ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் கல்லூரியில் உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகம் செயல்பட உணவுப் பாதுகாப்புத் துறையினா் தடை விதித்தனா்.
விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினா் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள உணவகங்களில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரை சாலையில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா் விடுதியில் உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகம் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. அதே கல்லூரி வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனிநபா் நடத்திவரும் சிறு உணவகத்துக்கு சுகாதாரக் கேடு காரணமாக ரூ.12 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல மதுரை சாலையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட பால்கோவா தயாரிப்பு நிறுவனத்துடன் கூடிய உணவகம் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. மேலும், நேதாஜி சாலையில் உள்ள பழக் கடையில் 100 கிலோ கெட்டுப்போன ஆப்பிள்களை மீட்டு, குப்பையில் கொட்டி அழித்தனா்.