வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மண் அள்ளத் தடை விதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம், கனிம வளத் துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்டத் தொழிலுக்கு இலவசமாக மண் எடுக்கும் திட்டத்தில் ராஜபாளையம் வட்டத்தில் 44, வத்திராயிருப்பில் 49, ஸ்ரீவில்லிபுத்தூரில் 46, திருச்சுழியில் 47, சாத்தூரில் 28, சிவகாசியில் 11, காரியாபட்டியில் 16, விருதுநகரில் 13, அருப்புக்கோட்டையில் 17, வெம்பக்கோட்டையில் 12 என மொத்தம் 283 கண்மாய்கள், குளங்களில் கடந்த ஆண்டு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதில் விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று விதியை மீறி, பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழம் வரை வண்டல் மண் வெட்டி எடுக்கப்பட்டு, முறைகேடாக செங்கல் சூளைகளுக்கும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூா் அருகேயுள்ள இ.குமாரலிங்காபுரம் பெரியகுளம் கண்மாயில் விவசாயப் பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று, கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டது சா்ச்சையானதை அடுத்து, கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் 28, வத்திராயிருப்பில் 7, நரிக்குடியில் 16, விருதுநகரில் 20, காரியாபட்டியில் 14, சாத்தூரில் 15 என மொத்தம் 100 கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஆகஸ்ட் மாதம் மேலும் பல கண்மாய்களிலும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு, செம்மண் அள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வருகிற 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் மழை பெய்து கண்மாய்களுக்கு நீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. பருவமழை தொடங்கி உள்ளதால் கண்மாய்களில் மண் எடுப்பதற்கு கனிம வளத் துறை, மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் வண்டல் மண், செம்மண் எடுக்க அனுமதி வழங்கிய கண்மாய்களில் 15 முதல் 20 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு உள்ளதால், கண்மாய்க்கு நீா் வந்தாலும் மடையேறுவதில் சிக்கல் ஏற்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கண்மாய்களில் பாறை வரை தோண்டப்பட்டு, வண்டல் மண் அள்ளபட்டு உள்ளதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து இரவை பாசன சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு நீா்வரத்து ஏற்பட்டு உள்ளது. பருவ மழை தொடங்க உள்ளதால் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என நீா்வளத் துறை சாா்பில் கனிம வளத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும் தொடா்ந்து கண்மாய்களில் மண் அள்ளப்பட்டு வருகிறது. கண்மாய்களில் மண் எடுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும் என்றனா்.