தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்னர் திரைக்கு வருமா?
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்திருக்கும் தீர்ப்பு காரணமாக, இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் மேலும் சிக்கலாகியிருக்கின்றது!
கடந்து வந்த பாதை
கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஆனால், படம் வெளியாவதற்கு நான்கு நாள்களே இருந்த நிலையில், ஜனவரி 5 ஆம் தேதி, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியே ஜன நாயகன் திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என டிச. 22 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளனர்.
தணிக்கை வாரியம் அறிவுறுத்திய திருத்தங்கள், மாற்றங்கள் அனைத்தையும் செய்து டிச. 24 ஆம் தேதி மீண்டும் படத்தை படக் குழுவினர் சமர்ப்பித்த நிலையில், டிச. 29 ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டதாகத் தயாரிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு, படம் வெளியாவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு, தணிக்கைக் குழுவிலுள்ள ஒருவர், “படத்தில் பாதுகாப்புப் படையினரைச் சித்திரித்திருப்பது சரியாக இல்லை, மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன” என்று குற்றச்சாட்டை முன்வைத்ததால் படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்புவதாக தணிக்கை வாரியத்தின் மண்டல அலுவலகம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதால், உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, “மறுபரிசீலனையின்போது ஏற்கெனவே படத்தை பார்த்தவர்களை தவிர, வேறு நான்கு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். ஆகையால், 4 வாரம் கால அவகாசம் தேவை” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ஜன. 9 ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
ஜன. 9 ஆம் தேதி காலை தீர்ப்பு வந்த பிறகு, படத்தை அவசர அவசரமாக வெளியிடுவது சரியாக இருக்காது எனக் கருதிய படக்குழு, ஜன நாயகன் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில், தனி நீதிபதி பி.டி. ஆஷா வழங்கிய தீர்ப்பில், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதாக கூறிவிட்டு, கடைசி நேரத்தில் மறுபரிசீலனைக்கு அனுப்பும் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது, உடனடியாக யு/ஏ சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அன்று பிற்பகலே அதை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி அமர்வில், பதில் மனு தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு காலஅவகாசம் வழங்காமல் தனி நீதிபதி அவசரகதியில் தீர்ப்பு வழங்கியதாக தணிக்கை வாரியம் வாதிட்டது.
அப்போது தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன்? என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில், ஜன. 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் ஜன. 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கவுள்ளதால், உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், ஜன. 20 ஆம் தேதி ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே ஆட்சேபனை தெரிவித்த நிலையில், படத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.
இந்த நிலையில், ஜன நாயகன் விவகாரத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று, செவ்வாய்க்கிழமை, காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்போது, மத ரீதியான கருத்துகள் படத்தில் இடம்பெறுவதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்று, தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் தீர்ப்பை ரத்து செய்வதாகவும் அமர்வு அறிவித்தது.
தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து, மீண்டும் விசாரணை நடத்த தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் வெளியாகாது?
தமிழ்நாடு, கேரளம், புதுவை, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகின்ற மார்ச் முதல் மே மாத கால இடைவெளியில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிப்ரவரி இறுதியில் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதன்படி, இன்னும் ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒருவேளை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருமானால், ஏதேனும் அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் அல்லது பாதிக்கும் உள்ளடக்கத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ஒரு திரைப்படம் பிரசார நோக்கில் வாக்காளர்களை சென்றடையக் கூடும் என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்த படத்தின் திரையிடல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
அந்த வகையில், தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படமும் பிரசாரக் கருவியாகவே தேர்தல் ஆணையத்தால் கருதப்படும்.
எடுத்துக்காட்டாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதேபோல், அப்போதைய தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.
தற்போது ஜன நாயகன் தணிக்கைச் சான்று விவகாரத்தில் தணிக்கை வாரியத்துக்கு உரிய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று தனி நீதிபதிக்குத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், தணிக்கை வாரியம் கோரிய 4 வார அவகாசம் கொடுக்கப்படும் பட்சத்தில், எவ்வளவு விரைவாக விசாரணை மேற்கொண்டாலும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில்தான் தனி நீதிபதியால் தீர்ப்பு வழங்க முடியும்.
அதற்குள் நிச்சயமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
ஜன நாயகன் தணிக்கைச் சான்றுக்காக சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி டூ தலைமை நீதிபதி அமர்வு டூ உச்ச நீதிமன்றம் டூ தலைமை நீதிபதி அமர்வு டூ தனி நீதிபதி என படக் குழுவினர் (விஜய்) சுற்றிவிடப்பட்டுள்ளனர்.
ஆகையால், ஜனநாயகன் படத்துக்கான தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, தேர்தல் ஆணையம் பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட்டுவிட்டால் வாக்குப் பதிவுகள் முடிந்து, கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை ஜன நாயகன் வெளியாகாது!
ஆக, ஜன நாயகனின் எதிர்காலம் என்ன? திரைத்துறையினருடன் விஜய்யின் ரசிகர்களும் சேர்ந்து காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.