2026ஆம் ஆண்டு பிறக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் நிதித் துறை தொடர்பான பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. எனவே, புத்தாண்டு, புது மாதம் பிறக்கும்போது, புதிய விதிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளாமல் விட்டுவிட்டால் அது நம் பாக்கெட்டை காலி செய்து விடலாம்.
இப்போதெல்லாம் எந்த பாக்கெட்டில் சார் பணமிருக்கிறது என்று கேட்பவர்களுக்கு நமது ஜிபே போன்ற ஆப்களில் இருக்கும் பணம் காலியாகிவிடலாம் என அறிந்துகொள்ளலாம்.
துரிதமாக நிகழும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் முதல் பான் - ஆதார் அப்டேட் உள்ளிட்ட பல விதிமுறைகள் இதில் அடங்கும்.
2026- ஜனவரி 1ஆம் தேதி புது காலண்டர், புது டையை மட்டும் கொடுக்கவில்லை. சில நிதிக் கொள்கைகளில் மாற்றம், வங்கி விதிகள், சமூக வலைத்தளப் பயன்பாடு, வீட்டுப் பயன்பாட்டு செலவினம் உள்ளிட்டவற்றில் மாற்றங்களையும் கொண்டு வருகிறது.
வங்கி மேற்கொண்டுள்ள மாற்றங்கள்
இதுநாள்வரை, வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் 15 நாள்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இதில் சில குளறுபடிகள் நேரிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இனி ஒவ்வொரு வாரமும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும்.
எனவே, தவணை செலுத்தாதது, தவணை தாமதமாவது போன்றவை உடனுக்குடள் சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோரில் அப்டேட் செய்யப்படும். இது ஒருவர் விண்ணப்பிக்கும் கடனில் கடன் தகுதி, கடனுக்கான வட்டி விகிதத்தில் மாறுபாடு என எதிரொலிக்கும். எனவே மக்கள் கடன் கோரி விண்ணப்பிக்கும்போது முன்பு வாங்கிய கடன் தவணைகள் தவறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
பான் - ஆதார் இணைப்பு
பான் - ஆதார் இணைப்பு பலரும் ஏற்கனவே செய்திருப்போம். செய்யாதவர்களுக்கு இன்றே கடைசி நாள். வங்கிக் கணக்குகள் மற்றும் அரசு சேவைகளைப் பெற பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ஒருவேளை தனிநபர்கள் செய்யத் தவறியிருந்தால் பான் அட்டை செல்லாததாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றத்தில் கடுமையான விதிகள்
டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் கடுமையான வங்கியின் கண்காணிப்பின்கீழ் வருகிறது. அதுபோல, சமூக வலைத்தளங்களான வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல் போன்றவற்றுக்கு சிம்கார்டு வெரிஃபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தியும் எந்த செல்போனிலும் சமூக வலைத்தளங்களை இயக்கலாம். ஆனால், இனி வாட்ஸ்ஆப் போன்றவை அந்த சிம்கார்டு இருக்கும் செல்போனில் மட்டுமே இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
இந்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களில் மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதுவரை 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலில் இருந்தன. அது 2025, டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. ஜனவரி 1 முதல் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி செலுத்துவோருக்கும் வருகிறது மாற்றம்
ஜனவரி முதல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோருக்கான படிவங்களில் புதிய மாற்றங்கள் வருகின்றன. ஏற்கனவே, பணப்பரிமாற்றங்கள் மற்றும் செலவின விவரங்கள் நிரப்பப்பட்டு இந்த படிவங்கள் கிடைக்கப்பெறும் என்பதால் தவறுகள், திருத்தங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.