முகப்பு
தினம் ஒரு தேவாரம்

129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 11

புண்ணிய தீர்த்தங்களையும்

Updated On : 23 மே, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:24 PM

பாடல் 11:

  ஆக்கமர் சீரூர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
  ஓக்கம் உடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவ நண்பார்
  பூக்கமலத்தோன் மகிழூர் புரந்தரனூர் புகலி வெங்குருவும் என்பர்
  சாக்கியரோடு அமண் கையர் தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே

விளக்கம்:

Advertisement

அன்பான் ஊர்=அன்பே உருவமாக உடைய சிவபெருமான் உறையும் இடம்; ஆக்கு=ஆக்கம்; நண்பு என்ற சொல் இங்கே பக்தியை குறிக்கின்றது. ஓக்கம்=உயர்வு; அன்பே உருவமாக உள்ள பெருமான் உறைவதால் உயர்வாக கருதப்படும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்=ஒளி மிகுந்த; புரந்தரன்=இந்திரன்; புரந்தரன் ஊர்=வேணுபுரம்  

பொழிப்புரை:

செல்வங்களை படைக்கும் சிறப்பு வாய்ந்த சண்பை, காழி, புகழும் பெருமையும் அமர்கின்ற கொச்சைவயம், கழுமலம், அன்பே உருவமாக அமர்ந்து அனைவரிலும் உயர்வாக உள்ள பெருமான் உறையும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒளி மிகுந்த புறவம், தாமரை மலரில் உறையும் பிரமன் பக்தியுடன் வழிபட்டு பயனடைந்து மகிழ்ந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், வேணுபுரம், புகலி,  வெங்குரு என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம், புத்தர்களும் சமணர்களும் அறியாத வகையில் நிற்கும் இறைவன் சிவபெருமான் தங்கும் ஊராகும்.  

பாடல் 12 :

 அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர்ப் பொய்கை    
 புக்கரம் சேர் புறவம் சீர்ச் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல்லூர்
 மிக்கரம் சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுரம் அயனூர் மேவிச்
 சக்கரம் சீர்த் தமிழ் விரகன் தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே

விளக்கம்:

தரிப்போர்=மனதினில் தரிப்பவர்கள், நினைவு கொள்வோர்; அக்கரம்=அக்ஷரம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; க்ஷரம்=அழிவு, அக்ஷரம்=அழிவின்மை; உயிர்கள் செய்த தவற்றினுக்கு ஏற்ப நரகத்தில் தண்டனை விதிக்கும் ஆற்றலை இயமன், சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி தவமிருந்து பெற்றதால், வெங்குரு என்ற பெயர் வந்ததாக  தலபுராணம் கூறுகின்றது. பிறிதொரு பதிகத்தில் வெங்கோத் தருமன் பேணியாண்ட வெங்குரு என்று சம்பந்தர் கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. தருமனூர்=வெங்குரு; புக்கரம்=தாமரை மலர்; புக்கரம் என்ற சொல்லினை புஷ்கரம் (புண்ணிய தீர்த்தம்) என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும் கூறுவார்கள்; மிக்கரம் சீர்=மிக்கு+அரன்+சீர்;        

பொழிப்புரை:

தருமனூர் என்று அழிவற்ற தன்மை உடைய வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், புண்ணிய தீர்த்தங்களையும் பொய்கைகளையும் தனக்கு அணிகலனாகக் கொண்டு நீர்வளத்துடன் திகழும் புறவம், சிறப்பு வாய்ந்த சிரபுரம், புகழ் வாய்ந்த காழி, தொன்மை வாய்ந்த சண்பை, பழமையானதும், பெருமானது பெருமை மிகுதியாக உள்ளதும் ஆகிய கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், ஆகிய பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலத்தின் மீது சக்கரமாக தலத்தின் பெயர்கள் சக்கரத்தின் சட்டங்கள் போன்று மாறி மாறி வரும் வண்ணம், தமிழில் புலமை கொண்ட ஞானசம்பந்தன் சொன்ன இந்த பதிகத்தின் பாடல்களை அன்புடன் மனதினிலும் நாவிலும் தரித்து ஓத வல்லார்கள் சிறந்த தவம் செய்தவர்களுக்கு சமமாக கருதப் படுவார்கள்.  

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிப்பதற்கு முருகப் பெருமானை தோற்றுவித்தவன் என்றும், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தேவர்களின் அச்சத்தை தீர்த்தவன் என்று இரண்டாவது பாடலிலும், சிறுவன்  மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்து வீழ்த்தியவர் என்று பதிகத்தின் ஆறாவது பாடலிலும், தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் மேனி முழுவதும் திருநீறு பூசிய பெருமான் என்று ஏழாவது பாடலிலும், எவராலும் வெல்ல முடியாது என்று செருக்குடன் திரிந்த திரிபுரத்து அரக்கர்களை வென்றவன் என்று எட்டாவது பாடலிலும், இராவணனின் வலிமையை அழித்தவன் என்று ஒன்பதாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் உணர முடியாத வண்ணம் நெடிது உயர்ந்தவன் என்று  பத்தாவது பாடலிலும் சமணர்களும் புத்தர்களும் அறிய முடியாத தன்மை உடையவன் என்று பதினோராவது பாடலிலும் பெருமானின் பெருமைகள் உணர்த்தப் படுகின்றன.  மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் தலத்தில் வாழும் அடியார்களின் பெருமை உணர்த்தப்பட்டு, பெருமானை வழிபட்டு அவனது அருள் பெற்று நாமும் அத்தகைய பெருமைகளுடன் விளங்கலாம் என்பதும் உணர்த்தப் படுகின்றது.
        
தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், தலத்தின் பெருமைகளையும் ஆங்காங்கே உணர்த்துவது பாடலுக்கு மெருகூட்டுகின்றது. மேலும் பெருமானின் சிறந்த தன்மைகளும் செயல்களையும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் தோத்திரப் பாடல்களாகவும் இந்த பதிகம் அமைந்துள்ளது. பன்னிரண்டு பெயர்கள் மாறி மாறி குறிப்பிடப்பட்டாலும் பாடலில் எதுகை நயம் சேர்க்கப்பட்டும், பண்ணுடன் இணைத்து பாடுவதற்கு ஏற்ப சந்த அமைப்புடன் பாடல்கள் அமைந்திருப்பது ஞான சம்பந்தரின் புலமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பெருமான் உறையும் தலத்தின் பல பெயர்களை மந்திரம் போல் மீண்டும் மீண்டும் உரைப்பது தவத்திற்கு சமமானது  என்று கடைப் பாடலில் உணர்த்தப்பட்டு பதிகம் ஓதுவோர் அனைவரையும் தவநெறியில்  சம்பந்தர் ஈடுபடுத்துகின்றார். நாமும் இந்த பதிகத்தை ஓதுவதன் மூலம், சிவபெருமானை குறித்து செய்யப்படும் தவத்தில் ஈடுபட்டு அந்த தவத்தின் பயனடைந்து இம்மையில்  துன்பங்கள் தீர்ந்து மறுமையில் என்றும் அழியாத இனபத்தினை பெறுவோமாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.