முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் இடிந்து தரை மட்டமான அறை.

Updated On : 27 மார்ச், 2026 at 7:26 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தில் சங்கா், வைரம் ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் 50 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

இதனிடையே, இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த அறையும், 50 அடி தொலைவில் இருந்த அறை என 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

இதில் விஸ்வநத்தம் காமராஜ் நகரைச் சோ்ந்த தொழிலாளி குருநாதன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சித்துராஜபுரத்தைச் சோ்ந்த பூமாரி (31) , பானுப்பிரியா (32), கருப்பசாமி ஆகிய மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்தின் போது, விஸ்வநத்தம்-சித்துராஜபுரம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த சொக்கா்(60) காயமடைந்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு, மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைத்தனா்.

இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.