ஜனவரி
5: சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
6: சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை எனக் குற்றஞ்சாட்டி உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
9: "தமிழக உயர் கல்வி முறைக்கு பாதிப்பு' - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்.
23: தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு அறிமுகம் ஆகிவிட்டது. அதற்கான ஆய்வு முடிவுகள் நம்மிடம் இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
23: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு ஜன. 23-இல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
பிப்ரவரி
6: திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலை உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
25: தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களின் டிஜிட்டல் சேவைகளை தங்குதடையின்றி வழங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன தகவல் தரவு மையம் திறப்பு.
மார்ச்
7: சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு.
13: தமிழக அரசு முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை (2024-2025) வெளியிட்டது. இதில், இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
27: திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி வீர கோவில் வனப் பகுதியை, பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்தது.
ஏப்ரல்
1: கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்குரைஞர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
9: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5,476 ஏக்கரில் ரூ.27,400 கோடி செலவில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
10: பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 2026- ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை சென்னையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்து அறிவித்தார்.
12: துணைவேந்தர்களை முதல்வர்கள் நியமிக்கலாம் என்பது உள்பட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசிதழில் வெளியீடு.
12: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.
மே
10: பல்லாவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியின் தாய் உள்பட 13 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
13: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்த கோவை மகளிர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 9 பெண்களுக்கும் தலா ரூ.85 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6.8 கோடியை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
16: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை. சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் விசாகன் விடுவிக்கப்பட்டார்.
18: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பின் ஐசிடி பாடப் புத்தகத்தின் முதல் தொகுதியில் ரோபோக்களின் உலகம் என்ற அத்தியாயம் அறிமுகம். இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் 4.3 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அறிவிப்பு.
22: டாஸ்மாக் நிறுவனம் மீதான ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான சோதனை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அதை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
24: தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
28: திருவொற்றியூரில் ரூ.272.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் மு.க.
ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசும்போது, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
31: பாமகவில் அன்புமணியிடம் இருந்த கட்சித் தலைவர் பதவியைப் பறித்து, அவரை செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ்.
ஜூன்
2: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குறைந்தது 30 ஆண்டுகளுக்கு நன்னடத்தை விடுதலை, பரோல் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
3: செம்மொழி தமிழ் ஆய்வுக்கு பெரும் பங்காற்றியதற்காக, 2025- ஆம் ஆண்டுக்கான "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது' தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கப்பட்டது.
16: காதலர்கள் கலப்புத் திருமணம் செய்த வழக்கில், பெண்ணின் வீட்டார், இளைஞனின் 17 வயது தம்பியை கடத்திச் செல்ல தமிழ்நாடு ஆயுதப் படை காவல் துறை ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தபோது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
23: போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், வைத்திருந்ததாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
24: திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுதலைத் தடை செய்தல் மற்றும் மலையின் பெயரை மாற்றுதல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இறுதி முடிவை எடுக்க மூன்றாவது நீதிபதியை நியமிக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
26: போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
28: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்(27), தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணம். இதுதொடர்பாக காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
30: காற்று மாசை தடுக்கும் வகையில், ரூ.207.90 கோடி செலவில் 120 மின்சார பேருந்துகளை சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து போலீஸார் கைது.
ஜூலை
1: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.
2: தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் தொடக்கம்.
8: கடலூர் மாவட்டம், செம்மாங்குப்பத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
11: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டது.
13: சென்னையிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் அருகே சென்றபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
14: ரயிலில் பயணித்த கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ய முயன்ற குற்றவாளி கே.ஹேமராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெற்கு ரயில்வே மற்றும் மாநில அரசு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
21: சென்னை உயர்நீதிமன்ற 54-ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்.
23: சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் (27), காதல் விவகாரத்தில் திருநெல்வேலியில் ஆணவப் படுகொலை.
25: நடிகர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
ஆகஸ்ட்
2: அரசுத் திட்டங்களில் உயிருடன் இருக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததற்கு நடுவே "நலம் காக்கும் ஸ்டாலின்' எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8: இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை அறிக்கையை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
12: தமிழகத்தில் தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் தொடக்கம்.
13: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது.
செப்டம்பர்
5: பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
6: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக அமைப்புச் செயலர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளிலிருந்து பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நீக்கினார்.
11: பாமக தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கினார்.
13: தவெக தலைவர் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் திருச்சியில் தொடங்கியது.
15: பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களது 18 வயது வரை மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கும் "அன்புக் கரங்கள்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
21: ரூ.33 கோடியில் சென்னை துறைமுகத்தில் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
22: சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களுக்கான பயணச்சீட்டை பெறும் வகையில் " சென்னை ஒன்' செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
27: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர்
11: சென்னை கொளத்தூரில் சிஎம்டிஏ சார்பில் ரூ.53 கோடி மதிப்பில் வண்ணமீன்கள் வர்த்தக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
14: போக்úஸா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தாக்கல் செய்யும் வழக்கமான ஜாமீன் மனுக்கள், மேல்முறையீடு ஜாமீன் மனுக்கள் மற்றும் தண்டனை நிறுத்தம் தொடர்பான மனுக்களை பரிசீலிக்கும்போது, பாதிக்கப்பட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு.
25: பாமக செயல் தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி பரசுராமனை நியமிப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் அறிவித்தார்.
31: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாகக் கலந்து கொண்டதையடுத்து, செங்கோட்டையனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நீக்கினார்.
நவம்பர்
2: கோவையில் நண்பருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
4: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடக்கம்.
14: திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயனுக்கு கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
25: கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ரூ.208.50 கோடியில் உலகத் தரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
27: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். உயர்நிலை மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
30: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே, 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 49 பேர் காயமடைந்தனர்.
30: வங்கக் கடலில் நவ. 27-இல் உருவான டித்வா புயலால் இலங்கையில் பலத்த மழை, நிலச்சரிவால் சுமார் 400 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. நவ. 30-இல் புடல் கரையைக் கடக்காமலேயே வலுவிழந்தது.
டிசம்பர்
1: கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
3: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் போலீஸாரின் தடுப்புகளை மீறி இந்து அமைப்பினர் தீபம் ஏற்ற முயற்சி மேற்கொண்ட போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு போலீஸார் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
5: ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் அமெரிக்காவின் கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனமும், இந்தியாவின் ஆப்டிமஸ் இன்ப்ரோகிராம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து அமைத்த ரூ.1,003 கோடி மதிப்பிலான மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
12: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 16.94 லட்சம் மகளிர் புதிதாகச் சேர்ப்பு. பயனாளிகள் எண்ணிக்கை ரூ.1.30 கோடியாக உயர்வு.
15: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்திலும் உச்சமாக பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது.
20: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு உடையவர்கள் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
26: "சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,400 பேர் கைது செய்யப்பட்டனர்.
29: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து செளமியா அன்புமணி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டார்.
30: அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
30: காசி- தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வின் நிறைவு விழா ராமேசுவரத்தில் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.