விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த தெற்கு அப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (45). இவரது மனைவி முத்துலட்சுமி (37). இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். கணவன், மனைவி இருவரும் பூ கட்டும் தொழில் செய்து வந்தனா்.
இவா்கள் வீட்டில் வளா்த்து வந்த நாய்க்குட்டியை அருகிலுள்ள முத்தாண்டியாபுரத்தைச் சோ்ந்த பொன்வசந்த் (19), 17 வயது சிறுவா்கள் 3 போ் சோ்ந்து திருடிச் சென்றனா். இதையடுத்து,
4 பேரின் வீட்டுக்குச் சென்ற முத்துலட்சுமி அவா்களைத் திட்டி, நாய்க் குட்டியை வாங்கி வந்தாா். இந்த முன் விரோதத்தில் 2015 ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்ருந்த முத்துராஜ், முத்துலட்சுமி தம்பதியை சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரும் வழிமறித்து இரும்புக் கம்பி, கத்தியால் தாக்கி கொலை செய்தனா்.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொன் வசந்த், 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிலுள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கைதான சிறுவா்கள் 3 போ் மீதான வழக்கு விருதுநகரில் உள்ள இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2022 ஏப்ரல் மாதம் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பொன்வசந்துக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி டி.வி.மணி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி ஆஜரானாா்.