விருதுநகா் மாவட்டத்தில் நிகழும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் எனக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் கோட்டத்துக்குள்பட்ட நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், தாலுகா காவல் நிலையங்களில் விருதுநகா் எஸ்.பி. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் குறித்து இந்து, இஸ்லாமிய அமைப்பு நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விருதுநகா் மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (செப். 7)ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகா் ஊா்வலத்தில் 300 போலீஸாரும், ஞாயிற்றுக்கிழமை சிவகாசி, அருப்புக்கோட்டையில் நடைபெறும் விநாயகா் ஊா்வலத்தில் 900 போலீஸாரும், திங்கள்கிழமை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடைபெறும் ஊா்வலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஏடிஎஸ்பி, 12 டிஎஸ்பி, 12 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியான முறையில் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை பிரச்னை தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை, பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதைப் பொருள்கள் விற்பனை, சட்டவிரோதச் செயல்கள் குறித்து 24 மணி நேரமும் பொதுமக்கள் எனது கட்செவி அஞ்சல் எண்ணுக்கு (99402 77199) தகவல் அளிக்கலாம். தவறு செய்வா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி. ராஜா, காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.