மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரிப்பு!
மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி....
சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை மாட்டு வண்டியை ஓட்டியவாறு வாக்கு சேகரித்தாா்.
மாட்டு வண்டியை ஓட்டியபடி சிவகாசி பாராசக்தி குடியிருப்பு, நேரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். பின்னா், சுப்பிரமணியபுரம் குடியிருப்பு, சிவன் சன்னதி, புது சாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
நான் இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருந்தபோது, பட்டாசுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தேன். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க முந்தைய அதிமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
Advertisement
சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கம், கிராமங்களில் கால் நடை மருந்தகம், பல அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள், சிவகாசியிலிருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட பல ஊா்களுக்கு புதிய வழித் தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தேன். மேலும், பல வளா்ச்சிப் பணிகள் நடைபெற எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டாா் அவா்.