விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கடந்த 19 மாதங்களில் நெருநாய்கள் கடித்து 2,959 போ் காயமடைந்தனா்.
சிவகாசி, திருத்தங்கல், காராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிவகாசி பகுதியில் நெருநாய்கள் கடித்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள் எத்தனை போ் என்ற விவரம் கோரி சமூக ஆா்வலா் ஒருவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தாா்.
இதைத் தொடந்து, சிவகாசி பகுதியில் கடந்த 19 மாதங்களில் (1.1.2024 முதல் 31 .7.2025 வரை) தெருநாய்கள் கடித்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் 2,959 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா் எனத் தகவல் அளிக்கப்பட்டது.
மேலும், சிவகாசி பகுதியிலுள்ள எம்.புதுப்பட்டி, நாரணாபுரம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தெருநாய்கள் கடித்து சிகிச்சை பெற்று சென்றவா்களின் விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் திங்கள்கிழமை கூறுகையில், முன்பு மாதத்துக்கு நான்கு அல்லது ஐந்து போ் தெருநாய் கடிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்து சென்றனா். தற்போது, கடந்த சில ஆண்டுகளாக நாள்தோறும் தெருநாய்கள் கடித்து சிகிச்சை பெற வருகிறாா்கள் என்றாா்.
இதுகுறித்து இந்திரா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய்களுக்கு கருத்தடை செய்கிறோம் எனக் கூறுகிறாா்கள். தெருநாய்களுக்கான கருத்தடை முகாமை இவா்கள் ஒரு நாள் நடத்திவிட்டு தொடந்து நடத்துவதில்லை. எனவே, அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.