முகப்பு
தினம் ஒரு தேவாரம்

130. தண்ணார் திங்கள் - பாடல் 9

இறைவனின் திருவடி

Updated On : 1 ஜூன், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:32 PM


பாடல் 9:

    செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்
    அங்கமலக் கண் நோக்க அரும் வண்ணத் தழல் ஆனான்
    தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்
    அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே

விளக்கம்:

Advertisement

அங்கமலக்கண்=அங்கு+அம்+மலக்+கண்; அங்கு=பிரமனும் திருமாலும் தமக்குள்ளே யார்  பெரியவன் என்று  வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில்; அம் மலக்கண்=இறைவனின் திருவடியையும் திருமுடியையும், தங்களது கண்களால் காண்போம் என்று செருக்குடன், பிரமனும் திருமாலும் முயற்சி செய்ததால், அவர்களது கண்களை மலக்கண் என்று கூறுகின்றார். பெருமானை அணுக வேண்டிய முறையில் பிரமனும் திருமாலும்  அணுகாமல் இருந்ததை அப்பர் பிரான், இலிங்க புராண குறுந்தொகை பதிகத்தின் (5.95) முதல் பத்து பாடல்களில் கூறுகின்றார். பிரமன் திருமால் ஆகிய இருவரும், பெருமானை எவ்வாறெல்லாம் வழிபட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடல்களில் குறிப்பிட்டு, அவர்கள் செய்யத் தவறியதை பாடல் தோறும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் இருவர் இருவர் என்றே அப்பர் பிரான் குறிப்பிட்டு அவர்கள் செய்யத் தவறிய செயல்களை பட்டியல் இட்டு, அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு முயற்சி செய்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் தான், செங்கணான் மற்றும் பிரமன் ஆகிய இருவரே பதிகத்தின் முந்திய பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர் என்று நமக்கு உணர்த்துகின்றார். எவ்வாறு இறைவனை வணங்க  வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறியது, இங்கே சுருக்கமாக தரப்படுகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் இறைவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான்  கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், அவர்கள் இருவர் மீது இரக்கம் கொண்ட பெருமான் இலிங்கத்தின் உருவில் தோன்றி அவர்களுக்கு காட்சி கொடுத்தான் என்று அப்பர் பிரான் முடிக்கின்றார்.

தங்கமலக் கண்ணார்=தங்கு+அமலக்+கண்ணார்; அமலம்=மலம் நீங்கிய நிலை; ஞானக் கண் உடையவர்; மலம் என்றால் பொதுவாக ஆணவ மலத்தினை குறிக்கும். அறியாமை நிலையினை ஆணவ மலமே உண்டாக்குவதால், மலம் நீங்கிய நிலை என்பது அறியாமை நீங்கிய நிலையினை குறிக்கும். அங்கமலத்தோடு=அம்+கமலத்தோடு; உள்ளம் அங்கமலத்தோடு=தாமரை போன்ற அழகிய உள்ளத்தோடு; பெருமானைத் தொழும் அடியார்கள், ஆணவ மலம் நீங்கியவர்களாக இருப்பதால், அவர்களை அழகிய தாமரை மலர் போன்று உள்ளத்தவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உள்ளத்தால் இறைவனை வணங்குதல் அக வழிபாடாக கருதப் படுகின்றது. திருக்கோயில் சென்று இறைவனின் மூர்த்தத்தைக் கண்டு வழிபடுவது புறவழிபாடு எனப்படும். திகழ் கோயில் என்று குறிப்பிட்டு புறவழிபாட்டினை குறிக்கும் சம்பந்தர்  அங்கமலத்தோடு என்று குறிப்பிடுவதால், அகவழிபாடு செய்வோர் புறவழிபாட்டினை கைவிடாமல் ஈடுபடவேண்டும் என்று உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர். தனது மொழிகளால் தூண்டப்பட்டு இந்த தலம் செல்லும் அடியார்கள் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும்  என்று இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.          
பொழிப்புரை:

சிவந்த தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில், நெடிது உயர்ந்த தழற்பிழம்பாய் பெருமான் தோன்றிய போது, பெருமானின் திருவடியையும்  திருமுடியையும் எளிதில் கண்டு விடலாம் என்று தங்கள் வலிமை மீது தாங்கள் கொண்டிருந்த செருக்கின் விளைவால் மிகுந்த நம்பிக்கையுடன், தங்களது ஊனக் கண்களின் துணையால் கண்டுவிடலாம்   என்று இருவரும் முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி காணவில்லை. இவ்வாறு அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் நீண்டு உயர்ந்த பெருமான், ஆணவ மலத்தினை அடக்கும் வல்லமை வாய்ந்த கண்ணார்கோயில்  தலத்தில் உறைகின்றார். இந்த தலத்தில் உள்ள பெருமானை நேரில் கண்டு புறவழிபாடு மற்றும் உள்ளத்தில் நினைத்து அகவழிபாடு செய்து பெருமானை போற்றி வழிபடும் அடியார்களே அமரர் உலகத்தினைச் சென்று அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.