சென்ற அத்தியாயத்தில் வரலாற்றின் துவக்க கால (சங்க காலம்) அகழாய்வுகள் காட்டும் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை குறித்து சிறிது விளக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி…
அகழாய்வுகளில் கட்டடப் பகுதி
அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க சான்றாகக் கருதுவது கட்டடப் பகுதிகளே. தமிழக அகழாய்வுகளில் பல இடங்களில், கட்டடப் பகுதிகள் அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவற்றில் அரிக்கமேடு, பூம்புகார், கரூர், காஞ்சிபுரம், கொற்கை, மாங்குளம், அழகன்குளம் போன்ற ஊர்களைக் குறிப்பிடலாம். புகார் நகரில் பல அறைகளைக் கொண்ட கட்டடப் பகுதி கிடைத்துள்ளது.*1 இதனை புத்தவிகாரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வகழ்வாய்வில் புத்த பாதம், பௌத்த சிலை ஒன்றும் சேகரிக்கப்பட்டுள்ளது. இங்கு நீர்நிலைக் கட்டடமும் கிடைத்துள்ளது. பட்டினப்பாலையில், பௌத்தப் பள்ளி இருந்தது பற்றிய குறிப்பு காணமுடிகிறது. சான்றாக, ‘இருகாமத் திணையேரி’ என்ற வரியைக் குறிப்பிடலாம். பள்ளிக் கட்டடமும், நீர்நிலையும் குறித்த பட்டினப்பாலை வரிகள், அகழாய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.*2
அரிக்கமேடு, வசவசமுத்திரம், கொற்கை, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் உறைகிணறும், கட்டடப் பகுதிகளும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் பொ.ஆ. 1-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு வரை உள்ளவை என்பதையும், கொற்கை கட்டடப் பகுதி பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டு என்பதையும் அகழாய்வுச் சான்றுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதன் அடிப்படையில், வரலாற்றின் துவக்கக் காலத்தில் நகரங்கள் மிகவும் செழிப்புற்று இருந்தன என்பதை அறியலாம். மேலும் கொற்கை, மாங்குளம், பூம்புகார், காஞ்சிபுரம், அரிக்கமேடு, கரூர், செங்கமேடு, மாங்குளம் ஆகிய ஊர்களில் மக்களின் குடியிருப்புக் கட்டடங்கள் கிடைத்துள்ளன.
போளுவாம்பட்டியில், பல அறைகளைக் கொண்ட கட்டடப் பகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டது.*3 சாளுவன்குப்பத்தில், செங்கல்லால் கட்டப்பட்ட கோயில் அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டது.*4 காஞ்சிபுரத்திலும் புத்த விகாரம் எனக் குறிப்பிடப்படும் செங்கல்லால் ஆன கட்டடப் பகுதி வெளிக்கொணரப்பட்டது.*5 ஆனால், கட்டடப் பகுதிகளை பெரும்பாலும் வணிக நகரங்களில் மட்டுமே அகழாய்வில் காணமுடிந்தது. கட்டடப் பகுதிகள் மிகக் குறைவாகக் கிடைத்தாலும், சுட்ட செங்கல், சுண்ணாம்புக் கலவை ஆகியவற்றைப் பயன்படுத்தும் மரபு இருந்துள்ளது ஒரு சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக உணரலாம். மேலும், சங்க காலக் கட்டடங்கள், செங்கற்களை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிவைத்துக் கட்டப்பட்டுள்ளதை மாங்குளம், கரூர், பேரூர் போன்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருள்கள் கொண்டு உணரலாம். இங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் அளவில் பெரியவை; மென்மைத்தன்மை கொண்டவை.
சங்க காலக் கூரை ஓடுகள்
தமிழக அகழ்வுகளில் குச்சி நடு குழிகள் மட்டுமே அதிக அளவில் கிடைத்துள்ளன. குறிப்பாக கொடுமணல், அழகன்குளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கு, கூரை அமைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது என்பதை அகழாய்வில் கிடைத்த கூரை ஓடுகளை சான்றாகக் கொள்ளலாம். சங்க காலக் கூரை ஓடுகள் தட்டையாகவும், அகன்றும் காணப்படும். இதன் மேல்பகுதியில் இரண்டு பள்ளமான வரிகள் காணப்படும். அடிப்பகுதி அரைவட்ட வடிவமாகவும், தலைப்பகுதியில் இரண்டு வட்டமான துளைகளும் காணப்படும்.
இதுபோன்ற ஓடுகள், வரலாற்றின் துவக்கக் காலத்தில் (சங்க காலம்) அமைக்கப்பட்ட வீடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பெரும்பாலும் மரச்சட்டங்கள் கொண்டே பயன்படுத்தமுடியும். ஏனெனில், அதன் அமைப்பும் அதற்கு ஏற்பவே அமைந்துள்ளது. எனவே, இத்தகைய ஓடுகளைப் பள்ளம் பதித்த கூரை ஓடுகள் என்பர்.*6 இவற்றை மரச்சட்டத்தில் பொருத்தும்போது, ஒரு ஓடு மற்றொரு ஓட்டின் மேல் உள்ள பள்ளத்தில் எளிதில் சரியாகப் பொருந்தி, இடைவெளி இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பாகும். அக்கால மக்கள், தங்களது தேவைக்கேற்ப பல்வேறுவிதமான சுடுமண் பொருட்களைத் தயாரிக்கும் திறமையைப் பெற்றிருந்தனர் எனலாம். அழகன்குளம், மாங்குளம், நாகப்பட்டினம், பேரூர் போன்ற அகழ்வுகளில் கூரை ஓடுகள் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.
எழுத்து பொறித்த மட்கலன்கள்
நகரத்தைச் சார்ந்த மக்களே பண்பாட்டிலும் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்த எழுத்து பொறித்த மட்கலன்களைக் கூறலாம். தமிழக அகழ்வாய்வில் அழகன்குளம்*7, அரிக்கமேடு*8, மாங்குடி*9, கொடுமணல்*10 ஆகிய வணிக நகரங்களில் மிகுதியான எழுத்து பொறிப்புகள் கொண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. பிற இடங்களில், சற்று குறைவான எழுத்து பொறித்த ஓடுகளே கிடைத்துள்ளன. அழகன்குளத்தில் ‘ஸமுதாய’, ‘திசஅன’;, ‘சேர’, ‘உதிய’, போன்ற பெயர்களும், தேரிருவேலியில் ‘நெடுங்கிள்ளி’*11 என்ற பெயரும் கிடைத்துள்ளன.
அரிக்கமேடு, மாங்குடி போன்ற இடங்களில் அதிக அளவில் கிடைத்தாலும், முழுமையான வாசகம் ஒன்றிரண்டு மட்டுமே காணமுடிகிறது. கொடுமணலில் கிடைத்த எழுத்து பொறிப்புள்ள ஓடுகள் பலவற்றில் முழு வாசகங்களைக் காணமுடிகிறது. அவற்றுள், 'கண்ணன்ஆதன’, ‘சாதன’, ‘பூதன்’, ‘குவிரன்ஆதந்’, ‘விஸாகி’, ‘வேண’, ‘நீராழி’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். அசோகன் பிராமி கலந்த எழுத்துகளும் கலந்துள்ளதைக் காணலாம். எனவே, கொடுமணல் பகுதி மக்கள், வடநாட்டோடு தொடர்பு வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அத்துடன், வடநாட்டு மட்கலன்களும் அண்மையில் மேற்கொண்ட அகழாய்வில் வடஇந்தியப் பானை ஓடுகள் சில கிடைத்துள்ளன.*12 மேலும், அகழாய்வில் 500-க்கும் மேற்பட்ட எழுத்து பொறித்த மட்கலன் ஓடுகள் கிடைத்திருப்பது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மாளிகைமேடு அகழ்வில் கிடைத்த ‘கொற்றன்’ என்ற பெயர் குறிப்பிடத்தக்கது.*13 ஆண்டிப்பட்டி, மோதூர், உறையூர், திருக்காம்புலியூர் போன்ற இடங்களிலும் எழுத்து பொறித்த ஓடுகள் கிடைத்துள்ளன. ஆனால், முழுமையான வாசகம் இல்லை. இருப்பினும், வரலாற்றின் துவக்கக் காலத்தில், மக்கள் கட்டடம் கட்டும் முறை, செங்கற்களை அடுக்கி அமைக்கும் வழக்கம், கூரை ஓடுகள் வேய்தல் போன்ற பல சமூக வளர்ச்சியையும் அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட பொருந்தல் அகழாய்வில், ‘வைரா’ என்று எழுதப்பட்ட மட்கலன் ஒன்றை சேகரித்துள்ளனர்.*14 அதன் காலத்தை அகழாய்வில் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு காலக்கணிப்பு செய்ததில், பொ.ஆ.மு. 500 என்ற தகவல் பெறப்பட்டது சிறப்புக்குரியது. எழுத்துகளின் காலக்கணிப்பை, அண்மையில் கிடைத்த சில தடயங்களைக் கொண்டு பொ.ஆ.மு. 600 என்ற தகவல்களும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அகழாய்வுத் தடயங்களையும் எழுத்துகளையும் ஒருங்கிணைத்து காலக்கணிப்பு செய்யும்போது, தமிழ் எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையதாகவே தோன்றுகிறது.
மாங்குடி, கொடுமணல் ஆகிய இடங்களில் எழுத்து பொறிப்புகளும், அடுத்த மண்ணடுக்கில் கீறல் குறியீடுகளும் எனக் கிடைத்துள்ள தடயங்களும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன. எனவே, தமிழகத்தில் காணப்படும் தமிழ் எழுத்துகளும், ஈழத்தமிழகத்தில் காணப்படும் எழுத்துகளும், அந்தந்த இடத்துக்குரிய தனிச்சிறப்பை எடுத்துக்கூறுவதாகவே உள்ளன. அழகன்குளம் அகழாய்வில் ஈழத்தமிழ் எழுத்துகள் கலந்த மட்கலன்கள் கிடைத்தபோது, இவ்விரு நாடுகளின் தொடர்பை வெளிப்படுத்துவதாக அமைகிறதே தவிர, காலத்தை அல்ல என்பதை ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக அகழாய்வுகளில் தொடர்ச்சியான சான்றுகளும் மண்ணடுக்குகளிலேயே காணப்படுவதாலும், தமிழ் எழுத்தின் வளர்ச்சி நிலைகள் தெளிவாகக் காணப்படுவதாலும், இதன் காலத்தை தனித்தன்மை உடையதாகவே முன்வைக்கலாம்.
நகரம் என்பது பலகுடியினரும் சேர்ந்து வாழ்ந்த பகுதி என்பதே பொருந்தும். வரலாற்றின் துவக்க காலம் என்று கருதப்படும் இடங்களில் மேற்கொண்ட அகழ்வுகளில், பல இடங்களில் காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. உரோமானியர் காசுகள், பாண்டியர் காசுகள், என வணிக நகரங்களில் இவை கிடைத்துள்ளதை, அங்கு வணிகம் நடைபெற்றதையே குறிக்கிறது. கரூர் பகுதியில் கிடைத்த சேர மன்னன் கொல்லிப்பொறை காசு குறிப்பிடத்தக்கது.*15 சில இடங்களில் முத்திரைக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை, தமிழகத்துடன் வடநாட்டு மக்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
நுண்கலை
கிழக்குக் கடற்கரையில் காணப்பட்ட துறைமுகப்பட்டினங்களில் மேற்கொண்ட அகழாய்வில், நுண்கலை கற்ற மக்கள் வாழ்ந்த பகுதியாக அவை இருந்துள்ளன. மணிகள் செய்யும் தொழிற்கூடம், சங்கு வளையல் செய்தல், கல்மணிகள் தயாரித்தல், கணையாழிகள் செய்தல், இரும்பை உருக்கி பல்வேறு வடிவில் கருவிகள் தயாரித்தல் போன்ற பலதரபட்ட தொழில்நுட்பங்களைக் கற்றறிந்த மக்களாக அவர்கள் இருந்துள்ளனர்.*16 இவற்றில் கண்ணாடிப் பொருட்களும், கண்ணாடி மணிகளும் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகின்றன. அழகன்குளம், அரிக்கமேடு, பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகளில் அதிக அளவில் கண்ணாடிப் பொருள்கள் கிடைத்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.
வரலாற்றில், இந்திய நாட்டு கண்ணாடிப் பொருட்களில் கண்ணாடி மணிகளை சிறப்புமிக்கதாகவும், இரண்டு காலகட்டத்தைச் சார்ந்ததாகவும் குறிப்பிடலாம்.*17 ஒன்று, கிரேக்க ரோமானியர்கள் தயாரித்து வழங்கியது. இவை, பொ.ஆ. 1 மற்றும் 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இரண்டாவது, இடைக்காலத்திய வகையைச் சார்ந்தது. இவற்றில் பல்வேறுவிதமான கண்ணாடிகள் கிடைத்துள்ளதை அகழாய்வுகள் குறிப்பிடுகின்றன. கிரேக்க ரோமானிய கைவினைஞர்கள் இந்தியாவிலேயே தங்கி, பல வண்ணக் கோடுகள் கொண்ட கண்ணாடிகளை தயாரித்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலும் அகழாய்வில் காணப்படுவது கார்ணீலியன் வகை மணிகளே.*18 இவை, குஜராத் மாவட்டம் கபத்வஞ் என்ற இடத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.*19 இவை அனைத்தும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அயல்நாட்டின் நமது கலைப்பொருட்களை விரும்பி வாங்கியுள்ளனர். மேலும், நமது கலைப் பொருட்களுக்கு தனிமதிப்பும் இருந்துள்ளது. பொன் அணிகலன்கள் செய்தல், மட்கலன்களில் பெண் உருவங்களைப் பதித்தல்*20 போன்ற பல சிறப்பான கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
அணிகலன்கள் உற்பத்தி செய்வது பற்றி மதுரைக்காஞ்சியும், மணிமேகலையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மணிமேகலையில் மராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர், யவன தச்சர் ஆகிய கைவினைத் தொழிலாளர்கள், கரிகாலனின் அரண்மனையை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.*21 தமிழகத்தில் உள்ள கைவினைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பல கட்டடங்களையும், கைவினைப் பொருட்களையும் தயாரித்துள்ளனர்.
உரோமானிய மட்கலன்களைக் கருத்தில் கொண்டு, அதைப்போலவே இங்கும் அதேபோல் மட்கலன்களை உரோமானியர்கள் விரும்பும் வகையில் தயாரித்துள்ளனர். குறிப்பாக, அழகன்குளம் சிவப்பு ரௌலட்டட் வகையைச் சான்றாகச் சொல்லலாம்.*22 இவை முழுவதும் சிவப்பு நிறத்தால் ஆன மட்கலன்கள். இதன் மையப்பகுதியில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான வேலைப்பாட்டின் காரணமாக, ரௌலட்டட் என அதன் அலங்காரத்துக்கு ஏற்ப அழைத்தனர். இவை பெரும்பாலும் தட்டு வடிவிலேயே கிடைத்துள்ளன. இவ்வாறு புகார், அழகன்குளம், கரூர், கொடுமணல் போன்ற பகுதி மக்கள் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுத் திகழ்ந்துள்ளனர் என்பதை அகழாய்வுத் தொல்பொருட்கள் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
எனவே, கைவினைஞர்களையும், வணிகர்களையும் மட்டுமே முதன்மையாகக் கொண்ட நகரங்கள் இருந்த நிலையை தமிழகம் பெற்று, பொ.அ.மு. 200 - பொ.ஆ. 300 வரை செழிப்புற்று இருந்துள்ளது. கட்டடக் கலையில் பொறியியல் வல்லுநர்களின் திறமையும், அதன் வெளிப்பாடும் அவர்கள் அமைத்த நீர்நிலைகளைக் கொண்டு கணிக்கலாம். சான்றாக புகார், உறையூர், திருக்காம்புலியூர் போன்ற அகழாய்வுகளைக் குறிப்பிடலாம்.
கிராமங்களில் மக்களின் நிலை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணமுடியவில்லை. இவர்களின் வாழ்வாதாரம் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. இவர்கள் நூல் நூற்பதும், தானியங்களைச் சேமித்து வைத்தலும் என அன்றாடத் தொழில் செய்து, தங்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் தங்களது வாழ்வில் சுடுமண் காதணிகள், சுடுமண் மணிகள் ஆகியவற்றை அணிந்து கொண்டனர். இவர்கள் தயாரித்த விலை உயர்ந்த கல்மணிகள், சங்கு வளையல்கள், வணிகம் பொருட்டு நகரத்தைச் சென்று சேர்ந்தன. இதுபோன்ற கைவினைஞர்கள் வாழ்விடங்களில் குச்சி நடுகுழிகள், கூரை ஓடுகள் எனக் காணப்படுவதால், மக்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.*23 அகழாய்வுகளில் காணப்பட்ட சுடுமண் தக்களிகள், அப்பகுதி மக்கள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர் என்பதையும், அவர்களே பருத்தியை தக்களி உதவியுடன் நூலாகத் தயாரித்து ஆடை நெய்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது. கொடுமணல், மாங்குடி, பேரூர், போளுவாம்பட்டி, கரூர், அழகன்குளம் போன்றவற்றை சான்றாகக் குறிப்பிடலாம்.
தங்களின் பொழுதுபோக்குக்காக வட்டச்சில்லுகள்,*24 தாயக்கட்டைகள்,*25 சதுரங்கம்*26 போன்ற விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் பொருட்களில், சுடுமண்ணால் ஆனவையே அதிகம். ஆனால், தந்தத்தினால் ஆன தாயக்கட்டை, எலும்பினால் ஆன சதுரங்கக் காய்கள், மான் கொம்புகள் என விலையுயர்ந்த பொருட்களை நகர மக்களிடையே காணமுடிகிறது. பெருநகரங்களில் பொன் அணிகளும், விலை உயர்ந்த கல்மணிகளும், வெள்ளை கணையாழிகளும் கிடைக்கும்பட்சத்தில், கிராமங்களில் மட்டும் சுடுமண் பொருட்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அகழாய்வுகள் சுட்டுகின்றன. அழகன்குளம், பொருந்தல், அரிக்கமேடு, பேரூர், கரூர், மாங்குடி, வல்லம், ஆண்டிப்பட்டி, உறையூர், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் பலதரப்பட்ட அணிகலன்களை அகழாய்வுகளில் காணமுடிந்ததை சான்றாகக் குறிக்கலாம். இங்கு காதணிகள், கைவளையல்கள், மணிகள் போன்றவை கிடைத்துள்ளன.
வரலாற்றின் துவக்கக் கால மக்கள் கேளிக்கை விளையாட்டுகளிலும் அதிகம் நாட்டம் கொண்டிருந்தனர் என்பதை அகழாய்வில் சேகரித்த தொல்பொருட்கள் குறிப்பிடுகின்றன. தமிழக அகழ்வுகளில் அழகன்குளம், மாங்குடி, பொருந்தல், பேரூர், ஆண்டிப்பட்டி, கொடுமணல் போன்ற பலவற்றில் தாயக்கட்டைகளும், பிற சுடுமண் விளையாட்டுப் பொருட்களும் கிடைத்துள்ளன. சதுரங்க விளையாட்டை வீடுகளில் அமர்ந்து விளையாடும் விளையாட்டாக அமைத்துக்கொண்டனர். பல அகழாய்வுகளில் சுடுமண் சதுரங்கக் காய்கள் சேகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தாயக்கட்டைகள் சுடுமண் வடிவிலும், பெரும்பாலும் எலும்பு மற்றும் தந்தத்திலேயே அதிகம் கிடைத்துள்ளன.*27 தாயக்கட்டை விளையாட்டு, தமிழகத்திலேயே மிகவும் பழமையான விளையாட்டாகத் திகழ்ந்துள்ளது என்பதை இது உறுதி செய்கிறது.
சமய நிலைகளைக் காணும்போது, பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் பொ.ஆ.மு. 1-ம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து பொ.ஆ. 4 முதல் 5-ம் நூற்றாண்டு வரை ஆங்காங்கே பரவலாகப் பரவியுள்ளதை அகழாய்வுகளில் கிடைத்த புத்த விகாரங்களின் எச்சங்களையும்*28, புத்த பாதங்களையும், சமணப் படுக்கைகளையும் கொண்டு குறிப்பிடலாம். இருப்பினும், வரலாற்றின் துவக்கக் காலத்தில் மக்கள் இறந்துபட்ட வீரனுக்குக் கல்லெடுத்து, அதில் அவரது வீரம் குறித்த தகவலைப் பொறித்துவைத்து வணங்கியதும், இறந்தவர்கள் மீண்டும் வாழ்கின்றனர் என்ற கருத்தும் கொண்டவர்களாக இருந்துள்ளதும், நமக்கு கிடைத்த நினைவுச் சின்னங்களும், நடுகல் கல்வெட்டுகளும் தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில், பொ.ஆ. 4 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் மக்கள், மூஞ்சூரை வாகனமாகக் கொண்ட கணபதியை வணங்கியுள்ளதை உறையூர், திருக்காம்புலியூர் அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.*29
(தொடரும்)
சான்றுகள் 1. K.V. Raman, Excavations at Kaveripoompattinam, Tamil Civilization, Thanjavur, 1987. 2. இரா. பூங்குன்றன். மு.கு.ப. 3. T.S. Sridhar, Archaeological Excavations in Tamilnadu, Vol II, Govt. of Tamilnadu, Dept.of Archaeology, Chennai, 2011. 4. Indian Archaeology A Review. 5. R. Nagasamy, Kancheepuram 6. ச. செல்வராஜ், தமிழக அகழாய்வுகளில் காணப்பட்ட கூரை ஓடுகள், கருத்தரங்கக் கட்டுரை. 7. எ. சுப்பராயலு, “மண்கல தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள்”, ஆவணம் இதழ் 18, 2010. கட்டுரை - திரு ஐராவதம் மகாதேவன் நிறுவிய தி.நா. சுப்பிரமணியன் அறக்கட்டளையின் கீழ் நடைபெற்ற 2007-ம் ஆண்டுடைய சொற்பொழிவின் சுருங்கிய வடிவம். 8. R.E.M. Wheeler, A. Gosh and Krishna Dev, Arikamedu, Ancient India, Vol 2. 9. Ashokvardan Shetty, Excavations at Mangudi, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2003. 10. கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர். 11. T.S. Sridhar, Archaeological Excavations in Tamilnadu, Vol II, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2011. 12. The Hindu Daily, Dt.19.5.2013. 13. T.S. Sridhar, opp.cit. 14. கா. ராஜன். பொருந்தல் அகழாய்வுச் செய்திக்குறிப்பு, ஆவணம் இதழ் 23, 2009, பக். 109. 15. தினமலர் கிருஷ்ணமூர்த்தி, சங்க கால சேரர் காசுகள், உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகள். 16. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 2004. 17. A. Gosh, An Encyclopeadea of Archaeology, Munshiram & Manokarlal Pvt. Ltd., New Delhi. “The Beginning of the Christian era the use of Glass became a quite common and intaglions, finger rings, bezels, lenses and miniature casets were manufactured. In thehistory of Indan glass heads two periods are significant. The First is the Gracco-Roman and the second is the medieval”. 18. Ibid., 19. Ibid., 20. K. Sridharan, Terracotta Art, Seminar on Marine Archaeology, Madras, 1992. 21. சுவாமி சிதம்பரனார், மணிமேகலை காட்டும் தமிழர் வாழ்வியல். 22. T.S. Sridhar. 23. Ashokvardhan Shetty, Excavations at Mangudi, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2004. 24. பேரூர், கரூர், புகார் போன்ற அகழாய்வுகள் வெளிப்படுத்திய செய்தி. 25. T.S. Sridhar, opp.cit.pp. 26. K. Sridharan, Excavations at Karur, Tamil Civilization, Quarterly Research Journal of the Tamil Society, March, 1987, Thanjavur. 27. T.S. Sridhar, Excavations of Archaeological sites in Tamilnadu, Alagankulam, An Ancient Roman port city of Tamilnadu, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, 2005. 28. K.V. Raman, Excavation at Kaveripoompattinam,Tamil civilization, Quarterly research Journal of the Tamil Society, Thanjavur, 1987. 29. T.V. Mahalingam, "The Report on the Excavations in the Lower Kavery Vally”, 1970, University of Madras, pp. 105, 113. ‘Alagarai – ALG-4, 2.10 mts, below surface height 4 mts a Broken image of Ganesa was noticed’. ‘Ganesa figure suggest the worship of this diety is popular in those days that is 4th – 5th C.C.E’. |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.