யாத்ரீகன், அக்னி என்ற பெயரில் அறிவியல் கட்டுரைகள் எழுதியவரும் கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவருமான ஆர்.பாலகுமார் இயக்கும் புதிய படம் "யாதுமாகி'. சோழா பொன்னுரங்கம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுனேனாவுடன் புதுமுகம் சச்சின் நடிக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
""வீடுதான் உலகம் என இருக்கும் ஒரு பெண்ணுக்கும் உலகம்தான் வீடு என நினைக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடைபெறும் காதல்தான் கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. காதல் செய்யும்போது காதலிக்காக காதலனும் அல்லது காதலனுக்காக காதலியும் தங்களை மாற்றிக்கொள்வதுண்டு; அல்லது மாற்றிக்கொண்டது போல் நடிப்பதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் யாரும் யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. இதுவரை ஆண்களின் பார்வையில்தான் பெரும்பாலும் காதல் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. "யாதுமாகி' படத்தில் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை வித்தியாசமாகக் காட்டியிருக்கிறோம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. "யாதுமாகி' நல்ல கதையுடன் கூடிய கமர்ஷியல் படம் என்ற பெயரைப் பெறும்'' என்றார்.
ஒன்று + மூன்று!
"வேட்டையாடு விளையாடு', "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படங்களையடுத்து செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் பிரமாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் "முன்தினம் பார்த்தேனே'. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை செல்வராகவன், கெüதம் மேனன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய மகிழ் திருமேனி இயக்குகிறார். இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருந்தவரிடம் முன்தினம் பார்த்ததைப் பற்றிக் கேட்டபோது...
""இது ஒரு ரொமான்டிக் காமெடி படம். ஓர் இளைஞன் மூன்று பெண்களுக்கிடையேயான நட்பு மற்றும் காதலைப் பற்றியதுதான் கதை. காதல் ஓர் இனிய விபத்து என்பதுதான் கரு. யாரும் சொல்லாத கதை, இதுவரை வராத விஷயம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். சொல்ல விரும்பிய விஷயங்களை வித்தியாசமான கதைக் களத்தில் "ஸ்டைலிஷ்' ஆக சொல்லியிருக்கிறேன். "ஏ' சென்டர் ரசிகர்களுக்கான கதையா என சிலர் கேட்கிறார்கள். எந்த கிளாஸ் ஆடியன்ஸôக இருந்தாலும் அன்பு, பாசம், நட்பு, காதல், கோபம், சோகம் போன்ற அடிப்படை உணர்வுகள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால் இது "ஆல் கிளாஸ்' படம்தான். தமன் இசையில் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர் மகிழ் திருமேனி.
தடுக்க முடியாது!
"கஜினி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய பட நிறுவனத்தைத் தொடங்குகிறார். இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது:
ஹாலிவுட்டின் பிரபல ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார் ஃபாக்ஸ் நிறுவனமும் என்னுடைய ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தமிழில் புதிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் படங்களை நான் இயக்க மாட்டேன். திறமையான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்து ஊக்குவிப்பதுதான் நோக்கம். ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் தமிழ்ப் படங்களை இயக்குவதை நிறுத்த மாட்டேன்.
காதல் நாடகம்!
பாடலாசிரியர் தபூசங்கர் "வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்' படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தில் நடித்த ராமகிருஷ்ணன் கதாநாயகனாகவும் புதுமுகம் வெண்ணிலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். கதை பற்றி கேட்டபோது...
""காதல் கவிதைகளை எழுதிய நான் காதலைத்தான் கதைக் கருவாக எடுத்துள்ளேன். ஆனால், இது... எப்படி காதலிக்க வேண்டும் என கற்றுத் தரும் கதை. தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து வாழ்க்கையில் விரக்தியடைகிறான் நாயகன். அவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக, "உன்னை ஒருத்தி காதலித்து ஏமாற்றியது போல் நீயும் ஒருத்தியைக் காதலித்து ஏமாற்று' என்கிறான் நண்பன். ஏமாற்றும் நோக்கில் ஒருத்தியைக் காதலிக்கும் நாயகன், அவளை உண்மையிலேயே நேசிக்கத் தொடங்குகிறான். ஆனால் நாயகி திடீரென விலகுகிறாள். அதற்கான பின்னணி, காரணம் போன்றவற்றை ஜனரஞ்சகமாகக் கூறுகிறோம். சுந்தர்.சி, சுராஜ் போன்றோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதால் கமர்ஷியல் விஷயங்களையும் படத்தில் எதிர்பார்க்கலாம்'' என்றார் தபூசங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.