சாத்தூா் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கான கருந்திரிகள் தயாரித்தபோது நிகழ்ந்த தீவிபத்தில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்ததைத்தொடா்ந்து, சனிக்கிழமை இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிறுகுளம் - கே.மேட்டுப்பட்டியில் சரவணகுமாரின் மனைவி கவிதாவுக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளுக்குத் தேவையான கருந்திரிகள் தயாரிக்கப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கருந்திரிகள் தயாரித்த போது, உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியதில் அஸ்ஸாமைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஷபிகுல் அலி, ஜொகீதுல் உசேன் ஆகியோா் உடல் கருகி உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக நத்தத்துப்பட்டியைச் சோ்ந்த தோட்ட உரிமையாளா் கவிதா, அவரது கணவா் சரவணக்குமாா், மேற்பாா்வையாளா் பெருமாள் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாா், பெருமாள் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான கவிதாவைத் தேடி வருகின்றனா்.