புதையுண்ட தமிழகம்

வரலாற்றுக் காலம் - 7. அழகன்குளம் தொடர்ச்சி

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தொல்பொருட்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. முற்கால பாண்டியர், பிற்கால பாண்டியர் காசுகள், சோழப் பேரரசர் முதலாம் இராசராசன் காசு, இவற்றுடன் உரோமானிய மன்னர்கள் வாலன்டைன் காசு மற்றும் அச்சு குத்திய காசுகளும் கிடைத்துள்ளன.

ச. செல்வராஜ்

முந்தைய அத்தியாயத்தில், அழகன்குளம் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற மட்கலன் ஓடுகள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், மேலும் சில பானை ஓடுகள் பற்றியும் கிடைக்கப்பெற்ற அறிய கல்மணிகள் குறித்தும் பார்க்கலாம்.

14. அரிட்டைன் பானை ஓடுகள் (Arretine)

அரிஸோ, அரிட்டைன் எனும் மட்கலன்கள், இவை உற்பத்தி செய்யப்பட்ட இடத்தின் பெயராலேயே அமைந்த மட்கலன்கள் ஆகும். சிவப்பு, ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் இவை, அரிட்டைன் வகை என்பதை அறிந்துகொள்ள, அடிப்பகுதியில் முத்திரை ஒன்று இடப்பட்டிருக்கும். இதையே சான்றாக வைத்து, அரிட்டைன் வகைகளைக் கண்டறியலாம். முத்திரையில் உரோமானிய எண்கள் இடப்பட்டிருக்கம். அவை முக்கியமான சான்றாகும்.

15. போர்ஸலைன் ஓடுகள் (Porcelain)

சீன தேசத்து மட்கலன் வகைகளில், போர்ஸலைன் வகையும், செலடைன் வகையும் தனிச் சிறப்பு பெற்றவை. பொ.ஆ. 10-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நகரங்களில் எல்லாம் இம்மட்கலன்களைக் காணலாம். இவற்றுள், வெள்ளைக் களிமண் கொண்டு தயாரிக்கப்படும் மட்கலன், அடுத்து செம்பழுப்பு நிற அமைப்பில் தயாரிக்கப்பட்ட மட்கலன் என இரண்டு வகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

இவை பயன்படுத்துவதற்கும், சுத்தம் செய்வதற்கும் மிகவும் எளிமையாகவும், பார்வைக்கு உயர்ந்த நோக்கும் கொண்டவையாகத் திகழ்ந்ததால், இம்மட்கலன்கள் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. சீன தேசத்து மட்கலன்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவை இவை. இட்சுவாங் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. போர்ஸலைன் மட்கலன்கள் அனைத்தும் அளவில் சிறியவை.  

16. செலடைன் ஓடுகள் (Celedon)

செலடைன் மட்கலன்கள் அளவில் பெரியவை. தடித்த ஓடுகளைக் கொண்டவை. வெளிப்பகுதி பாசி நிறத்திலும், பச்சை நிறத்திலும் காணப்படும். உட்பகுதியில் வெண்மையாகவும் வெளிர் நிறத்திலும் காணப்படும். அதிக எடை கொண்டவை. அதே சமயத்தில் மென்மையானவை.

குடுவை, கின்னம், குவளை, கோப்பை போன்றவற்றுடன் சிறிய வடிவ தட்டுகள் போன்ற வடிவங்களிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை நீல நிறத்தில் மெல்லிய கோடுகளும் அலங்காரங்களையும் பெற்றிருக்கும். உப்புக்கரைசலின் பூச்சு கொண்டு இதனை மேலும் பளபளப்பாக்கிப் பயன்படுத்துவர். மேலும், இவை கண்ணாடி போன்ற அமைப்பையும் கொண்டவை. அடிப்பகுதி தட்டையாகவும் மேல்பகுதி பருமனாகவும் சிறிய குடம் போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்டவை.

இவை பெரும்பாலும் திரவப் பொருட்களும், எண்ணெய் மற்றும் விலை உயர்ந்த பழரசங்களில் தயாரிக்கப்பட்ட திரவப்பொருட்களை எடுத்து வரவும், வெளியிடங்களுக்கும், நீண்ட தொலைதூரப் பயணங்கள் செல்லும்போது இம்மட்கலன்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

செலடைன் மற்றும் போர்ஸலைன் போன்ற பானை ஓடுகள் ஏராளமான அளவில் அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டன. வட இந்திய மக்களும், அயல்நாட்டவர்களான சீனர்களும், உரோமானியர்களும், அழகன்குளத்துக்கு வருகை புரிந்துள்ளதையே இது காட்டுகிறது. அழகன்குளம் மக்கள் பன்னாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகிறது.

17. இலை வடிவ முத்திரை பதித்த மட்கலன்கள் (Leaf Motif Potsherds)

இவை தட்டையான மட்கலன்கள். தட்டுகள், குவளைகள் போன்றவற்றின் உட்பகுதியில் இலை போன்ற வடிவத்தை முத்திரையாகப் பதிக்கப்பட்ட பல மட்கலன்கள் கிடைத்துள்ளன. இம்மட்கலன்கள் கருப்பு நிறத்தில் அமைந்துள்ளன. நன்கு சுத்தம் செய்த களிமண் கொண்டு தயாரிக்கப்பட்டு, தேவையான அளவில் சுடப்பட்டு இம்மட்கலன்கள் செய்யப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அழகாகக் காணப்படுகின்றன.

தொல்பொருட்கள்   

இங்கு கிடைக்கப்பெற்ற பிற தொல்பொருட்களில், அரிய கல் மணிகள், சுடுமண் மணிகள், முழுமை பெறாத கல் மணிகள், சங்கு வளையல்கள், சங்குகள் எனப் பல பொருட்கள் முக்கியமானவை. அவற்றுள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

1. அரிய கல் மணிகள் (Precious Stone Beads)

பல்வேறு விதமான விலையுயர்ந்த கல் மணிகள், அழகன்குளம் அகழாய்வில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இங்கு மணிகள் தயாரிக்கும் தொழில்நுட்பமும், அவற்றை தயாரிக்கும் தொழிலும் சிறப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாக, மணிகள் தயாரிக்கும்போது ஏற்பட்ட சில்லுகள் குவியல் குவியலாக அகழ்வுக்குழி 15-ல் இருந்து சேகரிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

மேலும், மணிகள் தயாரிக்கத் தேவையான மூலக்கற்களும், முழுமை அடையாத கற்களும், முழுமை அடைந்து துளையிடப்படாத நிலையில் பல்வேறு வடிவில் இங்கு கல் மணிகள் கிடைத்துள்ளதைக் கொண்டு, அவற்றைத் தயாரிக்கும் தொழிலும் சிறப்புற நடந்துள்ளதை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

2. சுடுமண் பாவை (Terracotta Figurine)

3. சுடுமண் மணிகள் (Terracota Beads)

4. முழுமை பெறாத கல் மணிகள் (Unfinished Stone Beads)

5. சங்கு வளையல்கள் (Conch Bangle peice)

6. அறுத்த சங்குகள் (Sawed conch)

அறுத்த சங்குகள், சங்கு வளையல்கள், அலங்காரம் செய்த சங்கு வளையல்கள், சங்கினால் செய்த காதணிகள் என சங்கினால் செய்த பல பொருட்கள், அழகன்குளம் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், ஏராளமான அறுத்த சங்குகளும், சங்கு அறுத்ததனால் ஏற்பட்ட சில்லுகளும் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.

7. காதணிகள் (Ear Lobes)

8. சுடுமண் ஊது உளை (T.C. Furnece)

9. நீள்செவ்வக வடிவ கூரை ஓடுகள் (‘L’ Shapped Terracotta Roof Tiles)

10. தட்டையான சங்க கால கூரை ஓடுகள்

11. எழுத்துப் பொறித்த சங்கு / குதிரை வடிவ அச்சு

அராபி எழுத்து பொறித்த சங்கு ஒன்று, முதன்முதலாக அழகன்குளம் மேற்பரப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சங்கினால் செய்த குதிரை வடிவம் பதித்த அச்சு ஒன்றும் அகழாய்வில் சேகரிக்கப்பட்டது. இதுவும் குறிப்பிடத்தக்க சிறப்புவாய்ந்த தொல்பொருளாகும்.

12. கண்ணாடி மணிகள்

13. சொக்கட்டான் காய்கள்

14. சுடுமண் தாயக்கட்டை

15. அம்பு முனை

எலும்பாலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட கூர்முனைகளைக் கொண்ட அம்புமுனைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை நீளமாகவும், அடிப்பகுதி தட்டையாகவும், மேல்பகுதி கூர்மையாகவும் வடிவமைக்கப்பட்டவை. சிலவற்றில், அடிப்பகுதியும் மேல்பகுதியும் கூர்மையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேட்டை ஆடுதற்கும் தற்காப்புக்காகவும் இவ்வகையான அம்புமுனைகளைப் பயன்படுத்துவர். இதுபோன்ற அம்புமுனைகள், பெரும்பான்மையான சங்க கால வாழ்விட அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.

16. மான் கொம்புகள்

17. வட்டச் சில்லுகள்

18. தக்களி

19. எடைக் கற்கள்

20. இரும்புப் பொருட்கள்

21. செம்புப் பொருட்கள்

22. கப்பல் உருவம் வரைந்த ஓடு

கப்பல் உருவம் கீறப்பட்ட ரௌலட்டட் மட்கலன்

பாய்மரக் கப்பல் உருவம் கீறப்பட்ட மட்கலன் - கருப்பு சிவப்பு மட்கலன்

23. சுடுமண் புகைப்பான்கள்

24. சங்கு மணி

25. சுடுமண் கெண்டி மூக்குப் பகுதி

இங்கு பல்வேறு வகையான அளவுகளிலும் வடிவிலும் கெண்டி மூக்குப்பகுதிகள் கிடைத்துள்ளன. அவை, இப்பகுதியின் தொடர் வரலாற்றை எடுத்துக்கூற உதவுகின்றன.

*

பல வகையான தொல்பொருட்கள் அழகன்குளத்தில் கிடைத்திருக்க, தொன்மை வாய்ந்த நாணயங்களும் இங்கு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள நாணயங்களை 1. அச்சு குத்திய காசு, 2. உரோமானியர் காசுகள், 3. பாண்டியர் காசு என்று வகைப்படுத்திக் காணலாம்.

அச்சு குத்திய காசு

அழகன்குளம் அகழாய்வில், அச்சு குத்திய வெள்ளியால் ஆன காசுகள் இரண்டு சேகரிக்கப்பட்டன. ஒன்று முட்டை வடிவிலும், மற்றொன்று நீள்சதுர வடிவிலும் உள்ளன. இவற்றில், இயற்கையான பொருள்களைக் குறிப்பிடும் மலைமுகடு, சந்திரன், மரம் போன்றவை முத்திரையாக அச்சுக் குத்தப்பட்டுள்ளன.

பாண்டியர் காசு

இச்செம்புக் காசு, நீள் செவ்வக வடிவில் உள்ளது. இவற்றில், யானை நின்ற நிலையில் உள்ளது. அதன்மேல், பிறைச் சந்திரன், சக்கரம், ஆங்குசம் போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

உரோமானியர் காசு

வாலன்டைன் II அவர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயம்

அழகன்குளம் அகழாய்வில், இரண்டு ரோமானியர் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இரண்டும், வாலன்டைன் II அவர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள்.

*

இவ்வாறு, பல அரிய தொல்பொருட்களை அழகன்குளம் அகழாய்வு நமக்கு அளித்துள்ளது. தொல் பொருட்களின் அடிப்படையில் காணும்போது, இவ்வூர் சங்க காலத்துக்கும் முன்னர் இருந்தே ஒரு தனிச் சிறப்புபெற்ற, நன்கு வளர்ச்சிபெற்ற பெருவணிக நகரமாகத் திகழ்ந்துள்ளது என்பது புலனாகிறது.

அயல் நாட்டினர் பலரும் வணிகம் செய்த ஒரு ஊராகத் திகழ்ந்துள்ளது. சீன தேசத்துப் பானை ஓடுகளும், உரோமானியப் பானை ஓடுகளும் இதற்குச் சான்றாக உள்ளன. குறிப்பாக, இங்கு காணப்பட்ட சிவப்பு நிற ரௌலட்டட் மட்கலன்கள் அனைவரையும் கவர்ந்தன எனலாம். மேலும், ரௌலட்டட் மட்கலன் ஓடுகளில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றாகும். இதன் அடிப்படையில், உரோமானியர்கள் இஙகேயே தங்கி பல காலம் தொடர் வணிகம் புரிந்துள்ளனர் என்பதும் அறியமுடிகிறது.

இங்கு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தொல்பொருட்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. முற்கால பாண்டியர், பிற்கால பாண்டியர் காசுகள், சோழப் பேரரசர் முதலாம் இராசராசன் காசு, இவற்றுடன் உரோமானிய மன்னர்கள் வாலன்டைன் காசு மற்றும் அச்சு குத்திய காசுகளும் கிடைத்துள்ளன.

எனவே, ஆய்வில் கிடைத்த தொல்பொருள்கள், பல நாட்டினரும் வந்து வணிகம் புரிந்துள்ளதை தெரிவிப்பதோடு, அழகன்குளம் தயாரித்த மணிகள், சங்கு வளையல்கள், மட்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதையும் இதன்மூலம் உணரமுடிகிறது. இதுவே இவ்வகழ்வாய்வின் சிறப்பு.

காலக் கணக்கீடு

1. முதலாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ.மு. 500 – பொ.ஆ. 300

2. இரண்டாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 300 - பொ.ஆ. 100

3. மூன்றாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 100 – பொ.ஆ. 500

4. நான்காவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 500 - பொ.ஆ. 1200

இங்கு மேற்கொள்ளப்பட்ட கரிமம்-14 பரிசோதனையின் முடிவின்படியும், இங்கு காணப்பட்ட பானை ஓடுகளின் அடிப்படையிலும், சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையிலும் காலக் கணிப்பு மேற் கொள்ளப்பட்டது.

எனவே, அழகன்குளம் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக சோழர்கள் காலம் வரை அங்கு தொடர்ந்து வாழ்க்கை முறை இருந்துள்ளது. பின்னர், தற்காலம் வரை சிறப்புப் பெற்றது என்பதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் வாயிலாகக் அறியமுடிகிறது.

அகழாய்வின் நிறைவான செய்திகள்

அழகன்குளம், தேர்ந்த மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறையாகவும், சங்குகளை அறுத்து அதில் பல கலைப்பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாகவும் திகழ்ந்துள்ளது. அதேபோல பலவகை மட்கலன்களும் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கலைப்பொருட்கள் தயாரிக்கும் மையமாகவும் அழகன்குளம் செயல்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மட்கலன்களும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. இந்த வகையில், அழகன்குளம் மட்கலன்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன.

இங்கு கிடைத்துள்ள முத்திரை பதித்த மட்கலன்கள், அளவில் சிறியவையாக இருப்பினும், மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டவை. மேலும், பாய்விரிப்பு மட்கலன் ஓடுகள், இலைவிரிப்பு அலங்காரம் கொண்ட மட்கலன்கள், துளையிட்ட மட்கலன்கள் என பல்வேறுவிதமான மட்கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, ஆழகன்குளம், பல்லாற்றானும் சிறப்புபெற்ற ஒரு பெருவணிக நகரம் என்பதை இத்தொல்லியல் தடயங்களைக் கொண்டு தெளியலாம்.

இறுதியாக, தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் பாண்டியர்கள் விளைவித்த முத்துகளைப் பெற்று பெரும் வணிகத்தொடர்பை ஏற்படுத்தியது உரோமானியர்கள்தான் என்பதையும், அவர்கள் அழகன்குளத்தின் வழியாகத் தமிழகத்துக்குள் நுழைந்து வணிகம் புரிந்துள்ளனர் என்பதையும் இவ்வகழாய்வு தெளிவுபடுத்துவதுடன், தமிழகத்தின் அழகிய வளர்ச்சி அடைந்த கிழக்குக் கடற்கரைத் துறைமுகப்பட்டணமாக அழகன்குளம் திகழ்ந்துள்ளது என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT