புதையுண்ட தமிழகம்

தமிழகத்தில் காணப்படும் தொடர் நிலைப் பண்பாடு

மட்கலன்களின் அடிப்படையிலேயே பெருங்கற்காலப் பண்பாடு வேறுபடுகிறது. வண்ணப்பூச்சு பூசப்பட்ட மட்கலன்கள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மட்டும் காணமுடிகிறது. கொடுமணல் அகழாய்வில் வண்ணப்பூச்சு பூசப்பட்ட மட்கலன்களில் (Russet Coated Painted Pot Sherd) தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன.

ச. செல்வராஜ்

வட தமிழகத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே மக்கள் வாழத் துவங்கியுள்ளனர் என்பதை வரட்டனபள்ளியில் கிடைத்த பழைய கற்காலக் கோடரிகள் சான்று பகர்கின்றன*1. இதனைத் தொடர்ந்து, வட தமிழகத்தில் மேற்கொண்ட பையம்பள்ளி, மோதூர், மயிலாடும்பாறை போன்ற அகழாய்வுகளில் காணப்பட்ட தரவுகள், வரலாற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

வட தமிழகத்தில், பழைய கற்காலப் பண்பாட்டினைத் தொடர்ந்து நுண் கற்காலப் பண்பாடு பரவலாக இருந்துள்ளது*2. அதனைத் தொடர்ந்து, புதிய கற்காலப் பண்பாடு வட தமிழகம் முழுவதும் பரவலாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. இதனை முள்ளிக்காடு, தையல்மலை, கப்பல்வாடி, மயிலாடும்பாறை, மோதூர், பாலக்கோடு அருகே பிக்கனல்லிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளும், கள ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன*3. புதிய கற்கால மக்கள் படன்படுத்திய பல்வேறு விதமான கற்கருவிகள் மோதூர் அகழாய்வில் மண்ணடுக்குகளில் இருந்தே வெளிப்பட்டது கவனிக்கத்தக்க சான்றாகும்*4.

கொடுமணல் அகழாய்வில் ஊது உலை

கொடுமணல் அகழாய்வு, வட தமிழகத்தில் பெருங் கற்படைப் பண்பாடு எவ்வாறு செழிப்புற்றிருந்தது என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும். இங்கு கிடைத்த தொல்லியல் தரவுகளில் முதன்மையானது ஊது உலை. அடுத்ததாக மட்கலன்கள், மணிகள், எழுத்து பொறித்த மட்கலன்கள் ஆகியவை உள்ளன. இது, தென் தமிழகத்தைக் காட்டிலும் வட தமிழகத்தில் இப்பண்பாடு எவ்வாறெல்லாம் வளர்ச்சி அடைந்து சென்றுள்ளது என்பதைக் காட்டுகின்றது*5. தென் இந்தியாவிலேயே, குறிப்பாக தமிழக அகழாய்வுகளிலிலேயே வட தமிழகத்தில் அதிக அளவில் எழுத்து பொறித்த மட்கலன்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக கொடுமணல் மட்டுமே இருக்கிறது என்பதை உறுதிபடக் கூறலாம்.

கொடுமணல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட உலைக்கலன். (நன்றி - The Hindu)

இரும்பை உருக்கி அதனை வடிவமைக்கும் தொழில்நுட்பமும், மட்கலன் தயாரிப்பதில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மட்கலனும் (Russet Coated Painted Pottery) தமிழகத்தைச் சார்ந்தது என்பதை உணரமுடிகிறது. ஏனெனில், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மட்கலனில் காணப்படும் தமிழ்பிராமி எழுத்துகளும் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளதால், இவை இங்கு தயாரிக்கப்பட்டவையே என்பதை சுட்டிநிற்கின்றன.

ஒவ்வொரு புதைக்குழிகளின் ஆய்வின்போதும், ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளதும், பிற மணிவகைகள் காணப்பட்டதும், மணிகள் செய்யும் தொழில்பட்டறை அமைந்த இடமாக கொடுமணல் இருந்திருத்தல் கூடும் என்பதை உணர்த்துகிறது. இதனை உறுதி செய்வும் வகையில், அண்மையில் முனைவர் கா. ராஜன் அவர்கள் தலைமையில் மேற்கொண்ட அகழாய்வில், வட்டவடிவமான உலைக்கலன் அமைந்திருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளனர். மேலும், இந்த ஆய்வின் மூலம், இப்பகுதி ஒரு வணிகத்தலமாக இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்படுகிறார். அதனை உறுதி செய்யும் விதமாக, இங்கு பலவகையான மணிகளும், அறுத்த சங்குகளும், சங்கு வளையல்களும் மிகுதியான எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. அத்துடன், அவை தயாரிப்பதற்கான தொழிற்பட்டறை அமைந்த இடத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.

மேலும், வட இந்தியப் பகுதியிலிருந்து வந்த பளபளப்பான கருப்பு மட்கலன் (NBPW - Northern Block Polished Ware) துண்டுகள் இரண்டினை, இவ்வகழ்வாய்வில் கண்டெடுத்துள்ளார்கள். மகத நாட்டுத் தயாரிப்பான இம்மட்கலம், தமிழகம் வந்தற்கு வணிகத் தொடர்பே காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஏற்கெனவே, தமிழக அகழாய்வுகளில் இவ்வகையான மட்கலன்கள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வணிகத்தலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள கொற்கை, அழகன்குளம், கரூர் போன்ற இடங்களிலும் இவ்வகை பானை ஓடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. எனவே, பலவகை பொருட்கள் செய்யும் தொழில்நுட்பத்திலும், அவற்றை தொழிற்பட்டறைகள் அமைத்து உற்பத்தி செய்வதிலும், அவற்றை சந்தைப்படுத்துவதிலும் தமிழக மக்கள் தேர்ச்சி பெற்றிருந்துள்ளனர். வட இந்தியரையும் அயல்நாட்டினரையும் கவரும் வகையில் இவர்களது தொழில்நுட்பம் சிறந்தோங்கி இருந்தது எனலாம்.

வளமைச் சடங்குகளும் சமயநிலைத் தோற்றமும்

பெருங் கற்படைச் சின்னங்களின் அடிப்படையில், அப்பண்பாட்டின் இறுதிக் காலகட்டத்தைச் சார்ந்ததாக நமக்கு இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படை கொண்டும், சங்க இலக்கியங்களின் கூற்றுபடியும், வரலாற்றின் துவக்க காலத்தைச் சார்ந்த நடுகற்களின் தோற்றத்தைக் கொண்டும் சில கருத்துகளை இங்கு பதிவு செய்தல் வேண்டும்.

அனைத்து சான்றாதாரங்களையும் ஒப்பு நோக்கும்பொழுது, பெருங் கற்படைக் காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் அமைக்கப்பட்டவைதான், குத்துக்கல் வகை என்பது அறியமுடிகிறது. ஏனெனில், முதலில் ஒழுங்கற்ற, உயரமான, கீழ்ப்பகுதி தடித்தும், மேல்பகுதி கூர்மையாகவும் அமைந்த குத்துக்கல்*6 அமைப்பும், அடுத்து நன்கு ஒழுங்குபடுத்திய பலகைக்கல் போன்ற குத்துக்கற்களும், அடுத்த நிலையில் குத்துக்கல்லின் தலைப்பகுதியை அரைவட்ட வடிவில் நன்கு செதுக்கப்பட்டு நடப்பட்ட குத்துக்கற்களும்*7, அடுத்த நிலையில் உருவம் பொறித்த குத்துக்கற்களாக உள்ளவைதான் நடுகற்கள். இவற்றில், முதலில் உருவம் பொறித்தவை என்றும், அடுத்ததாக எழுத்து பொறித்த நடுகற்கள் எனவும் வரிசைப்படுத்தலாம்.

இங்கு குறிப்பிட்ட, அரைவட்ட வடிவிலான நடுகற்களே வளமைச் சடங்கைக் குறிக்கும் வழிபாட்டின் தோற்றமாக இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குடிமல்லம் லிங்க வடிவத்த ஓர் நடுகல் என்றும் அது பெருங் கற்படைக் காலத்தின் வளர்ச்சி நிலை என்றும் குறிப்பர். அதன் தொடர்ச்சியே, வரலாற்றுக் காலத்தின் சமயநிலைத் தோற்றத்துக்கும் வளமைச் சடங்கின் எச்சம் என்றும் கூறுவர்.

சமயங்கள் வரத் துவங்கிய பின்னர் உருவ வழிபாடும், அதற்கென கோயில்கள் அமைத்தலும், பெருங் கற்கால நினைவுச் சின்னங்களின் அடியொற்றியே என்பது திண்ணம். இவை அனைத்தும், சங்க காலத்தின் தொடக்க நிலை என்பதும், வரலாற்றின் ஆரம்பம் என்றும் எழுத்து பொறித்த நடுகற்கள் வாயிலாகவும் உணரமுடிகிறது.

எனவே, தமிழகப் பெருங் கற்படைக் காலப் பண்பாட்டினை ஆய்வு செய்யும்பொழுது, நினைவுச் சின்னங்களில் காணப்படும் தொல்பொருட்களின் அடிப்படையிலும் பகுத்து ஆய்வு செய்தலே சரியான காலக் கணிப்பை வழங்க இயலும் என்பது எனது கருதாகும்.

பெருங் கற்படைக் காலத்தின் உட்பகுப்பு

அகழாய்வுகளில் காணப்படும் மண்ணடுக்குகளைக் கொண்டும், அங்கு கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டும், தமிழக பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலத்தை இரண்டு காலகட்டங்களாக உட்பகுப்பு கொண்டு ஆய்தல், இப்பண்பாட்டின் காலப்பகுப்புக்கு உறுதுணையாக அமைவதோடு மட்டுமின்றி, இதன் வளர்ச்சி நிலையையும் தெளிவாக உணர வழிவகுக்கும். அதன்படி, தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளில், கீறல் குறியீடுகள் காணப்படும் மண்ணடுக்குகள் வரை உள்ளவற்றை வரலாற்றுக்கு முற்பட்ட பெருங் கற்படைக் காலத்தின் ஒரு பிரிவாகவும், அதனை அடுத்துக் காணப்படும் எழுத்து பொறித்த மட்கலன்கள் காணப்படும் மண்ணடுக்குகள் கொண்ட பகுதியை வரலாற்றின் தொடக்கக் காலத்திய (சங்க காலத்தின் துவக்கம்) பெருங் கற்காலப் பண்பாட்டின் அடுத்த நிலைகள் என்றும் பகுத்துக் கொண்டால், காலக்கணிப்புக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை.

மேலும், மேல் நோக்கி தொடர்ந்து காணப்படும் மண்ணடுக்குகளை, தொல்பொருட்களுக்கு ஏற்ப அதன் வளர்ச்சி நிலையை சங்க காலத்தின் தொடக்கக் காலமாகவும் கருதி ஆய்வினை மேற்கொள்ளுதல் அவசியமாகிறது. அகழாய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில், முதலில் மண்ணடுக்குகளையும், தொல்பொருட்களையும், மட்கலன்களையும் பகுத்துக்கொள்ளுதல் அவசியமாகிறது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் காலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்த இரண்டு உட்பிரிவின்படி தொல்பொருட்களையும் பகுத்தல் வேண்டும். அவ்வாறு பகுக்கும்பொழுது, இரும்பு பொதுவானதாகக் கருதப்படுகிறது. எனவே, இரும்பு பற்றிய செய்திகளை முதலில் காண்போம்.

இரும்புத்தாது

இப்பண்பாட்டுக் காலத்தில்தான் இரும்பின் அறிமுகமும், பயன்பாடும் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் கஞ்சமலை இரும்புதான் மிகவும் பழமையானது என ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது*8. இக்கருத்து பற்றி விரிவாகப் பின்னர் காண்போம்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், பெருங் கற்படைப் பண்பாட்டை ஒட்டிய அகழாய்வுகள் மொத்தம் 65 ஆகும்*9. இவற்றிலும் வாழ்விடங்களை காட்டிலும் புதைக்குழிகளில் மேற்கொண்ட அகழாய்வுகள் குறைவே ஆகும். இங்கு காணப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில் பெருங் கற்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் முன்னேற்றங்களையும், தொழில் வளர்ச்சியையும் காணலாம்.

பெருங் கற்படைக் காலப் பண்பாட்டில் காணப்படும் தொல்லியல் சான்றுகள்

1. மட்கலன்கள்

பெருங் கற்படைக் கால மக்கள் தங்களது தேவைக்காகவும் அன்றாட பயன்பாட்டுக்காகவும் பல்வேறு விதமான மட்கலன்களைத் தயார் செய்துள்ளனர். நீர் மற்றும் பிற திரவப் பொருட்களையும், தானியங்களையும் சேமித்து வைக்க பெரிய பெரிய சாடிகளையும், பெரிய அளவிலான குடங்களையும் (Pots), உணவு சமைப்பதற்காகப் பல வடிவங்களில் சட்டிகளும், கிண்ணங்களும் (Bowls), தண்ணீர் மற்றும் பிற திரவப் பொருட்களை அருந்துவதற்காக குவளைகளும் (Cups), சாப்பிடுவதற்கு வட்டில்களும் (Plats), கலயங்கள் மீது மூடுவதற்கு அலங்கார கைப்பிடிகள் கொண்ட மூடிகளும் (Lid with decorated Knobs) மட்கலன்கள் வைப்பதற்கானத் தாங்கிகளும் (Stands) பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவ்வாறான மட்கலன்களை, அதன் அமைப்பையும் நிறத்தையும் கொண்டு தொல்லியல் வல்லுநர்கள் பல பெயர்கள் கொண்டு அழைத்துள்ளனர். அவை வருமாறு -

கருப்பு-சிவப்பு மட்கலன்கள் (Black and Red ware), கருப்பு நிற மட்கலன்கள் (All Black ware), சிவப்பு நிற மட்கலன்கள் (Coarse Red Ware), மெருகேற்றிய சிவப்பு நிற மட்கலன்கள் (Red Sliped Ware), வண்ணப்பூச்சு பூசப்பட்ட மட்கலன்கள் (Resset Coated Ware, துளையிடப்பட்ட மட்கலன்கள் (Perforrated ware)), கீறல் குறியீடு பொறித்த மட்கலன்கள் (Pot with Graffiti), அலங்கரிக்கப்பட்ட சாம்பல் நிற பானை ஓடுகள் (Decorated Grey pot sherd) போன்ற மட்கலன்களும், உடைந்த பானை ஓடுகளும், பெருங் கற்படைக் காலப் பண்பாட்டு வாழ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் இருந்து ஏராளமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மட்கலன்களின் அடிப்படையிலேயே பெருங்கற்காலப் பண்பாடு வேறுபடுகிறது. வண்ணப்பூச்சு பூசப்பட்ட மட்கலன்கள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மட்டும் காணமுடிகிறது. கொடுமணல் அகழாய்வில் வண்ணப்பூச்சு பூசப்பட்ட மட்கலன்களில் (Russet Coated Painted Pot Sherd) தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. மேலும், இவை அதிக அளவில் காணப்படுவதாலும், பல தமிழகப் பெருங் கற்படைக் கால மற்றும் சங்க கால வாழ்விடங்களிலும் இம்மட்கலன் அதிக அளவில் மண்ணடுக்குகளிலேயே காணப்படுவதால், இவை தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட மட்கலன்கள் ஆகும் என்பர்*10. இக்கருத்து ஏற்புடையதாகவே உள்ளது.

பெரும்பான்மையான அகழாய்வுகளில் இம்மட்கலன்கள் காணப்படுவதுடன், தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாலும், அதனுடன் காணப்படும் தொல்பொருட்கள் தமிழகப் பண்பாட்டோடு இணைந்ததாக இருப்பதாலும், இதனை ஏற்கும் கருத்து வலுப்பெற்று வருகிறது. ஆனால், பெருங் கற்படைக் கால அகழாய்வுகளில், வட தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளில் இம்மட்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. சில இடங்களில், வண்ணப்பூச்சு கொண்ட மட்கலன்கள் (Russet Coated Painted Pot Sherd) காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

2. துளையிடப்பட்ட மட்கலன்

இம்மட்கலன்கள், ஒரு குறிப்பிட்ட முக்கிய இடத்தைப் பெறுகிறது. பெரும்பான்மையான அகழாய்வுகளில், மண்ணடுக்குகளில் துளையிடப்பட்ட மட்கலன் சிறிதும் பெரிதுமாகக் கிடைத்துள்ளன. இவை வடிகட்டவும், ஆவியில் வேகவைத்தல் போன்ற காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வகை மட்கலன்களில் சிறிய துவாரம் இட்டதும், பெரிய துவாரம் இட்டதும் கிடைத்துள்ளன. எனவே, பெருங் கற்படைக் கால மக்கள் நெருப்பிலிட்டுச் சுட்டும், வேகவைத்தும், வடிகட்டியும் உணவைத் தயார் செய்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வகை மட்பாண்டங்களை தொடர்ந்து வரலாற்றுக் காலங்களிலும் காணமுடிகிறது.

3. பிற மட்கலன்கள்

குடம், கெண்டி, குவளை, குடுவை, கிண்ணம், தட்டு, ஜாடிகள் (மூன்று கால்கள் முதல் ஐந்து கால்கள் வரை கொண்டவை), மூடி, தாங்கி, அகன்ற வாய் உடைய நீர்த்தொட்டிகள், தானிய சேமிப்பு சால்கள் (பானைகள்), குறியீடுகள் பொறித்த மட்கலன்கள், எழுத்து பொறித்த மட்கலன்கள் போன்றவையாகும்.

4. தொல்பொருட்கள்

தொல்பொருட்களாக, இரும்புப் பொருள்கள், சுடுமண் பொருட்கள், அணிமணிகள் ஆகியவை இங்கு குறிக்கப்படுகின்றன.

இரும்புப் பொருட்கள் - கத்தி, குறுவாள், நெடுவாள், கோடாரி, வெட்டுக்கத்தி போன்றவை.

சுடுமண் பொருட்கள் - தக்களி (Spindle Whorl), வட்டுகள் (Hopscotches), ஊது உலை, சுடுமண் மணிகள் (Terracotta Beats), சுடுமண் காதணிகள் (Terracotta ear lobs), சுடுமண் பாவைகள் (Terracotta Figurines) போன்றவை.

அணிமணிகளில் சங்கு வளையல்கள், மணிகள், கல்மணிகள், பளிக்குக்கல், பச்சைக்கல், நீலக்கல், சூதுபவளம், அகேட், பெரில், ஜேஸ்பர் போன்றவற்றுடன் மான்கொம்புகள் மற்றும் மாவுக்கல் பொருட்கள், உருவங்கள் போன்றன கிடைத்துள்ளன.

(தொடரும்)

சான்றெண் ஆதாரங்கள்

  1. Rajan. K, Archaeological Gazetteers of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur.
  2. Narasimahaih. B, Neolithic and Megalithic Culture in Tamil Nadu, 1980, p.109.
  3. Selvaraj. S, Recent Archaeological findings in Dharmapuri Region, International Seminar, 2005.
  4. Selvaraj. S, Archaeological Excavation at Modur, Seminar on recent Excaxations, Departmant of Archarology, Chennai, 2004.
  5. கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1994, பக். 38-40.
  6. கொடுமணல், திருமல்வாடி, பாகல்பட்டி போன்ற இடங்களில் காணப்படும் ஒழுங்கற்ற குத்துக்கற்கள்.
  7. தேவனூர் குத்துக்கல் பலகைக்கல்லால் செய்யப்பட்டது. தலைப்பகுதி அரைவட்ட வடிவமுடையது. மனித வேலைப்படு கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 
  8. வே.சா. அருள்ராசு, பழந்தமிழகத்தில் இரும்பின் காலம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000, ப.10. 
  9. தமிழகத்தில் பெருங் கற்கால அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களின் தொகுப்பு. 
  10. கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1994, ப.40.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT