புதையுண்ட தமிழகம்

வரலாற்றுக் காலம் - 3. காஞ்சிபுரம் - வசவசமுத்திரம் - காரைக்காடு - அரிக்கமேடு

சங்க கால மக்கள், அதிக அளவில் உறை கிணற்றையே பயன்படுத்தியுள்ளனர். உறை கிணறு அமைப்பு, பெரும்பாலும் உயர்குடி மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

ச. செல்வராஜ்

காஞ்சிபுரம்

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 76-வது கி.மீட்டரில் தெற்காக 5 கி.மீ. சென்றால் காஞ்சிபுரத்தை அடையலாம். இது பாலாற்றின் கிளை நதியான வேகவதி ஆற்றின் அருகே அமைந்துள்ள நகரமாகும்.      

வரலாற்றில் காஞ்சி

இந்நகரம் கச்சி, காஞ்சி, கச்சிப்பேடு, காஞ்சி மாநகர் என பல்வேறு பெயர்களுடன் சங்க காலம் முதல் தமிழ் இலக்கியங்கள் மற்றும் வட மொழி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நகரமாகும். இவ்வூரை திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் “கல்லால் மதில் சூழ்ந்த கச்சி” என்றும் குறிக்கின்றது*1. பல்லவர்களின் தலைநகரமாக சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்புடன் திகழ்ந்த ஊர் இது. யுவான் சுவாங் எனும் புகழ்பெற்ற சீனப் பயணி, தனது பயண நூலில் காஞ்சியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட நாடுகள் அனைத்துக்கும் காஞ்சிபுரமே தலைநகராக இருந்துள்ளது*2. இது, இந்தியாவின் புனிதத் தலங்களில் ஒன்று. இங்கு பத்தாயிரம் புத்தத் துறவிகள் இருந்தனர். எண்பது பிராமணக் கோயில்கள் இருந்தன என்றும், இந்தக் கோயில்களும், விகாரங்களும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்தன என்றும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார், கே.கே. பிள்ளை*3.

சோழர்கள் தம் தலைநகரில் ஒன்றாகவும் இதனைக் கொண்டனர். விஜயநகரப் பேரரசர்கள் இந்நகரைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள பல்லவர் காலக் கோயில்களில் தமிழ், தெலுங்கு மொழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

அகழாய்வு

தொன்மை வாய்ந்த இந்த நகரின் முழுப் பரிமாணத்தையும் அறிய அகழாய்வு தேவைப்பட்டது. எனவே, இங்கு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலகட்டங்களில் அகழாய்வு மேற்கொண்டு, பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர்.

1953-54-ல், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் அகழாய்வில், உறை கிணறுகள், கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சங்கு வளையல்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. இவை, பொ.ஆ.மு. 100 முதல் பொ.ஆ. 300 வரை உள்ள சங்க கால வரலாற்றுப் பகுதிக்குரிய காலம் என அறியப்பட்டுள்ளது*4. பௌத்த விகாரம் எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களைக் கொண்டு எழுப்பிய கட்டடங்கள், வண்ணக்கலவை பூச்சு பூசப்பட்ட மட்கலன் (Russet coated painted ware), மணிகள் (Beads), கண்ணாடி வளையல்கள் (Glass bangles), ரௌலட்டட் மட்கலன் (Rouletted ware) மற்றும் அரிடைன் (Arretine) வகை உரோமானிய மட்கலன்களும் சேகரிக்கப்பட்டன. இவை, உரோமானியருடன் கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றன. இவற்றின் காலத்தை பொ.ஆ. 300 முதல் பொ.ஆ. 800 வரை எனக் குறித்துள்ளனர்*5.

பல்லவமேடு

காஞ்சியின் மிகப்பெரிய மண்மேடு பல்லவமேடு என்று அழைக்கப்படுகிறது. இம்மேடு, நகரின் மையப் பகுதியில் தென்மேற்கே அமைந்துள்ளது. இங்கு தமிழகத் தொல்லியல் துறை 1970-71-ல் அகழாய்வு மேற்கொண்டு, மூன்று பண்பாட்டுக் காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்*6. இவ்வகழ்வாய்வில், சிவப்பு மட்கலன்கள், பளிங்குக் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் எனப் பலவகையான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்*7.

(அகழ்வுக்குழி - பல்லவமேடு)

(உறை கிணறு - பல்லவமேடு)

பல்லவமேட்டில் உறை கிணறு ஒன்று அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. விவசாயம் செழித்திருந்ததை அது வெளிப்படுத்துகிறது. தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்களும் எடுக்கப்பட்டன. அளவுக்கு அதிகமாக விளைபொருட்களின் உற்பத்தி இருந்தத்தால், இங்கு வணிகமும் செழித்திருந்திருக்க வேண்டும்.

சங்கர மடம்

இங்கு, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை 1962-63-ல் ஆய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வில், உரோமானிய மட்கலன்களான ஆம்போரா, ரௌலட்டட் போன்ற அயல்நாட்டுப் பானை ஓடுகளுடன் சுடுமண் பொம்மைகள், முதலாம் இராசராச சோழனின் செப்புக் காசும், ஒரே இடத்தில் அடுக்கிவைத்த நிலையில் 59 கூம்பு வடிவ ஜாடிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சாதவாகனர் ஈயக் காசும், உஜ்ஜைனி சின்னம் உள்ள செப்புக் காசு, பவளம், கண்ணாடி, அரிய வகை கல்மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தினால் ஆன சீப்பு ஆகியவையும் கிடைத்தன*8. இதன் காலத்தை, பொ.ஆ. 1-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 10-ம் நூற்றாண்டு வரை எனக் கணித்துள்ளனர்.

1969-1977 வரை, காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பர நாதர் கோயில் போன்ற இடங்களில் சென்னைப் பல்கலைக் கழகம் அகழாய்வை மேற்கொண்டு பல தொல்லியல் தடயங்களைச் சேகரித்துள்ளது.

இங்கு அரிட்டைன் பானை ஓடு, காசு வார்பு, இரண்டு வகையான செங்கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. அவை 56 X 23 X 8 செ.மீ. மற்றும் 40 X 18 X 8 செ.மீ. அளவுகளில் கிடைத்துள்ளன. மேலும், எலும்பினால் ஆன சீப்பும், சுடுமண் தாயத்தும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது*9.

மண் அடுக்குகள் மற்றும் கரிமம் 14 (C14 Method) காலக்கணிப்பு அடிப்படையில், இந்நகரம் பொ.ஆ.மு. 5-ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாக மக்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்நகரம் ஒரு சிறந்த வணிக நகரமாகத் திகழ்ந்த சான்றுகளும், அயல் நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்புகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

வசவசமுத்திரம்

செங்கற்பட்டு மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கிராமம், வசவசமுத்திரம். இதன் தெற்கே 18 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற மாமல்லபுரம், வடக்கே வயலூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு அருகே, பாலாற்றன் கரையில் அமைந்த ஊர் இது. இவ்வூரின் தென்கிழக்கே பாலாறு ஓடி கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் எல்லாம் துறைமுகப்பட்டினங்கள் இருந்திருக்கின்றன. இதுவரை கண்டறியாத துறைமுகங்களைக்கூட, கடலில் ஆறுகள் கலக்கும் இடத்தைக் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல கிழக்குக் கடற்கரை துறைமுகங்களைக் கண்டறியலாம். இதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே வசவசமுத்திரம் அகழாய்வு.

அகழாய்வின் நோக்கம்

சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில், இங்கு ஒரு துறைமுகம் இருந்து அழிந்துபட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இத் துறைமுகத்துக்கு உரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர். சங்க காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய இதனை, பல்லவர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தனர். இவ்வூருக்கு அருகில் சதுரங்கப்பட்டினம் உள்ளது. இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும்.

பல்லவ மன்னன் ராஜசிம்மனின் கல்வெட்டு ஒன்று இவ்வூருக்கு அருகில் உள்ள வயலூரில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னர்களின் பட்டியல்கள் ஆரம்பம் முதல் இராஜசிம்மன் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் ஒரு தெளிவை ஏற்படுத்துகிற ஒன்றாக விளங்குகிறது. பாலாற்றின் எதிர்க்கரையில், பல்லவ மன்னர்கள் நிர்மாணித்த பரமேஸ்வரமங்களம் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதி பல்லவர் காலத்திலிருந்தே குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்கிவருவதை அறியமுடிகிறது. இன்றைய வசவசமுத்திரம், பண்டைய காலத்தில் வயலூரின் பகுதியாகவும், பின்னர் விஜய நகர மன்னர்கள் காலத்தில்தான் வசவசமுத்திரம் எனப் பெயர் மாற்றம் பெற்றதாகவும் குறிப்பர்*10. இதனைத் தெளிவு பெறவே, இங்கு அகழாய்வு தேவை என தமிழ் நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் -

1. உரோமானிய நாட்டு மதுக்குடுவைகள் மற்றும் கருப்பு - சிவப்பு மட்கலன்கள்.

2. உறை கிணறுகள்.

3. கால்வாய்ப் பகுதி.

4. அரிய கல்மணிகள்

ஆகியவை சேகரிக்கப்பட்டும், வெளிக்கொணரப்பட்டும் உள்ளன.

வசவசமுத்திரம் அகழாய்வு வழியாக, கிழக்குக் கடற்கரையில் மேலும் ஒரு வணிக நகரம் இருந்துள்ளது புலப்பட்டுள்ளது. இது, சங்க காலத் துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்பதும், இப்பகுதி மக்கள் உரோமானியர்களோடு தொடர்பு கொண்டு வணிகம் புரிந்துள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளன*11. “ஆடவற்கழகு பொருள்வழிப் பிரிதல்” என்ற கூற்றின்படி, கடல்கடந்து சென்று பொருளீட்டுதல் என்பது சங்க காலம் தொட்டே நிகழ்ந்து வருகின்ற ஒன்று என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

இங்கு, அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில்தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உறை கிணறுகள் காணப்பட்டன.

(வசவசமுத்திரம் உறை கிணறு)

அவற்றில் ஒன்று 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்ல அதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்*12.

அடுத்து கிடைத்துள்ள தொல்பொருட்களில் ஒன்று, கைப்பிடியுடன் கூடிய ஆம்போரா ஜாடியின் ஒரு பகுதி ஆகும். உரோமானியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றை ஒப்புநோக்கும்போது, இப்பகுதி சங்க காலம்தொட்டே உரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த சிறப்பான ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறது*13.

காரைக்காடு

கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காரைக்காடு. கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்த இவ்வூர், புகழ்பெற்ற அரிக்கமேட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

முதல் ஆய்வு

பாரீஸ் நகரைச் சார்ந்த முனைவர் யூவாஸ் மார்ட்டின் என்பவர், காந்த சக்தி முறையில் அங்கு மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டார். மாதிரி அகழ்வுக் குழியின் மூலம் ரௌலட்டட், கருப்பு - சிவப்பு மற்றும் வழவழப்பான சிவப்பு நிற மட்கலன்கள் (Red slipped ware) ஆகியவை இவரால் சேகரிக்கப்பட்டன*14.

1966-67-ல், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இங்கு ஒரு அகழாய்வு மேற்கொண்டு, உரோமானிய மட்கலன்களான ரௌலட்டட், கருப்பு - சிவப்பு மற்றும் உள்நாட்டு பானை ஓடுகளும், ஜாடி, கிண்ணங்கள், வட்டில்கள் போன்றவற்றையும் சேகரித்தது. மேலும், சால்ஸிடோனி (Chalcedony), அமிதிஸ்ட் (Amythyst), பெரில் (Beryl), ஜாஸ்பர் (Jasper), அகேட் (Agate) போன்ற அரியவகை கல்மணிகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம், அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமாக இப்பகுதி திகழ்ந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. எனவே, காரைக்காடு பொ.ஆ. 100 – 200-ம் ஆண்டுகளில் ஒரு தலைசிறந்த வணிக நகரமாகவும் இருந்துள்ளது என்பதையும் தொல்லியல் சான்றுகள் வழியாகக் காணமுடிகிறது*15.

அரிக்கமேடு

புதுச்சேரிக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில், காக்கையன்தோப்பு என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே ஒரு மண்மேடும், அதனை ஒட்டியவாறு ஒரு சிற்றாறு (அரியாங்குப்பத்தாறு) ஓடுகிறது. கிரேக்க நூலான “பெரிப்ளஸ் ஆப் எரித்திரியன் ஸீ” என்ற நூலில், “பொதுகே” என்ற கடற்கரை நகரம் குறிக்கப்பட்டுள்ளது. தாலமியும், கபேரிஸுக்கு வடக்கே பொதுகே அமைந்துள்ளது என்பார். சங்க இலக்கியப் பாடல்களும், யவனர்கள் (உரோமானியர்) இங்கு தங்கி வணிகம் புரிந்துள்ளதைக் குறிக்கின்றன. பொதுகே என்பது அரிக்கமேட்டைக் குறிப்பதாகும். அரிக்கமேடு என்ற பெயர்ச்சொல்லை, அருகுமேடு என்பதன் சிதைவு எனவும் கருதலாம்*16.

பொ.ஆ. 1734-ல், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீ ஜென்டில் (Le Gentil)   என்பவர், அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் எனக் கண்டறிந்து தெரிவித்தார். 1937-ல், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜோவியூ துப்ராயில் (Joveau Dubreuil), அரிக்கமேட்டில் உள்ளவர்களிடம் இருந்து பல அரிய கல்மணிகளையும், தொல் பொருட்களையும் சேகரித்துள்ளார். பின்னர், இப்பகுதி உரோமானியர் கடற்கரைத் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்துள்ளது என்ற கருத்தையும் அரசுக்குத் தெளிவுபடுத்தினார்*17. அதன் அடிப்படையில், 1940-ல் மார்டிமர் வீலர் இங்கு மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு, பல உரோமானிய மட்கலன்களைச் சேகரித்தார். அவற்றில் குறிப்பிடும்படியான மட்கலன்களாக, அரிஸோ அதாவது இத்தாலி நாட்டில் இருந்து வந்த அரிடைன் மட்கலன்கள் அவரை ஈர்த்தன எனக் கூறலாம். அரிக்கமேட்டின் தொன்மையை, பொ.ஆ. 18-ம் நூற்றாண்டு முதலே பலரும் அறிந்திருந்தனர்.

அகழாய்வு

1941-ம் ஆண்டு, பிரெஞ்சு அகழாய்வாளர்கள் இங்கு அகழாய்வு மேற்கொண்டு உரோமானிய பானை ஓடுகள் கிடைத்ததைத் தெரியப்படுத்தினர். பின்னர் சர் மார்டிமர் வீலர், 1945-ம் ஆண்டு அறிவியல் முறைப்படி, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் வழியாக அகழாய்வை மேற்கொண்டார். பின்னர், பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் பெண் தொல்லியல் ஆய்வாளர் விமலாபெக்லி என்பவர், சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வை நடத்தினார்*18. அந்த அகழாய்வில், பல அரிய தொல்பொருட்களுடன், தமிழகத்தில் வங்கக் கடற்கரையில் ஒரு வணிக நகரம் மிகவும் செழிப்பாகவும், அயல்நாட்டினருடன் இணைந்து புரிந்த வணிகத் தடயங்களும், அயல்நாட்டினர் வருகைபுரிந்தமைக்கு அவர்கள் விட்டுச்சென்ற அயல்நாட்டு மட்கலன்களும் முதன்முதலாகத் தொல்லியல் தடயங்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது அரிக்கமேட்டின் தனிச்சிறப்பு ஆகும். இதன் அடிப்படையில், அரிக்கமேடு ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்துள்ளது என்பதை இச்சான்றுகள் சுட்டுகின்றன.

தொல்பொருட்கள்

அரிக்கமேட்டில், செவ்வக வடிவப் பண்டகசாலை ஒன்றும், சாயத்தொட்டிகள் இரண்டும் வெளிக்கொணரப்பட்டன. இதன் நீளம் 45 மீ, அகலம் 11 மீ ஆகும். இக்கட்டடத்தின் வடக்கே, 18 மீ நீளமுள்ள தானியக் கிட்டங்கி ஒன்றும் காணப்பட்டது*19. உறுதியான சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தை, களிமண் குழைத்து, செங்கற்களை அடுக்கி, காரைப்பூச்சு கொண்டு பூசி அமைத்துள்ளதையும் கண்டறிப்பட்டது.

சாயத்தொட்டி

அரிக்கமேட்டில் நெசவுத்தொழில் சிறப்புற்று இருந்ததை, இங்கு கிடைத்த சாயத்தொட்டி உறுதிப்படுத்துகிறது. செங்கற்கள் கொண்டு கட்டிய இது, தரைப்பகுதி மற்றும் நீரை வெளியேற்ற கால்வாய்ப் பகுதிகள், கதவு நிலைகள் இருந்தமைக்கான எச்சங்கள் என ஒரு சாயத்தொட்டியின் தெளிவான தடயங்கள் அனைத்தும் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்படடுள்ளன*20.

(அரிக்கமேடு - 1. சாயத்தொட்டி அமைப்பு, 2. கட்டடப் பகுதியும் உறை கிணற்றின் தோற்றமும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டநிலை)

இங்கு, கட்டடங்கள் கட்டுவதற்கான இணைப்புச் சாந்து மிகவும் மெல்லியதாகப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. கட்டடப் பகுதியில் செங்கற்களைக் அடுக்கிக் கட்டியுள்ள விதமும், இச்செங்கற்களின் தன்மையையும் காணும்போது, கட்டடத்தின் மேல்தளப் பகுதி மிகவும் சிறப்பானதாகவும் உயரமாகவும் கட்டியிருத்தல் வேண்டும் என யூகித்து உணரமுடிகிறது. இதற்கு அருகிலேயே உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி குடியிருப்பு அதாவது மக்கள் வசிக்கும் இடம் என்பதும் தெளிவாகிறது. சங்க கால மக்கள், அதிக அளவில் உறை கிணற்றையே பயன்படுத்தியுள்ளனர். உறை கிணறு அமைப்பு, பெரும்பாலும் உயர்குடி மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

மட்கலன்கள்

அகழாய்வில், அயல்நாட்டுப் பானை ஓடுகளான ரௌலட்டட், ஆம்போரா, இத்தாலி நாட்டு அரிட்டைன் என்னும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதனால், இவற்றின் காலத்தை அறிவது எளிதான செயலானது*21.

(ரௌலட்டட் மட்கலன் ஓடுகள் – உரோமானியர் தயாரிப்பு)

உள்நாட்டுப் பானை ஓடுகள்

இவ்வகழ்வாய்விலிருந்து, உள்நாட்டுப் பானை மட்பாண்டங்களின் கருப்பு - சிவப்பு, சாம்பல் நிறம் மற்றும் கருப்பு ஓடுகள், சிறு குவளைகள், அகன்ற வாய் உடையவை, கூர்முனை ஜாடிகள் போன்றவை சேகரிக்கப்பட்டன.

அணிமணிகள் - பிற தொல்பொருட்கள்

இங்கு அரிய கல்மணிகள், தங்கத்தினால் ஆன மணிகள், நீலம், பச்சை, நுண்ணிய அளவுடைய மணிகள், உரோமானிய சுடுமண் விளக்கு, கண்ணாடியால் ஆன கிண்ணங்கள், தந்தத்தினால் ஆன அலங்காரப் பொருட்கள், சுடுமண் உருவங்கள் (Terracotta Figures), சிதைந்த நிலையிலான பெண், ஆண் உருவங்கள், கழுத்தணி (Necklace), காதணி (Ear Lobe), இடையணி, சதுரங்கக் காய்கள் (Chess coins) போன்றவை கிடைத்துள்ளன. இவற்றுடன் இரும்புக் கத்தி, ஆணிகள், கல்லினால் ஆன எடைக் கற்கள் மற்றும் சங்கு போன்றவையும் கிடைத்துள்ளன.

(தாயும் சேயும் - சுடுமண் பாவை - அரிக்கமேடு)

இங்கு கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயுடன் கூடிய சேய் உருவம், சிறப்பான தொல்பொருளாகக் கருதப்படுகிறது. பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த இப்பெண் உருவம், மிகவும் நுட்பமாகவும் அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது. இப்பெண் தனது இடது கையை ஒரு தொடையின் மீது வைத்தவாறு, மறுகையில் ஒரு குழந்தையை இறுக்கி அணைத்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சுடுமண் பொம்மை குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. அதில் ஒன்று, இப்பெண் உருவம் ஒரு பறவையைக் கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுவது. பெரும்பாலும், பறவைகளைக் குழந்தையை இடையில் வைப்பதுபோல வைப்பது வழக்கமல்ல. கையில் பிடித்தவாறு அல்லது தோள்பட்டையில் வைத்தவாறு காட்டப்படுவதே வழக்கம். இவ்வுருவத்தில், பெண்கள் குழந்தைகளை இடையில் அமர்த்திக்கொள்வதுபோலக் காட்டியிருப்பது இயற்கையாக உள்ளது. மேலும், இதுபோன்று சுடுமண் பாவைகள் தமிழகத்தில் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவற்றுள், உரோமானியப் பெண் உருவம் ஒன்று அழகன்குளம் அகழாய்வில் சேகரிக்கப்பட்டது. அதிலும், தனது வலது பக்கத்தில் குழந்தையை வைத்தவாறே அப்பெண் உருவம் காட்சியளிக்கிறது. இவ்வகழ்வாய்வில், மேலும் பல சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன.

மேலும், சாம்பல் நிற மட்கலன்களில் பெண் உருவம் வரையப்பட்டவை, விலங்குகளின் உருவம் வரையப்பட்டவை கிடைத்துள்ளன. இவையும், குறிப்பிடும்படியான தொல்பொருட்களாகக் கருதப்படுகின்றன.

மேலே உள்ள, மட்கலன்களில் வரையப்பட்ட பெண் உருவம் அழகுறக் காட்டப்பட்டுள்ளது. ஒரு கையை தொங்கவிட்டு நின்ற நிலையிலும், மறுகையில் ஏதோ ஒன்றை வைத்திருப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மற்றொரு சாம்பல் நிற மட்கலன்களில், பெண் உருவமும், ஒரு விலங்கின் உருவமும் காட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

இங்கிருந்து “குளவாய்”, “லாதன”;, “வணதிகஸ”, ”ஆதன்மகன்”; “கணன”; போன்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நிறைவாக, சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்ட கடல் கடந்த வணிகம், இவ்வகழ்வாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. அரிக்கமேடு, பண்டைய சிறந்த வணிக நகரம் என்பதும், மண் அடுக்குகளில் மேல் அடுக்கில் பொ.ஆ. 1 மற்றும் 2-ம் நுற்றாண்டுகளைச் சேர்ந்த உரோமானியப் பொருட்களும், இவ் மண் அடுக்குக்குக் கீழே காணப்படும் மண் அடுக்கில் புதிய கற்காலக் கைக்கோடாரிகளும், சாம்பல் நிற மட்கலன்களும் காணப்படுகின்றன. இதன்மூலம், பொ.ஆ.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மக்கள் வாழ்விடமாக அரிக்கமேடு அமைந்திருந்த செய்தி வெளிப்படுகிறது*22.

வங்கக் கடற்கரையில் அமைந்த, சிறப்பான நாகரிகம் வளர்ச்சிபெற்ற ஒரு துறைமுகப்பட்டினமும், வணிகநகரமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இப்பகுதி, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை வசம் உள்ளது. மார்டிமர் வீலர், தான் சேகரித்த தொல்லியல் தடயங்களின் அடிப்படையில் குறிப்பிடும்போது, புதிய கற்காலத்தில் இருந்தே மக்கள் இங்கு வாழத் தொடங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைக்கிறார். சாயத்தொட்டிகள் காணப்பட்டதால், பருத்திப் பயிர் அதிகம் விளைவித்திருத்தல் வேண்டும். அத்துடன், இப்பகுதி களிமண் பூமியாகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் புலனாகின்றன.

இப்பின்னணியில், 2007-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை, மைய அரசு இங்கு கடல் அகழாய்வு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

  1. காஞ்சிபுரம்.    

  2. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ்நாடு அரசு, 1975.

  3. மேலது.

  4. Indian Archaeology – A Review

  5. Ibid.

  6. R. Nagasamy, Damilica, Journal of the Tamil Nadu State, Dept. of Archaeology, Dec. 1970.

  7. Ibid.

  8. Ibid.

  9. சு. ராசவேலு & திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீடு, சென்னை, 1995, பக்.102 - 103.

  10. R. Nagasamy & A. Abdul Majeed, Vasavasamudram - A Report on the Excavation conducted by the Tamil Nadu State, Dept. of Archaeology, 1978.

  11. Ibid.

  12. Ibid.

  13. Ibid.

  14. சு. ராசவேலு & திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீடு, சென்னை, 1995, பக். 128 - 129.

  15. Indian Archaeology - A Review.

  16. R.E.M. Wheelar & A. Gosh, Ancient India Vol-2, Archaeological Survey of India, New Delhi, “The Three Ports in order in the which we have named them (From the context, South to North), are Kamara, Podouke and Sopatma. Ptolemy (VII, I,S,14) after referring to the mouth of the river Khaberos clearly the Kaveri, and Khaberis emporium, which may safely be identified with kaveripatnam or Kaverippattinam”.

  17. Ibid. “Archaeological Attention was first directed to the site by Mr.G. Jouveau-Dubreail who in and after 1937 made a collection of beads and gems found on the surface by the local children”, pp.17-20.

  18. Indian Archaeology A Review.

  19. A. Gosh, An Encyclopedia of Indian Archaeology, Munshiram manoharlal publishers Pvt. Ltd. New Delhi. 1989. “The brick and lime mortar structure (Arikamedu),use reservoir and Buddhist vihara, all of massive burnt bricks (Kaveripumpattinam) a part of a Stupa like structure (Kancheepuram) all taken together, would give an insight into the building activities of the period”.

  20. Ibid., “It will be seen that in the middle of the First century C.E At Arikamedu (Northern Sector) the normal size was 2.5x2.9thic 14.0.to 15.0 Long and Either 8.0 to 8.5or 10.5 to 11.00broad. The earliest bricks in the southern sector, which probably originated a little later in the first century”. The existence of houses with thatched roofs is evidenced by a number of Post holes in alignment. Flooring with rammed earth and walls has also been noticed”.

  21. A. Gosh, An Encyclopeadea of Indian Archaeology, New Delhi, Munshiram & Manoharlal, 1989. pp.258. “The Arretine wore a red glazed ware varying from sealing – wax to deep orange red in colour, derives its name from the place of its manufacture arretium, Modern Arezzo in Italy. It belongs to a glass of pottery known as” Terra sigillata”, the ‘Stamped pottery’, because it is decorated by being pressed in to a Stamped mould. Terra sigillata originated in the Mediterraneun region with 2 century B.C and continued till later times”.

  22. R.E.M. Wheelar, Ancient India, Vol-2 Archaeological survey of India, New Delhi. ‘An Indo Roman Trading station on the coast of India’, p.32.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT