"தொட்டால் பூ மலரும்', "மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படங்களுக்குப் பிறகு ஷக்தி நடிக்கும் புதிய படம் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'. இந்தப் படத்தை எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். இவர், விஜய் நடித்த "அழகிய தமிழ்மகன்' படத்தின் கதாசிரியர். படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் படத்தைப் பற்றிக் கேட்டபோது...
""பொதுவாகப் பெண்களின் மனதைப் பூவுக்கு ஒப்பிட்டுச் சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் நாயகி பூவில் உள்ள முள் போன்றவர். தனது மனதுக்குள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த வஞ்சி தனது இதயத்தையே கோட்டையாக்கி வாழ்ந்து வருகிறார்.
அந்தக் கோட்டைக்குள் வாலிபன் ஒருவன் எப்படி நுழைகிறான் என்பதை காதல். ஆக்ஷன், காமெடி கலந்து சொல்கிறோம். பழம்பெரும் பாடலாசிரியர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகத்தின் மகன் சங்கர், இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹிந்தியின் பிரபல ஒளிப்பதிவாளர் வி.கோபிநாத் இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர, கிருத்திகா என்ற பெண்ணை முதல்
முறையாக எடிட்டராக அறிமுகம் செய்திருக்கிறோம்'' என்றார். எடிட்டிங் துறையில் முதல் வஞ்சி?
ஜெகன் தேடிய பாதை!
"புதிய கீதை', "ராமன் தேடிய சீதை', "கோடம்பாக்கம்' படங்களை இயக்கிய ஜெகன், "மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். இதையடுத்து ராசுமதுரவனின் "கோரிப்பாளையம்', நந்தா பெரியசாமியின் "மாத்தி யோசி' உள்பட நான்கு படங்களில் நடிக்கிறார். நடிகராக மாறிய ஜெகன், மாருதி மூவி மேஜிக் என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் மூலம் "ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற படத்தைத் தயாரித்து இயக்குகிறார். இதில் நிதின் சத்யா கதாநாயகனாக நடிப்பார் எனத் தெரிகிறது. தொடர்ந்து டைரக்ஷனா, நடிப்பா, தயாரிப்பா எனக் கேட்டபோது...
""முதலில் டைரக்ஷன்தான். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளேன். என்னுடைய நிறுவனத்தில் மற்ற இயக்குநர்களை வைத்தும் படங்களைத் தயாரிப்பேன். டைரக்ஷன் பணிக்கு இடையூறு இல்லாத வகையில் எனக்கு ஏற்ற நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டும் நடிப்பேன்'' என்றார் ஜெகன்.
ஆஸ்திரேலியாவில் அரிதான காட்சி!
ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய கே.ஆர்.மதிவாணன், தான் இயக்கும் முதல் படமான "அரிது அரிது' படத்தைத் தன்னுடைய குருநாதர் பாணியில் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ளார். உலகில் மத, இன, மொழி வெறியைத் தாண்டியது மனிதநேயம்தான். மனித உயிரின் மகத்துவம் பற்றி புதுமையான கோணத்தில் சொல்லுவதுதான் படத்தின் கதை.
இப்படிப்பட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகளை இன வெறி, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் மிகுந்த சிரமப்பட்டு படமாக்கியுள்ளார். படத்தின் அறிமுக நாயகன் ஹரீஸýம் நாயகி உத்தாராவும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார்கள் என்கிறது பட யூனிட். உத்தாரா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2008-ம் ஆண்டுக்கான அழகிப் போட்டியில் வென்ற தமிழ்ப் பெண். நாயகன் ஹரீஸ், பிரபல ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவன அதிபர் கலாயாணின் மகன்.
சென்டிமென்ட் சங்கரா!
"நெஞ்சைத்தொடு' படத்தை இயக்கிய ராஜ்கண்ணன் இயக்கும் புதிய படம் "சங்கரா'. இதில் "மாமதுரை' படத்தில் நடித்த வாசன்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு நாயகனை இரண்டு நாயகிகள் போட்டிபோட்டு காதலிக்கிறார்கள்.
இறுதியில் யார் யாருடன் ஜோடி சேருகிறார்கள் என்பதை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்வதுதான் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது சண்டைக் காட்சிகள் உள்பட காதல் காட்சிகளில் கூட நாயகன் வாசன் கார்த்திக்குக்கு எதிர்பாராமல் நான்கைந்து முறை அடிபட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது.
"கமல், அர்ஜுன், கார்த்திக் ஆகியோருக்கு கூட ஷூட்டிங்கில் அடிக்கடி அடிபடும். அதனால் அவர்களைப் போலவே நீங்களும் பெரிய ஹீரோ ஆகிவிடுவீர்கள்' என ஒரு சென்டிமெண்ட் ஃப்ளாஷ்பேக்கைக் கூறி வாசன் கார்த்திக்கைத் தேற்றி படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக் குழு.
பரத இசை!
செல்வராகவனின் உதவியாளர் ராஜேஷ்லிங்கம் "புகைப்படம்' படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். படத்தில் செல்வராகவனின் தாக்கம் இருக்குமா? என்பது பற்றி கேட்டபோது...
""தான் நினைக்கும் கருத்தை நேர்மையாகவும் தைரியமாகவும் படத்தில் புகுத்துபவர் செல்வராகவன். அந்த பாதிப்பு எனக்குள்ளும் இருக்கிறது. "புகைப்படம்' நண்பர்களைப் பற்றிய படம். என் வாழ்க்கையில் எல்லாமே நண்பர்களால்தான் நடந்திருக்கிறது. படிக்கும் காலம் முதல் சினிமாவுக்கு வந்தது வரை என்னுடைய வளர்ச்சி என்னுடைய நண்பர்களால்தான் சாத்தியப்பட்டது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் என்னுடைய பள்ளித் தோழன். சினிமாவில் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு தனியாகப் படம் இயக்க பெரிய போராட்டத்துக்கு நான் தயாரானபோது என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்தான்.
அதனால் என் முதல் படம் "ஃபிரண்ட்ஷிப்' பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். ஒரு கல்லூரியில் படிக்கும் ஏழு நண்பர்களின் நட்பை, பசுமையான நினைவுகளுடன் யதார்த்தமாகக் கூறியிருக்கிறேன். இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக முயற்சி செய்தேன். சில காரணங்களால் அது முடியாததால் ராமன் இல்லாத இடத்தில் பரதன் போல கங்கை அமரனை இசையமைக்க வைத்திருக்கிறோம்.
இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்குச் சவால் விடும் வகையில் மிகச் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார் கங்கை அமரன்'' என்றார் இயக்குநர் ராஜேஷ்லிங்கம்.
குத்து பாட்டுகளுள் ஒன்று!
பள்ளியில், சரியாகப் படிக்காமல் கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி வித்தியாசமான கதையம்சத்தில் "சிந்தனை செய்' என்ற படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளவர் யுவன். தெலுங்கின் பிரபல நாயகி மதுஷர்மா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்துக்காக சென்னையின் நெரிசலான பகுதிகளில், ஏராளமான பொதுமக்கள் மத்தியில் "அச்சமில்லை அச்சமில்லை...' என்ற பாடல் படமாக்கப்பட்டது. சினேகன் எழுதியுள்ள இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் தரண் பாடியுள்ளார்.
"நாக்க முக்க...', "ஓடி ஓடி விளையாடு...' பாடல்கள் பாணியில் இந்தப் பாடல், இந்த ஆண்டின் மிகப் பெரிய குத்துப் பாட்டுகளுள் ஒன்றாக அமையும் என்கிறது பட யூனிட். அதனால் படத்தை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட முயற்சி நடைபெறுகிறது.
"ஸ்டெப்' சிலிப்?
பரத்பாலா இயக்கத்தில் கமல்ஹாசன், அஸின், ஜப்பான் நடிகர் அஸôனோ தடோபு ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட "நைன்டீன்த் ஸ்டெப்' படம், தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்காக அஸின், கேரளத்துக்கு வந்து களரிச் சண்டைப் பயிற்சியெல்லாம் செய்தார். ஜப்பானில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் இயக்குநருக்கும் படத்தின் நடிகர்களுக்கும் ஏற்பட்ட "ஈகோ' பிரச்னையால் படம் கைவிடப்பட்டதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரிப்பு திருடன்!
இதுவரை சினிமாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் அடி வாங்கி ரசிகர்களைச் சிரிக்க வைத்த வடிவேலு, "வெடிகுண்டு முருகேசன்' படத்தில் மற்றவர்களை அடித்து ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறாராம்.
இயக்குநர் மூர்த்தியின் முந்தைய படமான "கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் படித்துறை பாண்டியாகக் கலக்கிய வடிவேலு, இந்தப் படத்தில் அலர்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் திருடனாகவும், காமெடி தாதாதாவாக கலகலப்பூட்டியிருக்கிறார். அப்போது சிரிப்பு போலீஸ்! இப்போது சிரிப்பு திருடன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.