காதலர் தினம்

காதலின் தீபம் ஏற்றிய காரிகை - சிலையாகத் திருக்கோவிலில்

கோ. ஜெயலெட்சுமி

உலகில் உயிர்கள் தோன்றிய நாளிலிருந்தே உண்டானது இந்த காதல் உணர்வு. ஓரறிவு படைத்த உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை விடவில்லை. பார்த்தவுடன் தோன்றும் காதல், நீண்ட நாள் பழகியபின் ஏற்படும் காதல், ஒருவரையொருவர் காணாமலேயே ஏற்படும் காதல், ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டு எழும் காதல் போன்றவைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

காதல் என்பது தெய்வத்தையும் விடவில்லை. ஆண்டாள் அரங்கனை நேசித்த காதல், உமையம்மை சிவனை நேசித்தது, ராமன், சீதை ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் ஏற்பட்ட காதல், ராதை கிருஷ்ணன் காதல், காதலை மட்டும் சொல்லக் கூடியது. அது அவ்வாறே தொடர்ந்து நள தமயந்தி, அம்பிகாபதி அமராவதி கூறும் அரசர் வழித் தோன்றலாகவும் ஏற்பட்டது. அதில் மராட்டிய அரசரை நேசித்து அவரையே கணவனாக அடைய வேண்டி லட்ச தீபங்களை ஏற்றுகிறேன் என்று வேண்டிக்கொண்டு தன் காதல் நிறைவேறியதும் இலட்ச தீபங்களை ஏற்றியவர் நங்கை அம்மணி அம்மாள்.

தஞ்சை மராட்டியர்களின் வழியில் வந்த அரசர் அமரசிம்மன் தஞ்சை அரண்மனையில் இருந்து ஆட்சி செய்து வந்தபோது (கி.பி. 1787–1798) அமரசிம்மனைக் கிழக்கிந்தியக் கம்பெனியர் நீக்கினர். அவருடைய இடத்தில் சரபோசி என்பவரை தஞ்சை அரசராக அமர்த்தினர்.

அரசுக் கட்டிலை இழந்த அமரசிம்மன் திருவிடைமருதூர் அரண்மனை சென்று தங்கியிருந்து அப்பகுதிக்குத் தலைவராக இருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இவருடைய மகன்தான் பிரதாபசிம்மன்.

பிரதாபசிம்மன் அங்கு வளரும்போதே அவருடைய தாய்மாமன் மகள் அம்முனு அம்மணி என்பவள் பிரதாப சிம்மன் மீது காதல் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய வேண்டித் தன் மனதின் எண்ணம் நிறைவேற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியிடம் இலட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள். அம்மணியின் காதலும் நிறைவேறியது. மனதின் எண்ணம் போலவே பிரதாபசிம்மனும் அம்முனு அம்மணியை மனைவியாகக் கைப்பிடித்தார். இதனால் மனது மகிழ்ந்த அம்மணி தேவி தனது வேண்டுதலை மகாலிங்க சுவாமி சன்னதியில் நிறைவேற்ற ஆரம்பித்தாள்.

லட்ச தீபங்கள் கோயிலெங்கும் ஏற்றப்பட்டன. தீப ஔியில் ஆலயம் ஜெகஜோதியாகக் காணப்பட்டது. அவற்றுள் ஒரு விளக்காக தனது உருவத்தையே பாவை விளக்காக வடிக்கச் செய்தாள். பித்தளையால் ஆன சிலை இரு கைகளிலும் ஒரு அகல் தீபத்தை ஏந்திய வண்ணம் இன்றும் காட்சியளிக்கிறது.

திருவிடைமருதூர் கோயிலில் இப்போது சென்றாலும் மகாலிங்க சுவாமி சன்னதியின் எதிரே உள்ள மண்டபத்தில் நான்கு அடி உயரத்தில் இப்பாவை விளக்கானது அழகிய பீடத்தின் மேலே வடிக்கப்பட்டுள்ளது. அழகிய உருவத்துடனும் பட்டாடைகள் உடுத்திய நிலையிலும், கழுத்தில் அழகிய ஆபரணங்களும் காதுகளில் அழகிய தோடுகளும், தோளினைத் தொற்றியவண்ணம் உள்ள கிளியும் விரல்களில் மோதிரங்களும், சடை அலங்காரமும் பார்க்கும்போதே கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது.

இந்த பித்தளைச் சிலையைச் செய்த சிற்பியின் பெயர் கன்னார அரிய புத்திரபத்தர் என்பவர் ஆவார். இதனை இச்சிலையின் பீடத்தில் பொறித்துள்ள தமிழ் எழுத்துகள் மூலம் அறிய முடிகிறது. சிறப்பு மிகுந்த இந்த அம்மணி பாவை விளக்கின் பீடத்தில் இவரது காதல் காவியம் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பெற்றுள்ளது.

பொறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சாலிவாகன சகாப்தம் 1775  பிரமாதிச வருசம் ஆனி மாதம் 22ம் தேதி சோமவாரம் மத்யாற்ஜுனம் ஸ்ரீ மகாலிங்க சுவாமி சன்னிதானத்தில் (ஸ்ரீ) பிறதாபசிம்ம மகாராஜா அவர்களுடைய அம்மான் பொன் ஒருத்தருக்கொருத்தர் வரிக்கப்பட்ட பாரியை ஆகிய அம்முனு அம்மணி அவர்கள் லட்சதீபம் உத்தியாபணம் பன்னினத்துக்காக தன்னுடைய சுவரூபமாகிய தீபம் பிறதிமா. ஸ்தாபன தர்மத்தை நிரந்தரமாயி நடப்பிவித்துக்கொண்டு வருகிறவர்கள் சிவதரும பலத்தை அடைவார்கள் நிருத்து கண்ட சேர் 411¾ வார்ப்பு வேலை கன்னார அரியபுத்ர பத்தர் என்று எழுதப்பட்டுள்ளது.

இவரது காலம் 4.1.1853 ஆகும். ஒரு அரசருடைய மனைவியே தனது காதல் நிறைவேறியதற்காகத் திருவிடைமருதூர் கோயிலில் தீபம் ஏந்திய பாவை விளக்காக நிற்பது வரலாற்றில் இதுவே முதலாவதும் சிறப்பானதுமாகவும் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT