கோப்புப்படம் ANI
இணையம் ஸ்பெஷல்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

பங்குச்சந்தை முதலீடு மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரில்தான் தற்போது அதிகளவில் அதிக மதிப்பிலான மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர்கள், வெளிநாட்டில் வேலை செய்து பணம் ஈட்டியவர்கள், வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சேமித்து வைத்திருந்த முதியவர்கள் பலரும் பங்குச்சந்தை முதலீட்டில்தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர்.

உதாரணமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், வர்த்தக முதலீடு என்று நம்பி ரூ. 4 கோடி இழந்துள்ளார்.

2024 ஏப்ரல் மாதம் தெலங்கானா மாநிலம் மணிகொண்டா பகுதியைச் சேர்ந்த 43 வயது ஐடி ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். பின்னர் ஒரு வர்த்தக நிறுவனத்தின் பெயரைக் கூறி அதன் பிரதிநிதிகள் போல பேசி ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர்.

அதையும் நம்பி ஐடி ஊழியர் தனது மொபைல் போனில் அந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

உடனடியாக அவரது வங்கிக்கணக்கில் இருந்து மோசடி கும்பல் வழங்கிய பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ. 2 கோடி பணப்பரிமாற்றம் செய்தார்.

சில நாள்களுக்குப் பிறகு அந்த பணத்தை எடுக்க அவருக்கு அனுமதி தரப்படவில்லை. சந்தேகம் ஏற்பட்டு அவர் கேட்கவே, அவரது தாயாரின் வங்கிக்கணக்கிற்கு ரூ. 87 லட்சத்தை மோசடி கும்பல் அனுப்பியது. இதனால் அவரும் சமாதானமடைந்து தொடர்ந்து முதலீடு செய்துள்ளார்.

மொத்தமாக 3 மாதங்களில்(ஏப்ரல் - ஜூன்) அவர் ரூ. 4.79 கோடி முதலீடு செய்துள்ளார். வெறும் ரூ. 87 லட்சம் மட்டுமே அவர்கள் அனுப்பியுள்ளனர். ஜூன் மாத இறுதியில் அந்த செயலி செயல்படவில்லை. அந்த நிறுவனத்தினரையும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனிடையே மோசடி கும்பலின் வங்கிக் கணக்குடன் தொடர்புள்ளதாக கூறி அவரது தாயாரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது.

ஆனால் அந்த ஐடி ஊழியர் தன்னுடைய பணம் திரும்பி கிடைக்காது என்று ஒரு ஆண்டாக புகார் கொடுக்காமலே இருந்துள்ளார். அதன்பின்னர் நண்பர்கள், உறவினர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார்.

இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 8 மாதங்களில் தான் வாழ்நாள் முழுவதும் வெளிநாட்டில் வேலை செய்து சேமித்த ரூ. 17 கோடியை பங்குச்சந்தை மோசடியில் இழந்துள்ளார். இரு மடங்கு லாபம் தருவதாகக் கூறி அவரை ஏமாற்றியுள்ளனர்.

முதலில் சுமார் ரூ 4 கோடி அளவில் முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தை எடுக்க முயன்றபோது அவரால் எடுக்க முடியவில்லை. மோசடி கும்பலும் காணாமல் போய்விட்டது. அதன்பின்னரே அது மோசடி என தெரிய வந்து அவர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் மீதமுள்ள சேமிப்புத் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு நிறுவனத்திடம் 13 கோடி அளவில் முதலீடு செய்தார். பின்னர் அதுவும் மோசடி கும்பல் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது.

இரண்டு முறை மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு ரூ. 17 கோடியை இழந்துள்ளார் அவர்.

தற்காத்துக்கொள்வது எப்படி?

முதலில் அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம், முறையாக நிறுவனம் குறித்து ஆய்வு செய்து நன்கு தெரிந்த நிதி ஆலோசகரிடம் ஆலோசனை செய்து கொஞ்சமாக கொஞ்சமாக முதலீடு செய்ய வேண்டும். நம்பத்தகுந்த லாபம் வந்தபிறகு இதர தொகையை முதலீடு செய்யலாம்.

வாட்ஸ்ஆப் லிங்க்குகளை அவசரப்பட்டு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம், இதனால் உங்கள் போன் அவர்களது கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

ஒருவேளை மோசடிக்கு ஆளானால் உடனடியாக காவல்துறை அல்லது சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிப்பது அவசியம். பணத்தை மீட்க அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். புகார் அளிக்க தயங்க வேண்டாம்.

Online trading scam: hyderabad techie lost nearly Rs 4 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

SCROLL FOR NEXT