129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 10
வேதங்களை நாள்தோறும்
பாடல் 10:
மேல் ஓதும் கழுமல மெய்த்தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன் தனூர் நுண்ணறிவார் குருப் புகலி தராய் தூநீர் மேல்
சேலோடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே
விளக்கம்:
மேல்=மேலோர்; மெய்ந்நூல்=வேதங்கள்; மெய்த்தவம்=உண்மையான தவம்; குரு=வெங்குரு; செருச் செய்து அன்று என்ற தொடர் மூலம், பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் எவர் உயர்ந்தவர் என்று ஒருவருக்கொருவர் இடைவிடாது வாதம் செய்த நாளினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
Advertisement
பொழிப்புரை;
உயர்ந்தவர்கள் போற்றும் கழுமலம், உண்மையான தவத்தில் ஆழும் தவசிகள் அதிகமாக வாழும் கொச்சைவயம், வேணுபுரம், உண்மையை உரைக்கும் வேதங்களை நாள்தோறும் ஓதும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், நுண்ணிய அறிவினை உடைய சான்றோர்கள் வாழும் வெங்குரு, புகலி, பூந்தராய், தூய்மையான நீரினை உடைய நீர்நிலைகளில் மீன்கள் துள்ளித் திரியும் தோணிபுரம், புகழுடன் திகழும் புறவம், சிலம்பன் வழிபட சிரபுரம், தம்மில் யார் பெரியவன் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்ட பிரமனும் திருமாலும் வாதம் செய்த நாளன்று அவர்களின் எதிரே நீண்ட நெருப்புப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காணாத வண்ணம் நின்ற பெருமான் உறையும் காழி, சண்பை என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, உலகத்தவர் அனைவரும் வாழ்த்தும் ஊராகும்.