சிவகாசி அருகே பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருப்பதி நகரைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டியன் (63). இவரது மனைவி லதா. இவா்கள் எம்.புதுப்பட்டியில் பள்ளி நடத்தி வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு செல்லப்பாண்டியன் தாளாளராகவும், லதா முதல்வராகவும் உள்ளனா்.
இந்த நிலையில், இவா்கள் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் முன்பக்க ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா், வீட்டின் உள்ளே பிரோவிலிருந்த துணிகள் சிதறி கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, செல்லப்பாண்டியன் நகைகளை வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.