காதல் சின்னம் 
காதலர் தினம்

செவ்வியல் காதல்

காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது என்றாலும் மனித உயிர்களுக்கு..

கோ. ஜெயலெட்சுமி

உயிர்க்கோளம் என்று சொல்லும் இந்த புவிப்பந்தில் பிறந்த அனைத்து வகையான உயிர்களுக்கும் மனிதன் உட்பட பலவிதமான உணர்ச்சிகள் உண்டு. மகிழ்ச்சி, கோபம், வருத்தம், துன்பம், வலி, பிரிவு, காதல்போன்றவைகளைக் கூறலாம்,

காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது என்றாலும் மனித உயிருக்கு இன்னும் சற்று சிறப்புதான். காதல் என்ற சொல்லிற்கு அவ்வளவு ஆற்றல், மகத்துவம் உள்ளது. கடின இதயத்தைக்கூட மென்மையான இதயமாக மாற்றிவிடும் வல்லமை உண்டு.அதேபோல கோழைகளையும் வீரராக்கும் வல்லமை உண்டு.

காதல் உணர்ச்சிக்கு கடவுளர்களும் விதி விலக்கல்ல என்பதை உமை யவள் தவம் செய்து சிவபெருமானை அடைந்ததையும், வள்ளி,முருகன் காதலையும், ஆண்டாள், திருமால் காதலையும் இன்னும் பலவற்றையும் காணாலாம் இது தெய்வக் காதல் ஆகிறது.

அம்பிகாபதி- அமராவதி, நள- தமயந்தி, லைலா- மஜ்னு, ஷாஜஹான்- மும்தாஜ்மகால், கிளியோபாட்ரா போன்ற இலக்கிய காதலும் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.

சங்க இலக்கியங்களில் காதல் உணர்வு அதன் வெளிப்பாடுகள் தலைவன் தலைவி பற்றிய செயல்பாடுகள் ஆரம்பம் முதல் இறுதிவரை கூறப்பட்டுள்ளது.

கண்களைக் கண்களால் விழுங்கி

மனத்தினால் மனத்தினைக் கவர்ந்து

உணர்வுகளை உணர்வுகளால் நேசித்து

பேசாமல் பேசிப் பேசி நெருங்கி

கைவிரல்களால் விரல்களை ஸ்பரிசித்து

காதலெனும் காதலுக்குள் மூழ்கி

மணமான திருமணத்தை செய்து

பேரின்ப பெருங்கடலை அடைவதே வாழ்க்கை

காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்வு நடத்தினாலும் பெரியோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் இருமனமும் கலந்து வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்பது எதுவென்பதை

சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்

பிணைமா னினிதுண்ண வேண்டிக் கலை மாத் தன்

கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர்

காதல ருள்ளம் படர்ந்த நெறி

என்ற ஒரு சிறுபாடல் வரிகள் மூலம் ஐந்தினை ஐம்பது கூறுகின்றது. தாகத்தால் தவித்த ஆண்மானும் பெண்மானும் ஒரு சுனையில் சிறிதளவே நீர் இருந்த போதும் பெண்மான் நீரை அருந்தட்டும் என்று தான் நீரைபருகாமல் அருந்துவது போல பாசாங்கு செய்தது. அதே உணர்வோடு பெண்மானும் செய்யவே சுனையில் நீர் அப்படியே இருந்தது. தங்களின் காதல் வெளிப்பாடாக அந்த ஐந்தறிவு பெற்ற மான்கள் உணர்த்தியதை கணவனும் மனைவியுமாக எவ்வாறு விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்கிற படிப்பினையை இக்காலத்திலும் ஏற்படுத்துகிறது.

அதேபோன்று காதலில் பிரிவு பற்றி

காமம் தாங்குமதி என்போர் தாமஃது

அறியலர் கொல்லோ அனைமதுகையர்

என்ற குறுந்தொகைப் பாடலானது தலைவனைப் பிரிந்து தலைவியானவள் வருந்தும் நிலை அவளே கூறுவது போல காதல் உணர்வை மனதினுள்ளே வைத்து அதன் வலியை தாங்கிக் கொள் என்கிறார்கள் அவர்கள் காதல் பிரிவின் வலி பற்றி அறியாதவர்களா, நானே என் தலைவனைக் காணாமல் துன்பமான நெஞ்சத்துடன் இருக்கிறேன், எப்படி ஓடுகின்ற நீரில் உண்டாகும் வெண்மையான நுரையானது ஓடையின் நடுவே உள்ள பெரிய பெரிய கற்களில் மோதி மோதி உடைந்து உடைந்து மெல்ல மெல்ல மறைந்து போகின்றதோ அதுபோல என் உயிரும் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரிவினால் சென்றுவிடுமோ என்று கூறுகிறாள். இது தலைவியின் உயிர் பிரியும் அளவிற்கு இந்த காதலுக்கு வலிமை உள்ளது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

தலைவனைக் காணாமல் ஏங்கித் தவித்த தலைவியின் முகம் இரண்டு நாள்கள் கழித்து அவளைக் கண்டவர்கள் இதென்ன இரண்டு நாள்கள் முன்பாக சோபையிழந்து காணப்பட்ட முகம் இன்று

தேற்றாங் கொட்டை இட்டு தெளிந்த நீர் போல பொலிவுடன் காணப்படுகிறதே என்று வியந்து கூறியதாகக் கலித்தொகைப் பாடல் ஒன்று கூறுகிறது. அதுபோன்று மற்றொரு பாடல் “ காதல் மன்ற அவனை வரக்கண் டாங்கு ஆழ்துயர மெலாம் மறந்தனள்” என்ற வரிகளின் மூலம் காதலன் வந்ததும் புதுப் பொலிவு அடைந்த காதலியைப் பற்றி நல்லந்துவனார் கூறுகிறார்.

தற்காலத்தில் மட்டுமே நாம் காதலர் தினத்தைக் கொண்டாட வில்லை . இலக்கிய காலத்திலிருந்தே காதலுக்கு இறைவனாக தலைவனாக ரதி மன்மதன் போற்றப்படுகிறார்கள். அவர்களை போற்றி துதிக்கும் நாளாக பங்குனி முயக்கம் என்ற பேரில்

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்

வெம்கண் நெடு வேள் வில்விழா காணும்

பங்குனி முயக்கத்து பனிஅரசு யாண்டு உளன்

சிலப்பதிகாரத்தின் பாடல் வரிகள் கூறுகின்றது. இதன் வாயிலாக மக்கள் காதலர் தினத்தினை கொண்டாடி உள்ளார்கள் என்று அறியமுடிகிறது.

கட்டுரையாளர் : பட்டதாரி ஆசிரியர், சக்கராப்பள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT