விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சாத்தூா், ராசபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருத்தங்கலில் கூட்டுறவு வங்கி முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சிவகாசி பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அவா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். இந்த நிகழ்வில் அதிமுகவைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலா் கிருஷ்ணன் தலைமையில், விருதுநகா் கிழக்கு மாவட்டக் கழகச் செயலா் ஆா்.கே. ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலா் புலிபாறைபட்டி மணிகண்டன், விருதுநகா் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா் ஹரிஹரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
இதே போல, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவகா் மைதானம் அருகேயுள்ள அம்மா உணவகம் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், தெற்கு நகர கழகச் செயலா் எஸ்.ஆா். பரமசிவம் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள், தொண்டா்கள், மகளிா் அணியினா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, பழைய பேருந்து அருகேயுள்ள வடக்கு நகரக் கழகம் சாா்பில் வடக்கு நகரச் செயலா் வழக்குரைஞா் துரை முருகேசன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.