போபால்: பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி ரூபாய் அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும், இதற்காக இரண்டு பேர் 58 முறை பாம்பு கடித்து இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டம் - தி ஜங்கிள் புக்கில் வரும் கா பாம்பின் நிலம் என்று அழைக்கப்படுவது - கோடிக்கணக்கான அரசுப் பணத்தை முறைகேடு செய்வதற்காக நடத்தப்பட்ட மோசடியில், ஒரு ஆண் 30 முறையும், ஒரு பெண் 29 முறை பாம்பு கடித்து 'இறந்துள்ளனர்'.
அதாவது, கிராமப் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்களில் பலியாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மாநில அரசின் திட்டத்தின் மூலம், போலியாக இழப்பீடு கோருவதற்காக, அதிகாரப்பூர்வ பதிவுகளில் பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் பாய்ந்து இறந்ததாகப் போலியாகக் கணக்குக் காட்டி சுமார் ரூ.11.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சியோனி மாவட்டத்தின் கியோலாரி தாலுகாவின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து, ஜபல்பூர் நிதித்துறை நடத்திய விரிவான விசாரணையில்தான் போலியான இறப்புகளைக் காட்டி ரூ.11.26 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல, மோசடி செய்யப்பட்ட தொகையானது 47 பேரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய நிதித் துறை இணை இயக்குநர் ரோஹித் கௌஷல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த மோசடி மற்றும் முறைகேடுக்கும் மூளையாக செயல்பட்டிருப்பது கியோலாரி தாலுகா அலுவலக உதவியாளர் சச்சின் தஹாயக் என்பதும், இவர்தான், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், பினாமிகளின் வங்கிக் கணக்கில் மோசடி செய்த பணத்தை செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணம், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படாமல், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடு 2018 - 19 முதல் 2021 - 22ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அரசின் தரவுகளில் பாம்புகடித்து, நீரில் மூழ்கி, மின்னல் பாய்ந்து பலியானவர்கள் என பதிவாகியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பல முறை இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அதிகமானோர் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது பாம்பு கடித்து பலியானதுதான் என்றும் கூறப்படுகிறது.
பாம்பு கடித்து 87 முறை இறந்த 3 பேர்
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாகவும், துவாரிகா பாய் என்ற பெண் 29 முறை பாம்பு கடித்து இறந்ததாகவும், ராம் குமார் 28 முறை இறந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பலியாவோர் குடும்பத்துக்கு நிவாரணமாக அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில், இவ்வாறு பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளின் அனைத்து பில்களையும் நிதித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில், நிவாரண உதவி என்று பில் போட்டு ரூ.11.26 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பதிவுகளில் உள்ள விவரங்களுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் இறப்புச் சான்றிதழ், உடல்கூறாய்வு அறிக்கை என எதுவும் பல முறை கேட்டும் கிடைக்கவில்லை என்று ரோஹித் கௌஷல் கூறுகிறார்.
எனவே, இந்த நிவாரணத் தொகை அனைத்தும், எவ்விதமான ஆதாரங்களையும், காவல்துறை விசாரணையும் இன்றியே கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விடுவிக்கும் நிவாரணத் தொகை ஒரு அரசு ஊழியர் உள்பட 47 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட கியோலாரி தாலுகா ஊழியர், ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை தகவல் அமைப்பில் (IFMIS) இருந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியைச் செயல்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக, தஹாயக் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் பணியாற்ற வந்த மேலும் 6 அரசு ஊழியர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிவப்புக் கொடி காட்டப்பட்டதா?
கடந்த 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் அதிகளவில் இயற்கை சம்பவங்களால் நேரிடும் உயிர் பலிக்கு நிவாரண நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது.
மார்ச் 2025-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்டய கணக்காளர் தணிக்கை அறிக்கையின்படி, இயற்கை பேரிடர்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ.23.81 கோடி மோசடி நடந்துள்ளது - சியோனி, ஷியோபூர், செஹோர், சிவபுரி, தேவாஸ், சத்தர்பூர், காண்ட்வா, மண்ட்சௌர், ரைசன், டாமோ, சத்னா, அகர்-மால்வா மற்றும் விதிஷா என மத்திய பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்த மோசடி தொகையான ரூ.23.81 கோடியில், ரூ.21.14 கோடி தகுதியற்ற நபர்களின் வங்கிக் கணக்குகளிலும், ரூ.2.67 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.
அதில், சியோடி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.11.79 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், அடுத்து ஷியோபூரில் ரூ.3.36 கோடியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 291 போலி நிவாரண நிதி ஒதுக்கீடு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.