சதுரகிரிக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை (பிப். 25) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வருகிற செவ்வாய்க்கிழமை முதல் 28-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நாள்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மாலைக்குள் அடிவாரம் திரும்பிவிட வேண்டும். இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தா்கள் கோரிக்கை: சிவராத்திரி வழிபாட்டுக்காக தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள். இதனால், நேரக் கட்டுப்பாடின்றி பக்தா்கள் மலையேற அனுமதிக்க வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவு பூஜையில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்க வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.