சண்பை,   அகன்ற புகழினை உடைய காழி, கொச்சைவயம், செழிப்புடன் பசுமையாக விளங்குவதால் காண்போர் கண் மகிழும் வண்ணம் அமைந்துள்ள கழுமலம், கற்றவர்கள் பெருமானை புகழும் தோணிபுரம், பூந்தராய், சிறந்த பண்களுடன் பொருந்திய பாடல்கள் இடைவிடாது பாடப்படும் சிரபுரம், உலகம் புகழும் புறவம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலம், உடல் முழுதும் திருநீறு பூசியமையால் பாலின் நிறத்தில் திருமேனியை உடைய சிவபெருமான் தொடர்ந்து உறையும் தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.