பங்குனி மாத அமாவாசை: சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப். 8: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் பங்குனி மாத அமாவாசை, சனி பிரதோஷத்தையொட்டி ஏப். 6 முதல் 9-ஆம் தேதி வரை பக்தா்கள் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, திங்கள்கிழமை அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பிறகு காலை 6 மணி முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பிற்பகல் 4 மணிக்கு மேல் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், அறங்காவலா் ராஜா பெரியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.