புதையுண்ட தமிழகம்

வரலாற்றுக் காலம் - 7. அழகன்குளம்

மூவேந்தர்களைப் பற்றிய குறிப்புகள், நமது தொன்மையான பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் எடுத்துரைக்கின்றன. ராமாயணத்தில், சோழர்கள் மற்றும் பாண்டியர்களைப் பற்றியும், மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றியும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ச. செல்வராஜ்

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் - ராமேஸ்வரம் செல்லும் சாலையில், வங்கக் கடலில் வைகை ஆறு கலக்கும் இடத்துக்கு அருகில் இந்த அழகன்குளம் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவு. வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில், ஆற்றங்கரை எனும் ஒரு சிற்றூர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் அழகன்குளம் உள்ளது.

(வைகை ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் - ஆற்றங்கரை)

அகழாய்வின் நோக்கம்

அழகன்குளம் குறித்து எவ்வித நேரடிச் சான்றுகளும் காணப்படாத நிலையில், இவ்வூர் கோட்டைமேட்டுப் பகுதியில் மேற்பரப்பு ஆய்வின்போது ஏராளமான உரோமானிய பானை ஓடுகள் (Roman Potteries) சங்க கால பாண்டியர் காசு, உரோமானியர் காசு போன்றவற்றுடன் உரோமானியர் மட்கலன்கள், கருப்பு-சிவப்பு மற்றும் சாம்பல் நிற மட்கலன்கள் என குறிப்பிடத்தக்க வகையில் தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன*1.

இவற்றின் அடிப்படையில், அழகன்குளம் சங்க காலத்தில் ஒரு சிறந்த வாணிபத்தலமாக இருந்திருக்க வேண்டும் என்றும், தமிழகத்துடன் உரோமானியர்கள் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், இங்கு அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை திட்டமிட்டது. மேலும், பல வரலாற்றுச் செய்திகளையும், பாண்டியர்களின் முத்துக்கள் எவ்வாறெல்லாம் அயல்நாடுகளுக்குச் சென்று நம் தென்னிந்தியாவின் புகழுக்கும் வணிகத்துக்கும் சிறப்பு சேர்த்தன என்பதையும் இப் பகுதியில் பார்ப்போம்.

வரலாற்றுச் செய்திகள்

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகத்தின் எல்லையாகக் குறிப்பர். தென் இந்திய தீபகற்பத்தில், குறிப்பாக தமிழகத்தை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும், தொல்லியல் தடயங்களும் சான்று பகர்கின்றன. தமிழகத்தின் தென்பகுதியை நீண்ட நெடுங்காலமாக பாண்டியர்கள் ஆட்சிபுரிந்துள்ளதும் தெள்ளத்தெளிவாகும்.

மூவேந்தர்களைப் பற்றிய குறிப்புகள், நமது தொன்மையான பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் எடுத்துரைக்கின்றன. ராமாயணத்தில், சோழர்கள் மற்றும் பாண்டியர்களைப் பற்றியும், மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றியும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில், வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. மேலும், பாண்டிநாட்டு முத்துகள் குறித்தும் குறிப்பு உள்ளது. ஆக, பாண்டிநாட்டு முத்துகளுக்கு அக்காலத்தில் இருந்தே தனிச் சிறப்பு இருந்துள்ளதை அறிய முடிகிறது.

பாண்டியரும் பிற நாட்டுத் தொடர்பும்

இலங்கை, சீனம், கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுடன் பாண்டியர்கள் மிகுந்த நட்புடனும் வணிகத் தொடர்புடனும் இருந்துள்ளனார். இலங்கை நாட்டு மன்னன் ஸ்ரீவிஜயன், பாண்டிய மன்னன் மகளை மணந்துகொண்டான். கிரேக்கநாட்டாரும் உரோமானியரும் இந்தியாவுடன் நெருங்கிய வணிகத் தொடர்பும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்துகொண்டுள்ளனர். இங்கிருந்து விலை உயர்ந்த மணிகள், முத்துகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், ஏராளமான உரோமானியத் தடயங்கள் கிடைத்துள்ளதால், இக்கருத்தை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், மிகவும் சிறப்புபெற்ற பூம்புகார் துறைமுகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி அரிக்கமேடு அகழாய்வுகள், உரோமானியத் தொடர்பையும்,  வெளிநாட்டுத் தொடர்பையும் தெளிவாகக் காட்டுகின்றன. தெற்கே செல்லச் செல்ல, தொண்டியும் கொற்கையும் மட்டுமே துறைமுகப் பட்டினங்களாக இருந்தாலும், அங்கு கிடைத்த தொல்லியல் தடயங்களைக் காட்டிலும், உரோமானியப் பொருட்களும், இத்தாலிய நாட்டுப் பானை ஓடுகளும், இன்னும் பல கலைநுணுக்கம் வாய்ந்த முத்திரை பதித்த மட்கலன்களும் ஏராளமாகக் காணப்பட்ட பகுதியாக, ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள அழகன்குளம் பகுதியில்தான் அதிக அளவில் கிடைத்தன. அத்துடன் உரோமானியர் காசுகளும், ஏராளமான சங்கு வளையல்களும், உரோமானிய மட்கலன்களும், உயர்வகை கல்மணிகளும் மேற்பரப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்டன.

மேலும், பாண்டிய நாட்டுக்கும் தென் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் சிறப்பு வாய்ந்த ஒரு துறைமுகப்பட்டினம் இங்கு இருந்திருக்க வேண்டும் என்பது, மேற்பரப்பு ஆய்வில் தெளிவானதால், இப்பகுதியை அகழாய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என்ற கருத்தில் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகழ்வுக்குழிகளும் தொல்பொருட்களும்

அழகன்குளத்தில் 1986-87-ம் ஆண்டில் முதன்முறையாக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1990-91, 1993, 1996 ஆகிய ஆண்டுகளிலும் அகழாய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில், 6.25 மீட்டர் ஆழம் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு மொத்தம் 19 அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டன*2. இங்கு கிடைத்த பானை ஓடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. கருப்பு - சிவப்பு மட்கலன் (Black - Red ware)

சங்க கால மட்கலன் வகைகளைச் சார்ந்தது. இந்த மட்கலன்களைக் கொண்டு காலத்தை எளிதாகக் கணிக்கலாம். அதன்படி, அழகன்குளம் சங்ககாலம் தொட்டு தொடர்ச்சியான வரலாறு கொண்டது என்பது தெளிவாகிறது. அத்துடன், வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இந்த மட்கலன்களே சான்று.

2. வண்ணக் கலவைப்பூச்சு கொண்டவை (Russet coated painted ware)

தமிழகத்தில் காணப்படும் மற்றொரு வகை மட்கலன். இதுவும் சங்க கால மக்கள் தயாரித்த மட்கலன்தான். இவை, வண்ணக் கலவைப்பூச்சு மூலம், மட்கலன் மேல் பகுதியில் வளைவு வளைவாகவோ நெளிவு நெளிவாகவோ கோடுகளால் அழகுபடுத்துவர். இந்த வகை அலங்காரத்தின் அமைப்பைக் கொண்டே, இவை வண்ணக் கலவைப்பூச்சு கொண்டவை என அழைக்கப்படுகின்றன.

ஒருகாலத்தில், அவை ஆந்திரத்திலிருந்து வந்தவை என  அகழாய்வாளர்கள் கருதினர். ஆனால், அழகன்குளம், சேந்தமங்கலம், திருக்கோயிலூர், மாங்குடி, கொடுமணல், வல்லம் போன்ற தமிழக அகழாய்வுகளில் அதிக அளவில் மண்ணடுக்குகளிலும், கீறல் குறிகள் கொண்டதும், பின்னர் தமிழி எழுத்துப் பொறித்த நிலையிலும் ஏராளமாகக் கிடைத்தன. இதன் அடிப்படையில், இம்மட்கலன் தமிழகத்தைச் சார்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

3. முத்திரை பதித்த பானை ஓடுகள் (Stamped pot shreds)

முத்திரை பதித்த ஓடுகள் என்பது அழகன்குளத்தில் மட்டுமே கிடைத்த மட்கலன் ஆகும். இவை அளவில் சிறியவை. கோப்பை, குவளை, குடுவை, டம்ளர் போன்ற சிறிய வடிவ மட்கலன்கள் ஆகும். இவை விரிந்த மேல்பரப்பும் குறுகிய அடிப்பரப்பும் பெற்றவை. இவற்றில், குதிரை மீது செல்லும் வீரன் மற்றும் விலங்குகளின் உருவமாக மயில், அன்னப்பறவை, வாத்து, போன்றவை பதியப்பட்டுள்ளன. இவை கருப்பு சிவப்பு நிற மட்கலன்களைப்போல் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. வெளிப்புறம் சிவப்பும், விளிம்பிலிருந்து உட்பகுதி முழுவதும் கருப்பாகவும் காணப்படுகிறது. இதுவும், கவிழ்த்துவைத்து சுடும் அறிவியல் முறையைப் பின்பற்றிய மட்கலன் வகையைச் சார்ந்தது எனலாம்.

அத்துடன், இன்னொரு மட்கலனில் உயர்குடிப் பெண் ஒருத்தி தலை அலங்காரம் செய்வதும், அதற்கேற்ப கண்ணாடியை அவரது தோழி பிடித்துக்கொண்டு இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, உரோமானிய மட்கலன் வகையைச் சார்ந்தது. இது, அந்த மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களது உயர்வையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

(காளை உருவம் பதித்த சாம்பல்நிற மட்கலன் ஓடு)

(உரோமானிய மட்கலனில் இரண்டு பெண்டிர். உரோமானியர் கலை. கையில் சீப்பும், ஒருத்தி கண்ணாடியைப் பிடித்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளது)

4. சொரசொரப்பான சிவப்பு நிற மட்கலன் (Coarse Red ware)

தமிழக அகழாய்வுகளில் அதிகம் காணப்படும் மட்கலன். இவை அனைத்து வகையான காலங்களிலும் பயன்படுத்தப்பட்ட மட்கலன் ஆகும்.

5. சிவப்பு நிற ரௌலட்டெட் (Red Rouletted ware)

தனிச்சிறப்பு கொண்ட ரௌலட்டட் வகையாகவே இதனைக் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக அளவிலும், முழுவதும் சிவப்பு நிறத்தினால் ஆனவை சேகரிக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு ரௌலட்டட் வகையைப் போன்றே இவற்றிலும் அந்த மையப்பகுதியில் அலங்காரம் (Excentric circle) காணப்படுகிறது. அதிக அளவில் காணப்பட்டதால், இதனை உள்ளூர் மக்கள் அதன் அமைப்பை வைத்து உரோமானிய மட்கலன் ரௌலட்டட் போன்ற அமைப்பில் இங்கு தயாரிக்கப்பட்ட மட்கலனாக இருக்கலாம் (Imitation) என்றும் கருத்து தெரிவித்தனர். Dr. T.N. Potter (Department of Prehistoric Roman-British Antiquities of British Museum) அவர்கள், இம்மட்கலன் ஓடுகள் தென் ஆப்பிரிக்காவின் சிவப்பு நிற மட்கலன் (South Africa Red Slipped Ware) வகையைச் சார்ந்தவை எனப் பகுத்துள்ளார்.

இப் பகுதியில், அகழாய்வில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட சிவப்பு நிற ரௌலட்டட் மட்கலன் ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் பார்த்தால், இதுபோன்ற மட்கலன்கள் பிற அகழாய்வுகளிலும் காணப்படுதல் வேண்டும். ஆனால், அழகன்குளம் அகழாய்வில் மட்டுமே காணப்படுவதால், இவற்றை உரோமானியர் பகுதியைச் சார்ந்தவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

6. ஆம்போரா ஜாடிகள் (Amphorae)

ஆம்போரா எனப்படும் உரோமானிய மதுக்குடுவைகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன

(ஆம்போரா ஜாடியின் வாய்ப்பகுதி)

இதன் இரண்டு பக்கமும் கைப்பிடிகள் இருக்கும். இவை கூம்புவடிவில் அமைக்கப்பட்ட ஒன்று. இதனை நேரடியாகத் தரை மீது நிற்கவைக்க இயலாது. அதற்கான தாங்கிகள் மேல்தான் வைக்க இயலும். மேலும், இதில் பழரசங்களை நிரப்பி பூமிக்கு அடியில் புதைத்துவைத்துப் பின்னர் எடுத்துவந்து, அந்தப் பழரசத்தை விருந்தினருக்குப் பருக வழங்குவர். இதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இதை மதுக்குடுவை என்றே குறிப்பிடுகின்றனர். தமிழக அகழாய்வில், முதன்முதலாக ஆம்போரா ஜாடியில் குறியீடு பதித்த நிலையில் குடுவை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஸ்வஸ்திக் குறியீடு ஒன்று வரையப்பட்டுள்ளது. அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டுள்ளதும் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் காணப்படுகிறது.

(ஆம்போரா ஜாடியின் கைப்பிடிகள்)

7. எழுத்துப் பொறித்த மட்கலன்கள்

எழுத்துப் பொறித்த மட்கலன்கள் (Inscribed potshreds) எழுத்துப் பொறித்த ரௌலட்டட் வகை மட்கலன்கள் அதிக அளவில் கிடைத்துள்ள பகுதி அழகன்குளம் மட்டுமே எனலாம். உரோமானிய மட்கலன்களிலேயே தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட மட்கலன்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அழகன்குளம் அகழாய்வில், 190-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறித்த மட்கலன்களும் கிடைத்துள்ளன. உரோமானிய மட்கலன்களான கருப்பு நிற ரௌலட்டட் மட்கலனில், ‘சாமுதக’ என்பதும், பிற எழுத்துப் பொறிப்புகளாக திசஅன், தானியது சேரமான், கோன், ஆதன், அத்தன், குவிரஅன்அ, பதுமாற்கோதை, வாதுமேத, போன்றவை குறிப்பிடத்தக்கது. பிற எழுத்துகள் முடிவுபெறாமல், இரண்டு மூன்று எழுத்துகளைக் கொண்டு முடிவு பெறாமல் உடைந்த நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு, ரௌலட்டட், முத்திரை பதித்த மட்கலன் ஓடுகள், சாம்பல் நிற மட்கலன் ஓடுகள் என அனைத்து மட்கலன் ஓடுகளிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

8. கீறல் குறியீடு கொண்டவை (Grafitti)

கீறல் குறியீடுகளுடன் யானையின் உருவம் கீறப்பட்ட நிலையிலும், மரம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. எனவே, எழுத்துப் பொறிப்புகளுக்கு முன்னோடியாக கீறல்களும், உருவப்படங்களை மட்கலன்களில் வரைவதிலும் தமிழக மக்கள் மிகவும் சிறப்பு பெற்றிருந்தனர் என்பது புலனாகிறது. இவற்றுடன், பல்வேறுவிதமான கீறல் குறியீடுகள் கொண்ட மட்கலன்களும் இங்கு கிடைத்துள்ளன. இதன் வாயிலாக,  மரத்தை மக்கள் வழிபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

9. பாய்விரிப்பு அலங்காரம் கொண்ட பானை ஓடுகள் (Mat Design pot shreds)

10. ரௌலட்டட் (கருப்பு மற்றும் சிவப்பு) (Black and red rouletted ware)

11. வட இந்திய பளபளப்பான கருப்பு ஓடுகள் (N.B.P. Ware)

வடஇந்திய மக்கள் பயன்படுத்திய பளபளப்பான கருப்பு நிற மட்கலன்கள் தனித்துவம் பெற்றவை. பொ.ஆ. 6-ம் நூற்றாண்டில், மகத நாட்டில் தயாரானவை இவை. இம்மட்கலன், தமிழகத்துக்கு வணிகத்தின் பொருட்டு இங்கு வந்துள்ளன என்பது தெளிவாகிறது. கரூர், கொற்கை போன்ற பெருநகரங்களில் மேற்கொண்ட அகழாய்வில், இம்மட்கலன் ஓடுகள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

12. துளையிட்ட பானை ஓடுகள் (Perferoated ware)

மட்கலன்களில் துளைகள் இடப்பட்டவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. சங்க கால மக்கள், வடிகட்டுதல் முறையையும், ஆவியில் வேகவைக்கும் வழக்கத்தையும் நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், துளையிடப்பட்ட மட்கலன்கள், அகழாய்வுகளில் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. மாங்குடி, கொடுமணல், திருக்காம்புலியூர் போன்ற பல அகழாய்வுகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

13. சாம்பல் நிற பானை ஓடுகள் (Grey Ware)

சாம்பல் நிற மட்கலன்கள் காலத்தால் மிகவும் பழமையானவை. அத்தகு மட்கலன்கள், அழகன்குளத்தில் எழுத்துப்பொறிப்புடன் கிடைத்துள்ளது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. எழுத்துப் பொறிப்பும், அதன் அருகே மயிலின் உருவமும் கீறப்பட்டுள்ளது. அழகன்குளம் அகழாய்வில் மட்டுமே, மயில், யானை, மரம், காளை உருவம் போன்ற பல உருவங்கள் பொறித்த மட்கலன்களைக் காணமுடிகிறது. எனவே, இப்பகுதி மக்கள் கலை ஆர்வமும் வரைகலைத் திறமையையும் பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. ஏனெனில், இங்கு காணப்படும் பொருட்கள் அனைத்திலும் ஒரு கலைச் சிறப்பையும், நுணுக்கமான வேலைப்பாட்டையும் காணலாம்.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

1. A. Abdul Majeed & Others, Alagankulam. Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai 113.

2. T.S. Sridhar, Ancient Roman Port City - Alagankulam, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2008.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT