உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் செல்வேன் என போப் பிரான்சிஸ் தனது காதலிக்காக இளமைக் காலத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் காதல், நிராகரிப்பில் முடிந்ததாலோ என்னவோ? கடிதத்தில் அவர் எழுதியதன்படியே அவரின் எதிர்காலமும் அமைந்துவிட்டது.
ஆர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், 2013 முதல் 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவாக பொறுப்பு வகித்தார்.
ஆர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர்கொண்ட போப் பிரான்சிஸ், 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்துக்காக சேவையாற்றத் தொடங்கினார். அவரின் தலைமையின்கீழ் கத்தோலிக்க திருச்சபை புத்துணர்ச்சி பெற்றது எனலாம்.
ஆனால், நீண்ட காலத்துக்கு முன்பே விசுவாசத்தின் மீதான அவரின் நம்பிக்கை தனிப்பட்ட விஷயத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
ஆர்ஜென்டினாவின் தலைநகரான புயூனஸ் ஐரிஸில் உள்ள மெம்பிரில்லர் சாலையில் ஆரம்ப நாள்களைக் கழித்த மரியோ பெர்கோக்லியோ, 12 வயது இருக்கும்போது அதே சாலையில் இருந்த அமலியா டாமோன்டே என்பவருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.
பல ஆண்டுகள் கழித்து ஏபி செய்தி நிறுவனத்துக்கு அமலியா டாமோன்டே அளித்த நேர்காணலில், பெர்கோக்லியோ அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ''அவர் எழுதிய கடிதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காகிதத்தில் வெண்மை நிற வீட்டை வரைந்திருந்தார். அதன் மேற்கூரை சிவப்பு நிறத்தில் இருந்தது. எதிர்காலத்தில் நம் திருமணத்துக்குப் பிறகு உனக்காக நான் வாங்கப்போகும் வீடு இது'' என அக்கடிதத்தில் எழுதியிருந்தது.
''நான் உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் சென்றுவிடுவேன்'' எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது குழந்தைத்தனமான செயல்கள்; அதற்குமேல் வேறொன்றுமில்லை என பிற்காலத்தில் அளித்த நேர்காணலில் டாமோன்டே பகிர்ந்துகொண்டார்.
அந்த வயதில் என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். அதனால் அக்கடிதம் பிற்காலத்தில் கவனிக்கப்படாமலேயே போனது எனக் குறிப்பிட்டார்.
''ஒரு பையனிடமிருந்து உனக்கு கடிதம் வருகிறதா? என ஆவேசத்துடன் பேசி என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என் தாய். அதன்பிறகு நாங்கள் இருவரும் சந்திக்காதபடி என் தாய் என்னை விலக்கியே வைத்திருந்தார்'' என டாமோன்டே நினைவுகளைப் பகிர்ந்தார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு பெர்கோக்லியோ(போப் பிரான்சிஸ்) குடும்பம் மெம்பிரில்லர் சாலையில் இருந்து விலகிச் சென்றது. மறுபுறம், அமலியா டாமோன்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு, அமலியா டாமோன்டே மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள நினைக்கவில்லை.
தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் வாடிகன் மக்களுக்காக மட்டுமின்றி உலக மக்களின் நலனையும் குறிப்பிட்டு, உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தினார், இரக்கம் மற்றும் பணிவின் உருவமாக இருந்த போப் பிரான்சிஸ்.
இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் காலமானார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.