மக்கள் எப்போதும் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காவல்துறையினர் கொடுக்கும் விழிப்புணர்வு தகவல்களை அறிந்துகொண்டால்தான் மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்.
சைபர் திருட்டுகளில் முதலிடத்தில் இருப்பது தனிநபர் தகவல் திருட்டு.
அடுத்தடுத்த இடங்களில் சமூக வலைத்தள தாக்குதல், டிஜிட்டல் வங்கி மோசடி, மொபைல் செயலிகள் மூலம் திருட்டு, வைரஸ் தாக்குதல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
தனிநபர் தகவல் திருட்டு என்றால்?
தனிநபர் அடையாள திருட்டு என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை (ஒருவரின் அடையாளத்தை வரையறுக்கும்) அவர்களிடம் அனுமதி பெறாமல் தவறான முறையில் பெறும் செயல்.
இந்த தனிப்பட்ட தகவல்களில் அவர்களுடைய பெயர், தொலைபேசி எண், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், கிரெடிட்/டெபிட் கார்டு எண் போன்றவை இருக்கலாம்.
அடையாளத் திருட்டு பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். தகவல்களைத் திருடியவர்கள், தனிப்பட்ட தகவல்களையும் அடையாள ஆதாரங்களையும் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் மோசடியில் ஈடுபடலாம்.
ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் கிடைத்துவிட்டால் போதும், அவருக்கே தெரியாமல் வங்கிக் கணக்கை பயன்படுத்துவது, புதிய வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப்பரிமாற்றம் செய்வது, அவரது பெயரால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது, அவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் போல போலியாக உருவாக்கி, அவர்களது நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் பண மோசடி செய்வது என பட்டியல் நீள்கிறது.
மற்ற எதையும் விட, இந்த அடையாளத் திருட்டின் மூலம் நடக்கும் பாதிப்புகளை சரி செய்ய அதிக காலம் எடுக்கிறது என்பதே இதில் மோசமான விஷயம்.
குற்றம் நடப்பது எப்படி?
இந்த அடையாள திருட்டுகள் பெரும்பாலும் காப்பீடு நிறுவனங்கள், ஆதார் அடையாள அட்டை இணையதளம் அல்லது முக்கிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் போன்ற ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலை ஹேக்கர்கள் திருடி அதனை மோசடியாளர்களுக்கு விற்று பணம் பெறுவார்கள். இதுதான், வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசிந்தன என்று வெளியாகும் செய்தியின் பின்னணி.
சில சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே இதுபோன்று ஹேக் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் விற்பனைக்கு வெளியிடப்படுவதும் வழக்கம்.
தனிப்பட்ட நபர்களிடம் நடக்கும் திருட்டு
தனிநபர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டிருக்கும் லிங்குகள், இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களை டவுன்லோடு செய்வது, சமூக வலைத்தளங்களில் வரும் லிங்குகள் விளம்பரங்களை கிளிக் செய்வது போன்றவற்றின் மூலம் தகவல்கள் திருடப்படும்.
கணினி அல்லது செல்போன்களில் வைரஸ்களை அனுப்பி அதிலிருக்கும் தகவல்களை மோசடியாளர்களின் கணினிக்கு அனுப்புவது போன்றவையும் நடக்கின்றன. செல்போன் அல்லது கணினியில் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றாதது, பாதுகாப்புகளை செய்து வைத்திருக்காதது போன்றவையும் வழிகோலுகின்றன.
ஏடிஎம் மையங்களில், ஏடிஎம் அட்டையின் விவரங்களையும், பின் எண்ணையும் அறியும் வகையில் ஸ்கிம்மர்களை வைத்து அடையாள அட்டையின் விவரங்களைத் தெரிந்து அதே எண்ணில் போலியான அட்டைகளைத் தயாரித்து மோசடி செய்வதும் இதில் அடக்கம். இதுபோன்ற நவீன ஸ்கிம்மர்கள், ஏடிஎம்களில் யாருக்கும் தெரியாமல் பொருத்திவிட்டால், அதில் பயன்படுத்தும் அனைத்து ஏடிஎம் அட்டைகளின் விவரங்களும் மோசடியாளர்களின் செல்போனுக்கு வந்துகொண்டே இருக்கும் வகையில் எல்லாம் மோசடிகள் நடக்கின்றன.
மோசடி கால் சென்டர் ஊழியர்கள், வங்கி ஊழியர்களைப் போல பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று மோசடி செய்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.