வாட்ஸ்ஆப்பில் போலி திருமண அழைப்பிதழ்களை அனுப்பி அதன் மூலமாக பண மோசடி நடப்பது தற்போது அதிகரித்து வருவதால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் யாரும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்திப்பதில்லை. மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே போன் செய்துகொள்கிறார்கள். அந்தவகையில் இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்கள் நேரடியாக வாட்ஸ்ஆப்புக்கு அனுப்பப்பட்டே அழைப்பு விடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்கள் மூலமாக பண மோசடி நடக்கிறது.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்ஆப்பில் போலியான டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை அனுப்புகிறார்கள். அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்களது போன், மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடுகிறது. அதாவது அதன் பின்புலத்தில் உள்ள ஹேக்கிங் மென்பொருள் உங்களில் போனில் பதிவிறக்கம் ஆகிவிடுகிறது.
இப்போது உங்கள் போனில் உள்ள தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த விவரங்களைத் திருடி அதன் மூலமாகவோ அல்லது போனை அவர்களே இயக்கி வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்காக ஹேக்கிங் மென்பொருள்களை பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலும் திருமண சீசன்களில் தெரியாத எண்களிலிருந்து அழைப்பிதழ்கள் வருகின்றன. யார் அனுப்பியிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் பலரும் அதை கிளிக் செய்யும்போது அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் பரிமாற்றம் நடக்கிறது. இது அனைத்தும் உங்களுக்குத் தெரியாமலேயே நடக்கிறது. பணம் போய்விட்டது என செய்தி வந்தபிறகே பெரும்பாலும் இதை அறிகிறார்கள்.
சமீபமாகவே இந்த வகை சைபர் மோசடி அதிகரித்து வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்பிதழ்களை அல்லது லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
புதிய எண்களில் இருந்து வரும் செய்திகள் அல்லது இணைப்புகளைத் திறப்பதற்கு முன்பு யார் அனுப்பியுள்ளார்கள் என்று ஒருமுறை சரிபார்க்கவும்.
வாட்ஸ்ஆப் மூலம் போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்கள் 'மால்வேர்' மென்பொருளைக் கொண்டிருப்பதால் உங்கள் தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தரவுகளை மோசடியாளர்கள் திருட முடியும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
அறியாத எண்கள்/ அனுப்புநர்களிடமிருந்து வரும் இணைப்புகளை திறக்க வேண்டாம்.
ஒருவேளை செய்தியைத் திறந்தாலும் ஏதேனும் இணைப்புகள் இருந்தால் கவனிக்கவும். சந்தேகமான லிங்க்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
மால்வேர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் மொபைல் பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் தொலைபேசி செயலிகளை மற்றும் இயக்க முறைமையை புதுப்பிக்கவும்.
வாட்ஸ்ஆப் மட்டுமின்றி இ-மெயில், எஸ்எம்எஸ், சமூக ஊடக செயலிகள் மூலமாகவும் இதுபோன்ற போலி இணைப்புகள் வரலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.
அதேபோல அவசரமாக கிளிக் செய்ய சொல்லும் விளம்பரங்கள், ஆஃபர்கள் போன்றவற்றையும் திறப்பதைத் தவிர்க்கவும்.
வெளியிடங்களில் உள்ள வை-பை, மற்றவரின் ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஒருவேளை இந்த வகை மோசடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.