புதையுண்ட தமிழகம்

வரலாற்றுக் காலம் - 11. பொருந்தலும் சேந்தமங்கலமும்

இரண்டு வரிவடிவங்களின் சான்றுகள் கிடைப்பதைக் கொண்டு தமிழின் தொன்மையை உணரமுடிகிறது. இவ்வாறு கிடைக்கும் வரிவடிவங்களை மிகவும் கவனத்துடன் ஆய்வு மேற்கொள்வது காலக்கணப்புக்கு அவசியமாகிறது. தமிழக அகழாய்வுகளில்தான் கீறல் குறியீடுகளும், அதனைத்தொடர்ந்து உருவங்களும், பின்னர் உருவங்களும் எழுத்துகளும் இணைந்தவை என ஒன்றை அடுத்த ஒன்றாகக் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும், தமிழியின் வரிவடிவ வளர்ச்சியைக் காட்டும் சான்றுகளாகும்.

ச. செல்வராஜ்

பொருந்தல்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர், முனைவர் கா. ராஜன் அவர்களால், 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வு இது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பொருந்தலாற்றின் இடது கரையில் பொருந்தல் எனும் ஊர் அமைந்துள்ளது.

பொருந்தல், சங்க காலப் பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையில் இருந்து சேர நாட்டின் தலைநகரான வஞ்சிக்குச் செல்லும் வழியில் அமைந்திருப்பதாலும், சங்கப் புலவர் ஒருவர் வாழ்ந்த இடமாகவும் இருப்பதால், இவ்வூருக்குத் தனிச்சிறப்பு கிடைத்துள்ளது.

“வைகாவி நாட்டுப் பொருந்தல்“ என அழைக்கப்படுவதால், வேளாவிக்கோ பெரும்பேகன் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக இருத்தல் வேண்டும் என்கின்றனர் அகழ்வாய்வாளர்கள்*1. கொற்றவை உறையும் இடமான சின்னக்கலையமுத்தூரும், வணிகக் குழுவான ஐநூற்றுவர் கல்வெட்டுகள் கிடைத்த ஊர்களான தாமரைக்குளமும், ராஜராஜபுரமும் அருகாமையில் அமைந்திருப்பதும் இவ்வூருக்குச் சிறப்பு சேர்க்கும் ஒன்று.

இவ்வாறு, பல்லாற்றானும் சிறப்புமிக்கதும் பொருந்தலாற்றின் கரையில் அமைந்திருப்பதும், நதிக்கரைகளில்தான் நாகரிகங்கள் தோன்றி மலர்ந்தன என்பதற்குச் சான்று பகர்வனபோல அமைந்ததுவே இப்பொருந்தல் ஊராகும். அங்கு அகழாய்வு செய்யப்பட்டதும்,  வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் சான்றுகளும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த பெரும்பேறாகும்.

அகழ்வுக்குழியின் தோற்றம்

சுடுமண் ஊதுஉலைக்குழல்

அகழாய்வு

பொருந்தலுக்குச் சற்று அருகாமையில் காணப்படும் பாசிமேடு பகுதியில் கள ஆய்வின்போது பல அரிய கல்அணிகள், கண்ணாடி மணிகள் சேகரிக்கப்பட்டன. இப்பகுதியில், பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள் பலவும் காணப்பட்டன. இவற்றை அடிப்படைத் தரவுகளாகக் கொண்டு, 5.5 ஹெக்டேர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொண்டு, அதன் முழுமையான வரலாற்றை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டது.

அகழாய்வில் கண்ணாடி, பாசிகள், மெருகு ஏற்றம் செய்யப் பயன்படும் உலைக்களம், சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை நிறப் பாசிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், ஏராளமான சுடுமண் மணிகளும் மண் குவளைகளும் கிடைத்துள்ளன*2. இப்பகுதி, கண்ணாடி மணிகள் செய்யும் தொழிற்கூடமாக இருக்கலாம் என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடி மணிகள் - பாசிமணிகள்

சுடுமண் மணி

சுடுமண் காதணிகள்

சங்க காலத்தைச் சார்ந்த செங்கல் கட்டடப் பகுதி ஒன்றும் இந்த அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. செங்கற்களின் அளவுகள் முறையே 42 செ.மீ. X 21 செ.மீ. X 7 செ.மீ. மற்றும் 48 செ.மீ. X 24 செ.மீ. X 8 செ.மீ. இவை 1:3:6 என்ற அமைப்பில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செங்கற்கள் கொற்கை, பூம்புகார், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கரூர் போன்ற சங்க கால வாழ்விட அகழாய்வு கட்டடப் பகுதிகளில் கிடைத்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது.

சுடுமண் பொம்மைகள்

சுடுமண் ஆட்டுக்கிடா - Ram

சங்க காலச் செப்புக்காசு, சுடுமண் பொம்மை, தந்தத்தால் ஆன தாயக்கட்டை, எடைக் கற்கள், காதணிகள், மோதிரங்கள் போன்றவையும் இந்த அகழாய்வில் கிடைத்த பிற தொல்பொருட்கள் ஆகும். சின்னகாந்திபுரத்தில் அமைந்த பெருங் கற்படைச் சின்னமான கல்பதுக்கையில் மேற்கொண்ட அகழாய்வில், கார்னீலியன் மணிகள், மாவுக்கல் மணிகள். படிகக்கல் மணிகள், பளிங்குக்கல் மணிகள் என 7500 மணிகள் கிடைத்துள்ளன*3.

கார்னீலியன் மணிகள்

மட்பாண்டங்கள்

இங்கு கருப்பு-சிவப்பு, சிவப்பு, பளபளப்பான கருப்பு நிற மட்பாண்டங்கள், நான்கு கால்களுடைய மண்சாடிகள், தட்டுகள் மற்றும் தாங்கிகள் போன்றவை கிடைத்துள்ளன.

நான்கு கால் சாடிகள்

கருப்பு-சிவப்பு, சிவப்பு, நிற மட்பாண்டங்கள்

நான்கு கால் சாடி ஒன்றில் இருந்து நெல் கிடைத்துள்ளது. இங்கு சேகரிக்கப்பட்ட மட்கலப் பிரிமனையில், ‘வயர’ என்ற தமிழி எழுத்து காணப்பட்டது. இதன் காலத்தை பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர். இது, தமிழக அகழாய்வுகளில் குறியீடும், தமிழி எழுத்துகளும் இணைந்து கிடைத்த தொல்லியல் தடயம் என்ற சிறப்பைப் பெறுகிறது. மட்கலன்களில் குறியீடுகளும், கத்தி மற்றும் அம்பு முனை போன்றவையும் இங்கு கிடைத்துள்ளன*4.

இதற்கு முன்னர், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நடத்திய அழகன்குளம் அகழாய்விலும் மயிலின் உருவமும் தமிழி எழுத்துக் கீறல்களும் ஒருங்கே மட்கலன்களில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அகழ்வுகளில் உருவப்பொறிப்பும், எழுத்துப்பொறிப்பும் முதன்முதலில் காணப்பட்டது அழகன் குளம் அகழாய்வில்தான் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

இதுபோன்று இரண்டு வரிவடிவங்களின் சான்றுகள் கிடைப்பதைக் கொண்டு தமிழின் தொன்மையை உணரமுடிகிறது. இவ்வாறு கிடைக்கும் வரிவடிவங்களை மிகவும் கவனத்துடன் ஆய்வு மேற்கொள்வது காலக்கணப்புக்கு அவசியமாகிறது. தமிழக அகழாய்வுகளில்தான் கீறல் குறியீடுகளும், அதனைத்தொடர்ந்து உருவங்களும், பின்னர் உருவங்களும் எழுத்துகளும் இணைந்தவை என ஒன்றை அடுத்த ஒன்றாகக் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும், தமிழியின் வரிவடிவ வளர்ச்சியைக் காட்டும் சான்றுகளாகும்.

இவ்விடம், சங்க காலக் குறுநில மன்னன் வாழ்ந்த பகுதியாகவும், வணிக வளம் நிரம்பிய பகுதியாகவும் விளங்கியதை, சங்க கால இலக்கியங்கள் மற்றும் இப்பகுதியின் கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்திகளைக் கொண்டு உறுதி செய்துகொள்ள முடிகிறது. இச்செய்திகளை ஒப்புநோக்கும்போது, பெருங் கற்காலத்துக்கு அடுத்து, வரலாற்றுக் காலத்தின் துவக்க காலமாக பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு முதல் ஒரு சிறப்பான, நாகரிகமான, தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாகவும், வணிக மையமாகவும் இப்பகுதி திகழ்ந்து, பின்னர் வரலாற்றுக் காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வந்துள்ளதை இவ்வகழ்வாய்வு தெளிவுபடுத்துகின்றது.

இவ்வகழாய்வு குறித்து பலமுறை இதற்கு முன் வெளியிடப்பட்ட புதையுண்ட தமிழகம் தொடரின் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டதால், அதனை மீண்டும் கவனத்தில் கொள்க. இங்கு கிடைத்த நெல்மணிகளை ஆய்வு செய்ததன் வாயிலாகக் கிடைத்த காலக்கணிப்பின்படி, இப்பகுதி பொ.ஆ.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செழிப்புற்று இருந்துள்ளது என்றும், தமிழியின் (எழுத்து வரிவடித்தின்) காலத்தையும் அதனுடன் இணைத்துப் பார்க்கலாம் என்ற தனது கருத்தையும் அகழாய்வாளர் முனைவர் கா. ராஜன் அவர்கள் தக்க சான்றுகளுடன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

சேந்தமங்கலம்

அமைவிடம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஒரு சிறிய கிராமம்தான் சேந்தமங்கலம். உளுந்தூர்பேட்டை வட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் கெடிலம் நதிக்கரையில் அமைந்திருப்பது சேந்தமங்கலத்துக்கு ஒரு தனிச்சிறப்பாகும்.

வரலாற்றில் சேந்தமங்கலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் மக்கள் இங்கு தொடர்ந்து வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. காடவ மன்னன், சேந்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். சகலபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீமணவாளப் பெருமாள், சேந்தமங்கலத்தை உருவாக்கி அங்கு ஆட்சியும் புரிந்துள்ளான். இவனைப் பற்றிய கல்வெட்டுகளில், அழகிய பல்லவன் என்கிற மணவாளப் பெருமாள் என்றும், கூடல் ஆழப்பிறந்தான் என்றும் தெரிவிக்கிறது. இக்கூடல் என்பது புறமலைநாடு எனும் தகடூர் நாட்டின் பகுதியே ஆகும் எனக் கருதப்படுகிறது.

இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில், அரண்மனைகளையும், கோட்டைகளையும் காடவர்கள் கட்டியுள்ளனர். அதற்குரிய சான்றுகளாக, மாளிகைவேலி என்ற இடத்தில் இன்றைக்கும் மதில் சுவர்களும், இடிபாடுகளுடன் கூடிய கட்டடப் பகுதிகளும், உடைந்த செங்கல் துண்டுகளும் மேற்பரப்பில் காணப்படுகின்றன.

இங்கு அமைந்த கோயில் வரலாற்றுச் சிறப்பு பெற்றது. வானிலை கண்டீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. காடவ மன்னர்களில் மிகவும் சிறப்பு பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன். இவன், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள தெற்கு கோபுரத்தைக் கட்டிய பெருமைக்குரியவன். சேந்தமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவாலயத்தை அமைத்தவனும் இவனே. இச்சிவாலயத்தை வானிலை கண்டீஸ்வரம் என்றும், தற்போது அதனை ஆபத்சகாயீஸ்வரம் எனவும் அழைக்கின்றனர். இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் அகழாய்வு மேற்கொண்டால், பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என்பதால், சேந்தமங்கலம் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகழாய்வுகள்

சேந்தமங்கலத்தில், இரண்டு காலகட்டங்களில் 14 அகழ்வுக்குழிகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாளிகைமேடு, சூளைமேடு (குயவன்மேடு), கோட்டைமேடு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகழாய்வுச் செய்திகள்

அகழ்வில் இரண்டு கட்டடப் பகுதிகளின் சுவர்கள் வெளிப்படுத்தப்பட்டது. ஒன்றின் தடிப்பு 2.70 மீட்டர். மற்றொன்றின் தடிப்பு 1.45 மீட்டர் ஆகும். இரண்டும், தெற்கு வடக்காகச் செல்கின்றன. இரண்டுக்கும் இடைவெளி 1.45 மீட்டர். 13 மீட்டர் நீளம் வரை சுவற்றின் பகுதிகள் நீண்டுகொண்டே சென்றது. இங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அளவுகள், முறையே 23 X 13 X 4 செ.மீ. மற்றும் 20 X 13 X 3 செ.மீ. சுவற்றின் முனைப்பகுதிகளில் செம்பராங் கற்களை வைத்துக் கட்டியுள்ளனர். அதன் அளவு முறைகள், முறையே 43 X 50 X 30 செ.மீ. ஆகும். சுவற்றின் நடுவே செம்புராங் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட வட்டமான கிணறு ஒன்றும் வெளிப்படுத்தப்பட்டது.

கட்டடங்களின் கட்டுமானத்தை நோக்கும்போது, கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனைப் பகுதியில் கட்டப்பட்டது போலவே இரட்டைச் சுவர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. செம்புராங் கற்களை அடியில் வைத்து அதன்மேல் செங்கற்களை வைத்து அடுக்கி கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான கட்டட முறை சுவற்றுக்கு வலிமையையும், நீண்ட காலத்தையும் வழங்கக்கூடியது என்பதை இக்கட்டடத்தை எழுப்பிய கலைஞன் அறிந்திருந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.

மட்கலன்கள்

இந்த அகழாய்வில் கருப்பு-சிவப்பு, கருப்பு, சிவப்பு நிற மட்கலன்கள், ரௌலட்டட், செம்பழுப்பு பூச்சு கொண்ட மட்கலன்கள், சாம்பல் நிற மட்கலன் என வரலாற்றின் தொடக்க காலத்தைச் சார்ந்த மட்கலன்கள் கிடைத்துள்ளன. ரோமானியர் தொடர்பும் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருட்கள்

இரும்புப் பொருட்கள், சுடுமண் குழாய்கள், கூரை ஓடுகள், விளக்குகள் எனப் பல்வேறுவிதமான தொல்பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டன. பாண்டியர் இலச்சினை, மான்கொம்புகள், தாயக்கட்டை போன்றவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சுடுமண் பாவைகள் - சேந்தமங்கலம்

இங்கு கிடைக்கப்பெற்ற சுடுமண் பாவைகள் மற்றும் சுடுமண் பொருட்களை ஒப்புநோக்கும்போது, பொ.ஆ. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டுகளில் சுடுமண் கலை இங்கு மிகவும் சிறப்புற்று இருந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

அகழாய்வுச் செய்தி

இந்த அகழாய்வின் மூலம் சேந்தமங்கலம், பெருங் கற்காலம் தொடங்கி பொது ஆண்டு 14-ம் நூற்றாண்டு வரை மிகவும் செழிப்பாகவும், அயல்நாட்டினரோடும் நெருங்கிய வணிகத் தொடர்பும் கொண்டிருந்தது என்பது புலனாகிறது.

மேற்கோள் எண் விளக்கம்

  1. கா. ராஜன், பொருந்தல் அகழாய்வுச் செய்திக் குறிப்பு ஆவணம், இதழ் 23, 2009. பக். 109.

  2. மேலது பக்.110

  3. மேலது பக்.110

  4. மேலது பக்.111

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT